கடவுளே நீயும் ஐ.நா சென்ற தமிழ் அரசியல் தலைமை போலவோ!


இந்த உலகில் மனித உயிர்களை இழந்தும் எதனையும் பெறமுடியாமல்போன இனமாக நம் ஈழத் தமிழினத்தை அடையாளப்படுத்த முடியும். 

மிகப் பெரும் பேரிழப்புக்களை எம் இனம் சந்தித்தது. முப்பது ஆண்டுகால மண் மீட்புப் போராட்டத்தின் முடிவு தமிழ் மக்களுக்கு தாளமுடியாத வேதனையாயிற்று.

மண் மீட்புப் போர் என்பது வலிந்து மேற்கொள்ளப்பட்டதன்று. மாறாக தமிழினத்தை இலங்கை ஆட்சியாளர்கள் எத்துணை தூரம் நசுக்க முடியுமோ அந்த அளவுக்கு நசுக்கி அடிமைப்படுத்தியதனால் ஆத்திரமுற்ற தமிழ் இளைஞர்கள் விடுதலை ஒன்றுதான் தமிழ் மக்களுக்கான உரிமையைத் தரும் என்று முடிவு எடுத்தனர். 

அந்த முடிவானது தமிழ் தலைவர்களின் அகிம்சைவழிப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதனாலும் ஏற்பட்டது என்று சொல்வதை எவரும் மறந்துவிடக் கூடாது. 

இவ்வாறாக விடுதலைப் போராட்டத்தில் குதித்த தமிழ் இளைஞர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்று நினைத்து விடுதலைப் போராட்ட அமைப்புகளில் இணைந்து இலட்சியத்துக்காக தம் உயிரை தியாகம் செய்த அத்தனை பேரும் தியாகிகள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு  இடமில்லை.

இவ்வாறாக நடந்த மண் மீட்புப்போர் தோல்வியில் முடிந்து போனது என்பதற்கு அப்பால் எமக்கு ஏற்பட்ட மனித உயிரிழப்புகளின் துன்பம் சாதாரணமான தன்று. இறுதிப் போரில் ஓர் இனம் அழிபடும் அளவில் வதை நடந்தது என்று உலகம் ஏற்றுக் கொண்டு தமிழ் மக்களுக்கு உரிமையைக் கொடு என்று தீர்ப்பு வழங்கக்கூடிய சூழ்நிலை கைக்குக் கிட்டிய போதிலும் போருக்குப் பின்பு தமிழினத் தலைமை என்று தங்களைக் காட்டிக் கொண்டவர்கள் புலிகள் மீது கொண்ட கோபத்தை - ஆத்திரத்தை இலங்கை அரசோடு சேர்ந்து காட்டிவிட எங்களுக்கான சந்தர்ப்பங்கள் அந்த கயவர்கள் இட்டதீயில் எரிந்து நாசமாகிப் போயிற்று. 

2016இல் தீர்வு கிடைக்கும் என்று தமிழ் மக்களை நம்ப வைத்து அவர்களின் வாக்குகளைப் பெற்று இலங்கையில் ஒரு தமிழன் ஆட்சி அதிகார வரம்பில் எத்தகைய பதவியைப் பெற முடியுமோ அந்தப் பத வியைப் பெற்றுக் கொண்டு ஜெனிவாவில் வைத்து எங்கள் தலைகளில் மண்ணைக் கொட்டியவர்கள் இன்று ஜெனிவா சென்று எங்களுக்காக வக்காளத்து வாங்குவது போல நடிக்கின்றனர்.  இந்த நடிப்புகள் இன்னமும் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகிறது என்பதுதான் எங்கள் இனத்தின் பாழாய்ப் போன தலைவிதி. 

ஓர் இனம் எத்துணை இழப்புகளையும் சந்திக்கலாம். விடுதலைப் போராட்டத்தில் எத்தனை தடவையும் தோற்றுப் போகலாம். ஆனால் அந்த இனம் நம்பிக்கைத் துரோகம் செய்யும் அரசியல் தலைமையை கொண்டிருக்குமாயின் அதைவிட பெரும் கொடுமை எதுவுமாக இருக்க முடியாது.

ஈழத்தமிழினம் செய்த பாவமோ பழியோ தெரியவில்லை; விடுதலைப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர் தமிழினத்துக்குக் கிடைத்த அரசியல் தலைமை என்பது ஐந்து சதத்துக்கும் உதவாதது என்பதை சத்தியம் செய்து சொல்ல முடியும். 

பரவாயில்லை! எங்கள் காலத்தில் நாங்கள் அவலத்தையும் இழப்பையும் அழு கண்ணீரையும்தான் கண்டவர்கள். 

எங்கள் நிலைமை; எங்கள் காலம்தான் இப்படி யயன்றால், எங்கள் வருங்கால சந்ததிக்கும் இது தான் தலைவிதியோ என்று நினைக்கும்போது இதயம் கருகிப்போகிறது. 

கடவுளே! எங்கள் தொடர்பில் நீயும் ஐ.நாவுக்குச் சென்ற கொழும்புத் தலைமை அரசியல்வாதிகள் போலத் தானோ; என்னவோ! நீயாவது மனச்சாட்சிப்படி நடந்து கொள். அதுபோதும். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila