தீயதிலிருந்து தீயதும் நல்லதிலிருந்து நல்லதும்


நல்லவர்கள் ஒரு போதும் தீயது பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். அவர்களுக்கு அப்படிச் சிந்திக்கவும் தெரிவதில்லை.

இதனால் தீயவர்களிடம் நல்லவர்கள் மாட்டுப்பட்டு துன்பத்தை அனுபவிப்பர். அதேநேரம் தீயவர்களுக்கு நல்லது என்ற பக்கமே தெரியாது. யாரைக் கண்டாலும் அவர்கள் தீயவர்கள் என்பதே இத்தகையவர்களின் நினைப்பாகவிருக்கும். 

இதில் விசித்திரம் என்னவெனில், தீயவர்கள் நல்லவர்கள் போல பாசாங்கும் செய்வர். ஆனால் அவர்களின் சிந்தனை முழுவதும் தீயதை எண்ணியபடியே இருக்கும்.

இந்நிலைமை மனிதர்களுக்கு மட்டும் என்றில்லை. ஏனைய ஜீவராசிகளுக்கும் இருக்கவே செய்யும்.
மயிர்கொட்டியைக் கண்டாலே நம் உடம்பு சுணைக்கத் தொடங்கிவிடும். அந்தளவிற்கு மயிர்கொட்டி மீதான எங்கள் பார்வை. எங்கள் உடம்பில் ஒரு வெளிப்பாட்டை காட்டுகிறது.

ஆனால் மயிர்கொட்டி எந்தத் தீங்கும் மனிதர்களுக்குச் செய்வதில்லை. என்ன செய்வது? அதன் மயிர் நம் உடம்பில் பட்டால் சுணையேறி விடுகிறது. இதற்கு அந்த மயிர்கொட்டி என்ன தான் செய்ய முடியும்? 

எந்தத் தீங்கும் மயிர்கொட்டி செய்வதில்லை என்பதால், வாழ்க்கைச் சுற்றுவட்டத்தின் முதிர்நிலை வடிவம் வண்ணத்துப்பூச்சியாக மாறி விடுகிறது.

வண்ணத்துப்பூச்சி நமக்கு எத்துணை விருப்பமானது. சிறுவர்கள் வண்ணத்துப்பூச்சியைக் கண்டால் அங்கும் இங்கும் ஓடித்திரிவார்கள்.

வண்ணத்துப்பூச்சி... வண்ணத்துப்பூச்சி... பறக்குது பார்... என்ற பாடல் அனைவரும் அறிந்ததே.
அட, மயிர்கொட்டி தான் வண்ணத்துப்பூச்சி என்று யாரும் நினைப்பதில்லை. வண்ணத்துப்பூச்சி அழகானது மட்டுமல்ல, அது மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாதது.

மாறாக மகரந்தச் சேர்க்கைக்கு அதன் பறப்பு உதவுகிறது. அந்த வகையில் பார்த்தால் எந்த தீங்குமில்லாத மயிர்கொட்டியிலிருந்து உருமாறிய வண்ணத்துப்பூச்சியும் எந்தத் தீங்கும் செய்யாத பூச்சியாக வாழ்ந்து போகிறது.

இதை நாம் சொல்லும் போது தீயதிலிருந்து தீயது என்றீர்களே அதற்கு ஏதேனும் எடுத்துக் காட்டு உளதா? என்று நீங்கள் கேட்பது நமக்குக் கேட்கிறது.

ஆம்! குறவணவன் என்றொரு புழு பற்றி பலர் அறிந்திருப்பீர்கள். சிலர் அறியாமலும் இருக்கலாம். எருக்குவியல், உக்கிய குப்பை மண், தறிக்கப்பட்ட பனை மற்றும் தென்னையின் அடிப்பாகம் என்பவையே இவற்றின் வாழ்விடம்.

தொழ தொழத்த வெண்மையும் மெல்லிய சாம்பல் நிறமும் கலந்த இப்புழு மண்ணினுள் இருந்து பயிர்கள், செடிகள் என்பவற்றின் வேர்களை வெட்டி விடும். இதில் விவசாயிகள் மிகுந்த வேதனைப்படுவதுண்டு.

குறவணவன் என்றாலே விவசாயிகளுக்கு தீங்கிழைக்கும் புழு என்றாகிவிடுகிறது. இப்புழுவின் முதிர்வு கருவண்டு ஆகும்.

அதாவது குறவணவன் முற்றி அதன் முதிர்வு கருவண்டாக மாறும். இக்கருவண்டு தான் தென்னங்கன்றுகளின் குருத்தை வெட்டி நாசம் செய்வது.

ஆக, தீய குறவணவன் கீழ் வேரை வெட்ட கருவண்டு குருத்தை வெட்டுகிறது. இதைத் தான் தீயதிலிருந்து தீயது என்று குறிப்பிட்டோம்.

ஆக, தீயதிலிருந்து தீயதும்; நல்லதிலிருந்து நல்லதுமே உருவாகும். தீயதிலிருந்து நல்லதும்; நல்லதிலிருந்து தீயதும் பிறப்பதென்பது இறைவன் அருளால் ஆகுமேயன்றி வேறில்லை என்பதால் தமிழ் மக்கள் கடவுளை வேண்டுவதே இப்போது மிகவும் முக்கியமானதாகும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila