ஜெனீவாவில் கால அவகாச விவகாரம்: சித்தார்த்தன் - சட்டத்தரணி சுகாஸ் கருத்து மோதல்

ஐ.நாவில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கிய விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் மற்றும் சட்டத்தரணி சுகாஸ் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
வவுனியா வாடி வீட்டில் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தடுமாறும் தமிழ் தலைமைகளால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள் அடுத்து என்ன? என்ற தலைமையில் இடம்பெற்ற கருத்தாய்வும் கருத்துப்பகிர்வும் நிகழ்விலேயே இவ் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் உரையாற்றி முடிந்தவுடன் அவரிடம் வவுனியா பிரipகள் குழுவின் ஸ்தாபகத் தலைவர் கி.தேவராசா கேள்வி ஒன்றை எழுப்பினார்.

அதன் போது ' தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நான்கு கட்சிகள் இருக்கின்றன. ஆனால் ஒரு சிலர் மட்டுமே முடிவுகளை எடுக்கிறார்கள். அந்த முடிவுகளை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா எனக் கேட்டார்.
இதற்கு பதிலளித்த சித்ததார்த்தன், அப்படி ஏற்கவில்லை என்றார். இதன்போது குறிக்கிட்ட கி.தேவராசா அப்படி ஏற்கவில்லை என்றால் அதனை யாராவது வெளிப்படுத்தி சமூகத்தின் மத்தியில் தெரிவித்துள்ளீர்களா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சித்தார்த்தன்,
சில சந்தர்ப்பங்களில் குறிப்பாக சென்ற ஜனவரி மாதம் சுமந்திரன் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என ஒரு அறிக்கை விட்டார். பத்திரிகையாளர்கள் கேட்ட போது நான் தெளிவாக சொன்னேன் அது அவர்களுடைய அபிப்பிராயம் என்பதை.
பத்திரிகையாளர் கேட்டால் தான் சொல்ல முடியும். அது கூட்டமைப்பினுடைய முடிவு அல்ல. அது அவருடைய முடிவு. நாங்கள் 11 பேர் ஒன்று சேர்ந்து கால அவகாசம் வழங்கக் கூடாது என ஐ.நா மனிதவுரிமை பேரவைக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம்.
இதன் போது குறுக்கிட்ட ஒருவர், அப்படியாயின் வவுனியாவில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் காலஅவகாசம் வழங்க முடிவு எடுக்கப்பட்ட போது அதற்கு ஏன் இணங்கினீர்கள் எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த சித்தார்த்தன் எம்.பி, நாம் கால அவகாசம் வழங்க தீர்மானிக்கவில்லை.
ஊடகங்களில் வெளிவந்த செய்தி தவறானது. நாம் 30- 1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவே இணங்கியிருந்தோம். காலஅவகாசம் என்ற பதத்தை சேர்க்க கூடாது என அந்தக் கூட்டத்தில் நானும் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், சிவசக்தி ஆனந்தன் அவர்களும் கடுமையாக வாதிடியிருந்தோம்.
நீங்கள் கேட்கலாம் கால அவகாசம் வழங்கப்படும் என்று உங்களுக்கு தெரியாதா என ஆனால் எமக்கு தெரியும் கால அவகாசம் வழங்கப்படும் என்று.
ஆனால் கடந்த ஜனவரி மாதத்திற்கு முன்னமே காலஅவகாசம் வழங்பப்படும் என எமக்கு தெரியும். ஆனால் நாம் அவ்வாறு தெரிந்தும் காலஅவகாசம் வழங்கக் கூடாது என்றே கூறியிருந்தோம்.
இந்த அரசாங்கம் இரண்டு வருடத்திற்கு பின்னரும் செய்யாமல் விடுகின்ற தவறுக்கு நாமும் பொறுப்பாளிகளாக இருக்கக் கூடாது என்பதற்காகவே அதனை எதிர்த்தோம் என்றார்.
இதன்போது குறுக்கிட்ட சட்டத்தரணி சுகாஸ், நீங்கள் தற்போது சொன்னீர்கள் கால அவகாசம் வழங்கவில்லை. நாங்கள் ஜெனீவாவில் நிற்கும் போது பாராளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகிய இரண்டு பேரும் தவிர மற்ற அத்தனை பேரும் அந்த சுமந்திரன் ஐயாவின் மந்திர உரைக்கு பிறகு
வவுனியாவில் வைத்து கால அவகாசம் வழங்க கையொப்பம் இட்டு அனுப்பியதை அங்கு நின்ற சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளால் எமக்கு சொல்லப்பட்டது.
நான் சில இராஜதந்திரிகளை சந்தித்த போது மக்களால் தெரிவு செய்யப்பட்ட 12 பேரின் சம்மதத்துடன் இந்த அறிக்கை வந்திருக்கு. மக்களால் தெரிவு செய்யப்படாத நீங்கள் வந்து ஏன் கால அவகாசம் வழங்கக் கூடாது எனக் கேட்கிறீர்கள் எனக் கேட்டனர்.
நான் அங்கு நின்ற போது அனந்தி, சிவாஜிலிங்கம் ஆகியோர் அரசியல் ரீதியாகவும் கஜேந்திரகுமார் நாங்கள் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் கொஞ்சப் பேரும் இணைந்து கால அவகாசம் வழங்கக் கூடாது எனக் கேட்டோம். இது தான் உண்மை. நீங்கள் சிறந்த பேச்சாளராக இருக்கிறீர்கள்.
ஆனால் நீங்கள் கால அவகாசம் வழங்கினீர்கள். அது தான் உண்மை. நாங்கள் சாட்சியங்களாகவுள்ளோம். நீங்கள் கால அவகாசம் வழங்கி கையொப்பம் வைத்தனீர்கள்.
நீங்கள் இன்று வந்து ஒன்று சொல்கிறீர்கள். ஜெனீவாவுக்கு ஒன்று சொல்கிறீர்கள். சம்பந்தன் ஐயாவுக்கும், சுமந்திரன் ஐயாவுக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை என்றார்.
இதற்கு பதில் அளித்த சித்தார்த்தன் எம்.பி, என்னைப் பொறுத்தவரை கால அவகாசத்திற்கு நிச்சயமாக நான் கையெழுத்து வைக்கவில்லை.
இதன்போது குறுக்கிட்ட வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இன்றைக்கு தங்களை தாங்களே தலைமைகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இனப்படுகொலை என்பதை தடுப்பதற்கு எழுத்து மூலமாகவும் முயற்சித்து தோற்கடிக்கப்பட்டார்கள்.
ஆகவே வவுனியாவில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் ஒரு தீர்மானம் எடுகப்பட்டது. 30- 1 ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டது.
அதில் கால அவகாசம் பற்றி குறிப்பிடவில்லை. அத்துடன் அதில் சில நிபந்தனைகளும் போடப்பட்டே தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதனை சிவசக்தி ஆனந்தன் தனது கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தார். அதன்பின் இரு பத்திரிகையாளர் சந்திப்பு அங்கு நடைபெற்றது. அப்போது நாம் பார்வையாளராக நின்றோம்.
நான் பிரதிநித்துவப்படும் ரெலோ கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிறிகாந்தா, இந்த தீர்மானம் மூலம் மறைமுகமாக காலஅவகாசத்தை வழங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
எங்களை பொறுத்தவரை நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும். சித்தார்தன் கூறும் கருத்துடன் நான் உடன்படுகின்றேன். சிங்கள தேசம் எம்மை ஏமாற்றும் வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டுமா?.
அதன் பின் போராடவும் தயாங்க மாட்டோம். இவர்கள் அரைகுறை அரசியல் தீர்வை ஏற்பார்களாக இருந்தால் நாங்கள் மக்களுடன் வீதியில் இறங்குவோம் என்றார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila