ஜனாதிபதியின் சந்திப்பு நெடுந்துயரை தீர்க்கட்டும்


காணாமல்போனவர்களின் உறவினர்களைச் சந்திப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என்ற செய்தி மனதுக்கு ஆறுதலைத் தருகிறது.

யுத்தம் ஏற்படுத்திய பேரிழப்புக்களை அனுபவித்து வருகின்ற தமிழ் மக்கள் அதிலிருந்து மெல்ல மெல்ல மீள எத்தனிக்க முயற்சி செய்தாலும் காணாமல்போனவர் என்ற விவகாரம் அவர்களின் உறவினர்களை உலுப்பி வருகிறது.

காணாமல்போன தன் பிள்ளைக்காக தவம் இருக்கும் தாய்; காணாமல்போன குடும்பத் தலைவனுக்காகக் காத்திருக்கும் குடும்பம் என் றொரு துன்பப் பட்டியல் மிக நீண்டதாக உள்ளது.

இதற்கு அப்பால் காணாமல்போன தன் பிள்ளையை படையினருடன் கண்டதான தகவல்கள்,
ஜனாதிபதியின் பிரசாரக் கூட்டத்தில் நின்றதான செய்திகள் என அனைத்தும் காணாமல் போனவர்களின் உறவினர்களை வாட்டி வதைக்கிறது.

காணாமல்போன எங்கள் பிள்ளைகள் தொடர்பில் ஒரு முடிவே கிடையாதா? என்ற ஏக்கத்துடன்  காணாமல்போன உறவினர்கள் மேற்கொண்டிருக்கும் தொடர் போராட்டம் நூறு நாட்களைக் கடந்து செல்கிறது.

இந்நிலையில் காணாமல்போனவர்களின் உறவினர்களை மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்தில் சந்திக்க உள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் தொடர் போராட்டம் நடத்தி வரும் எமது உறவுகளுக்கு சற்றேனும் ஆறுதலைக் கொடுக்கும் எனலாம். 

பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர், அவர்களின் குடும்பத்தினர் தமது துயருக்கு முடிவு கட்டும் வகையில் அன்னாகாரம் இன்றி தங்கள் அத்தனை வேலைகளையும் புறந்தள்ளி தொடர் போராட்டம் நடத்தி வரும் போது,

அதுபற்றி ஏன்? என்று கேட்கவில்லையாயின் அதுவே மிகப்பெரும் துன்பமாகமாறும்.

அந்த வகையில் இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்; காணாமல் போனவர்களின் உறவினர்களை இன்று யாழ்ப்பாணத்தில் சந்திப்பது ஒரு முக்கியமான நிகழ்வு.

அதேவேளை இந்தச் சந்திப்பில் தங்கள் பிள்ளைகளை நினைந்துருகும் பெற்றோரின் கண்ணீருக்கு முடிவு கட்ட வேண்டும். 

முன்னைய ஆட்சிக்காலத்தில் நடந்த சந்திப்புப் போல அமையாது இந்தச் சந்திப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைவது கட்டாயமானதாகும்.

காணாமல்போனவர்களின் உறவுகள் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்து திரியும் போது ஆட்சியாளர்கள் சிலரும் பேரினவாத அரசியல்வாதிகளும் கூறிய கருத்துக்கள் மனிதநேய மற்றவை.

அவர்கள் கூறிய கருத்துக்கள் பாதிக்கப்பட்ட வர்களின் இதயங்களை கருகச் செய்தன.

காணாமல்போனவர்கள் வெளிநாடு சென்றிருக்கலாம் அல்லது அவர்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்ற அறிவிப்புக்கள் எரிகின்ற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதாகவே இருந்தன.

காணாமல்போனவர்கள் இறந்து விட்டனர் என்றால் அவர்களின் உடல்கள் எங்கே? கொன்றது யார்?

பாதுகாப்பார் என்று நினைத்து ஒப்படைத்தோமே பாதுகாக்க வேண்டியவர்களே கொன்றுவிட்டனர் என்றால் அவர்களுக்கான தண்டனை என்ன? என்ற கேள்விகள் எல்லாம் எழுமல்லவா?

ஆகவே ஒரு நல்ல முடிவை ஜனாதிபதி தர வேண்டும். இந்த முடிவு கண்ணீரும் கம்பலையுமாக அலையும் எங்கள் உறவுகளின் துன்பத்துக்கு முடிவு கட்டுவதாக இருக்கட்டும்.   
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila