சமூகம் சீரழிந்தால் அழிவுகள்தான் மிஞ்சும்


புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஏழு பேருக்கு நேற்றைய தினம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது மரண தண்டனை பெற்றவர்களும் அவர்களின் உறவினர்களும் நீதிமன்றில் கதறி அழுதனர்.

இந்த அழுகை உலக மக்களுக்கு ஒரு பெரும் செய்தியைச் சொல்கிறது.

ஆம், தனி மனிதர்கள் தங்களை நெறிப்படுத்தி வாழுகின்ற அறத்தைப் பின்பற்றாவிட்டால், தனி மனிதர்களை மக்கள் சமூகம் திருத்த முற்படாவிட்டால், மக்கள் சமூகத்தில் போதைவஸ்து, ஆபாசப் படங்கள், சமூக விரோத செயல்கள் மலிந்து போனால் இந்த மண்ணில் வாழும் அனைவரும் கவலை கொள்வதும் கண்ணீர் விடுவதுமே முடிவாக இருக்கும்.

மாணவி வித்தியாவைக் கொலை செய்ததால் வாழவேண்டிய அந்த மாணவி அழிக்கப்பட்டார். அதனால் அவரின் குடும்பம் கண்ணீ ரும் கம்பலையுமாக வாழ்கிறது.

அந்த மிகப்பெரும் அக்கிரமத்தைச் செய்தவர்கள் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் மரண தண்டனை பெற்றுள்ளனர்.

இவர்களின் மரண தண்டனை அவர் களின் குடும்பங்களை நிச்சயம் பரிதவிக்க வைக்கும்.

ஆக, கூடாத கூட்டம், சமூகச் சீரழிவில் ஈடுபடுவோரின் உறவு, பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காத மிருகத்தனம் என எல்லாமும் சேர்ந்து தந்தது என்ன? என்பதை இந்த நாடும் இந்த உலகமும் மக்கள் சமூகமும் சிந்திக்க வேண்டும்.

இந்தச் சிந்தனை ஏற்படுமாக இருந்தால், தம் பிள்ளைகள் மீது பெற்றோர் கண்ணும் கருத்துமாக இருப்பதும் பாடசாலைகள் உள் ளிட்ட சமூகக் கட்டமைப்புகள் அன்பு, அறம், அகிம்சை, கொல்லாமை, கள்ளு
ண்ணாமை உள்ளிட்ட அத்தனை அறக்கருத்துக்களையும் போதித்து தனிமனிதர்களைப் பக்குவப் படுத்துவதிலும் கூடிய கரிசனை கொள்ள வேண்டும். 

இதேவேளை சமூகச் சீரழிவுகளை அடியோடு கட்டுப்படுத்துவதில் சமூக நிறுவனங்கள் மிக உச்சமாகச் செயற்படுதல், போதைவஸ்து உள்ளிட்ட சமூகச் சீர்கேடுகளைக் கட்டுப்படுத்து வதில் பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட அரச அமைப்புக்கள் பொறுப்புடன் செயலாற்றுதல் என்பனவும் வலிமை பெறும்போதுதான் ஒட்டு மொத்த மக்கள் சமூகத்தில் குற்றச் செயல்கள் நலிந்து போகும். 

இதுவே மக்கள் சமூகம் கண்ணியத்துடன் வாழ்வதற்கு உதவும்.  

போருக்குப் பின்பாக எங்கள் மண்ணில் ஏற்பட்டுவரும் சமூகச் சீரழிவுகளை அடியோடு வேரறுத்து எங்கள் எதிர்காலச் சந்ததியைக் காப்பாற்ற பொருத்தமான திட்டங்கள் உருவாக் கப்பட வேண்டும்.

குறிப்பாக குற்றம் செய்தால் அதன் பின் விளைவுகள் எவ்வாறாக இருக்கும் என்பதை தெளிவாக அறிய வைத்து எங்கள் சமூகத்தை நல்வழிப்படுத்துவது கட்டாயமானதாகும். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila