வடமராட்சியை அதிர வைக்கும் தாரா குறூப்!

policeயாழ்.குடாநாட்டினில் வலிகாமம் பகுதியினில் அடையாளப்படுத்தப்பட்ட ஆவா குறூப்பினை தொடர்ந்து வடமராட்சிப்பகுதியினில் தாரா குறூப் பிரபல்யமடையத்தொடங்கியுள்ளது.
வடமராட்சிப்பகுதியினில் நடந்தேறிய பல பாரிய கொள்ளைகள் மற்றும் செயின் பறிப்புக்களுடன் இவ்வணிக்கு தொடர்புகளிருப்பது விசாரணைகளினில் கண்டறியப்பட்டுள்ளது.
பருத்தித்துறை கொட்டடி மற்றும் வளலாய் அன்ரனிபுரம் ஆகிய பகுதிகளை மையமாக வைத்து இந்த கும்பல் செயற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதிலும் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை,நெல்லியடி பொலிஸ் பிரிவுகளினில் நடைபெற்ற பல கொள்ளைகள் மற்றும் செயின் பறிப்புக்களுடன் இவ்வணிக்கு நேரடி தொடர்புகளிருப்பது விசாரணைகளினில் கண்டறியப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக இக்கும்பல் கொள்ளைகள் மற்றும் செயின் பறிப்புக்களில் ஈடுபட்டு வந்துள்ளது.எனினும் அண்மையினில் உடுப்பிட்டிப்பகுதியினில் இடம்பெற்ற பாரிய கொள்ளை சம்பவமொன்றையடுத்தே காவல்துறை இக்குழுவை அடையாளம் கண்டிருந்தது.
அதனையடுத்து சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் றொசான் பெர்னான்டோவின் பணிப்பின் பேரினில் நடைபெற்ற விசாரணைகளினில் புதிய தொழில்நுட்பத்துடன் தொலைபேசி பரிவர்த்தனைகளின் அடிப்படையினில் இக்குழுவை சேர்ந்த அஜந்தன் என்றழைக்கப்படும் திபூசியஸ் தாசியஸ்(வயது 20) கைதாகியுள்ளார்.
இக்கொள்ளைகள் தொடர்பினில் விசாரணைகளை மேற்கொள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இக்குழுவின் விசாரணைகளின் போதே நீண்ட காலமாக செயற்பட்டுவந்த தாரா குழு எனும் கொள்ளை கும்பல் அகப்பட்டுள்ளது.
உடுப்பிட்டியினில் வயோதிப குடும்பமொன்றின் வீட்டினுள் இரவு புகுந்த இக்கும்பல் அவர்களை ஆயுத முனையினில் இருத்திவிட்டு சுமார் ஒன்றரை மணிநேரம் தரிந்திருந்து கொள்ளையிட்டதுடன் அங்கு தேனீர் தயாரித்து அருந்தி சென்றிருந்தமை அம்பலமாகியுள்ளது.
இதனிடையே விசாரணைகளின் போது இக்கும்பல் அதிவலுக்கொண்ட வெளியிணைப்புக்கொண்ட படகுகள் மூலம் இந்திய மற்றும் வடமராட்சி கிழக்கு கடலினுள் சென்று ஏனைய மீனவர்களது புதிய மீன்பிடி வலைகளை அறுத்து களவினில் ஈடுபட்டதுடன் மண்டைதீவு முதல் பல பகுதிகளிலும் குறைந்த விலையினில் அவற்றினை விற்பனை செய்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.கடல் கொள்ளைகளிற்கு பொறுப்பாக விமல் என்றழைக்கப்படும் திபூசியஸ் கன்பூசியஸ்(34 வயது) அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
இத்திருட்டை கண்டறிந்து தகவல் வழங்கிய மீனவர் ஒருவரை கொலை செய்யும் நோக்கினில் வெட்டிப்படுகாயப்படுத்தியமை தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் விசாரணைகள் நடந்துவருகின்றது.
இதனிடையே தமது கொள்ளை நடவடிக்கைகளிற்கும் திருடப்பட்ட வலைகளை விற்பனை செய்யவும் தொண்டமனாறு,வளலாய் பகுதிகளை சேர்ந்த முச்சக்கரவண்டிகள் சிலவற்றினை கூடிய கட்டணம் வழங்கி நிரந்தரமாகப்பயன்படுத்தி வந்தமையும் விசாரணைகளினில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே கொள்ளை சம்பவத்துடன் தொடர்புபட்ட இக்கும்பலின் முக்கிய சந்தேக நபரான அஜந்தன் கைதாகி தற்போது சிறையினில் வைக்கப்பட்டுள்ள நிலையினில் அண்மையினில் பருத்தித்துறை நீதிமன்றினில் நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பினில் இவர் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இக்கும்பலின் ஏனையவர்களும் கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக கடலில் தொடரும் வலை திருட்டுக்கள் தொடர்பில் மீனவ அமைப்புக்களது முறைப்பாடுகளையடுத்து இக்குழுவினரை வலைத்திருட்டுக்கள் தொடர்பிலும் விசாரணைக்குட்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.
இதனிடையே பருத்தித்துறை பகுதியினில் முன்னதாக நடைபெற்ற சில கொள்ளைகளின் போது அரங்கேற்றப்பட்ட கொலைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படாதுள்ள நிலையினில் இக்குழு மீது சந்தேகம் திரும்பியுள்ளது.அவை தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பருத்தித்துறை பகுதியினில் வயோதிப குடும்பங்கள் மட்டுமிருந்த வீடுகள் கொள்ளையிடப்பட்ட அதேவேளை குறித்த வயோதிபர்கள் அகோரமாக கொல்லப்பட்டு பின்னர் எரியூட்டப்பட்ட பல சம்பவங்கள் நடந்திருந்தது தெரிந்ததே.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila