கூட்டமைப்பின் பின்னடைவை ஏற்றுக்கொள்கிறோம் – ஸ்ரீகாந்தா

“தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இத் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்” என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.image_93ef8c7d05
இதேவேளை, “வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு வழங்க வேண்டும். அது தொடர்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து சில சாதகமான கருத்துக்களும் வந்துள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
யாழிலுள்ள தனியார் விடுதியில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்,
“தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இத் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம். எமது பின்னடைவுக்கு சில காரணங்கள் உள்ளன. யாழ்.மாநகர சபை, நல்லூர் பிரதேச சபையில் மதவாத கருத்துகள் பரப்பப்பட்டன. அதனை சுயேட்சைக் குழுக்கள் சில செய்தன.
இறுதி 10 நாட்களில் தான் எமது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருந்தோம். இதுவும் எமது பின்னடைவுக்கு காரணம். ஆனாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில சபைகளை தவிர பெரும்பாலான சபைகளின் நாங்கள் முன்னிலை வகிக்கின்றோம்.
எதுவாக இருந்தாலும் எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையிலே அனைத்து சபைகளின் தேர்தல் முடிவுகள் காணப்படுகின்றன.
இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலையில் இருக்கும் சபைகளில் ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி என்பன ஒத்துழைப்பு தர வேண்டும்.
சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபை என்பவற்றில் முன்னிலையில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆட்சி அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும்.
தேர்தல் பிரசாரத்தின் போது நாங்கள் ஒருவர்க்கு ஒருவர் குற்றச்சாட்டுக்களை அடுக்கினோம். ஆனால் தேர்தலின் பின்னர் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வதுக்கு ஒன்றுபட வேண்டும்.
பங்காளிகளாக இருக்காவிட்டாலும் பகை இல்லாமல் சபைகளை நடத்தி மக்களுக்கான சேவையைச் செய்ய வேண்டும்.
பிரித்து நின்ற எங்களுக்கு, இத் தேர்தலில் மக்கள் ஒரு ஆணையை தந்துள்ளார்கள். அதனை ஏற்று செயற்பட வேண்டியது தமிழ் கட்சிகளின் கடமையாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எமது நெஞ்சில் இருக்கின்றன. தமிழ் இனம் தலை நிமிர நாங்கள் என்ன விலை என்றாலும் கொடுக்க தயாராக இருக்கின்றோம்” என தெரிவித்தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila