காணாமற்போனோர் பிரச்சினையை தீர்ப்பதில் பாரபட்சம்: பிரிட்டோ

காணாமற்போனோர் பிரச்சினையானது வெறுமனே தமிழ் மக்களுடைய பிரச்சினை என்ற கண்ணோட்டம் காணப்படுகிறது. ஆனால் வடக்கு, கிழக்கு, தெற்கு என சகல பிரதேசங்களிலும் இப்பிரச்சினை காணப்படுவதோடு இது மூவின மக்களினதும் பிரச்சினை என்பதை அனைவரும் உணரவேண்டுமென காணாமற்போனோரின் குடும்பங்களது அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் பிரச்சினை குறித்து பேசினால் ராணுவத்தினர் பாதிக்கப்படுவர் என தெற்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் அவரைச் சார்ந்தோர் கருதும் மனப்பாங்கும் மாற்றப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
Screenshot_9
காணாமல் போனோர் தொடர்பில் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், உறவுகளை இழந்து தவிப்பவர்கள் வீதிகளில் போராடிவருகின்றனர். நேற்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்ட காதலர் தினத்தில், இம்மக்கள் தமது உறவுகளுடனான நினைவுகளுடன் இத்தினத்தை அனுஷ்டித்தனர். இதற்கான ஏற்பாட்டை காணாமற்போனோரது உறவினர்களின் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதுதொடர்பாக எமது ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த போதே பிரிட்டோ மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.
தற்போதைய தேர்தல் முடிவுகளை வைத்து நோக்கும் போது, காணாமற்போனோரின் பிரச்சினையின் பாரதூரம் வெளிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உறவுகளை இழந்து தவிப்பவர்களுடைய வேதனையை ஏனையோர் புரிந்துகொள்ள முடியாமல் இருந்த நிலையில், நேற்றைய தினம் தெற்கின் இளைஞர்கள் பலரும் இந்நிகழ்வுக்கு வந்ததாகவும் அங்கு ஒலிபரப்பப்பட்ட பாடல் மற்றும் பகிர்ந்துகொண்ட விடயங்கள் என்பன அதனை உணரவைத்ததாகவும் பிரிட்டோ குறிப்பிட்டார்.
காணாமற்போனோர் பிரச்சினைக்கு அரசாங்கம் முன்னெடுக்கும் நகர்வுகள் போதுமானதாக இல்லையென உறவினர்கள் குறிப்பிடுவதாக சுட்டிக்காட்டிய பிரிட்டோ, ராணுவத்தினர் தொடர்பில் காட்டப்படும் கரிசனை காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் காட்டப்படுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். இந்நிலைமையை மாற்ற முடியாவிட்டால் இரு விடயங்களிலும் குறைந்த பட்சம் சமநிலையாவது பேண வேண்டுமென குறிப்பிட்டார்.
இந்நிலையில், தமது அன்புக்குரியவர்களுக்கு தமது காதலை வெளிப்படுத்த முடியாமல் இருந்த உறவினர்களுக்கு அதற்கான சந்தர்ப்பமாகவே நேற்றைய நிகழ்வு அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நிலைமாறுகால நீதிப் பொறிமுறை தொடர்பாக பிரபல விடுதிகளில் நாள்தோறும் கூட்டங்களை கூட்டுபவர்கள், காணாமல் போனோரது பிரச்சினையின் தாக்கத்தை உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென பிரிட்டோ வலியுறுத்தினார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila