இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் பற்றிய கரிசனை!



இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் பற்றிய கவலைகள் உலக வல்லரசுகளுக்கு மட்டுமன்றி உள்ளுர்வாசிகளிடமும் மேலோங்கிவருவதை அண்மைய நகர்வுகள் பறைசாற்றுகின்றன.

பல நூற்றாண்டுகாலமாகவே வர்த்தகத்தில் சிறந்தவர்களாக கருதப்படும் சீனர்கள், இலங்கையால் மீளச் செலுத்த முடியாதென நன்குதெரிந்தும் பாரிய திட்டங்களுக்காக கடன்களை வாரிக்கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக சொத்துக்களை தம்வசப்படுத்தும் கைங்கரியத்தை  மேற்கொண்டுள்ளதாக கடும் விமர்சனங்கள் உள்ளன. இதனைக் கடன் பொறி என்பர்.  அம்பாந்தோட்டை துறைமுகம் இதற்கு சிறந்த உதாரணம். 1.5பில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 22500 கோடி இலங்கை ரூபாய் ) கடனை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக கொடுத்த சீனா இறுதியில் 99 ஆண்டுகள் குத்தகைக்கு துறைமுகத்தை மட்டுமன்றி அதனை அண்டிய 15000 ஏக்கர் நிலப்பகுதியையும் எடுத்துக்கொண்டமை நன்கறிந்த விடயமாகும்.
கொழும்புத் துறைமுக நகருக்கும் இதே நிலைமைதான் என்பது ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது.

இதுவெல்லாம் பாரிய திட்டங்கள் சம்பந்தப்பட்டது தானே, எமக்கு எதுவும் நேர்ந்துவிடாது என யாரேனும் எண்ணியிருந்தால் அவர்களின் வயிற்றிலே புளியைக் கரைப்பதாக வந்துகொண்டிருக்கும் செய்திகள் அமைந்துள்ளன. சீனர்களுக்கு சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்கள் புற்றீசல் போன்று இலங்கையில் அதிகரித்து வருவதாக உள்ளூர் வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை ஜனாதிபதியின் தலையீட்டினால் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ள செய்தி எதிர்காலம் தொடர்பான அச்சத்தை கோடிட்டுக்காட்டுகின்றது.

எவ்விதமான நேர்த்தியான திட்டமிடலோ, தூர நோக்குச் சிந்தனையோ இன்றி தமது பெயரை பொறிப்பதற்காகவும் தேர்தலில் மக்களிடம் அபிமானம் பெறுவதற்காகவும் பாரிய திட்டங்களை பெருங்கடன் வாங்கி முன்னெடுத்ததன் விளைவையே அனுபவிக்க நேரிட்டுள்ளது.
குடும்பக்கஷ்டத்திற்காக குறுங்கடனை எடுப்பவர்கள் அனுபவிக்கும் துயரங்களை வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அறியமுடிவதுண்டு. பலர் கடனைச் செலுத்த முடியாததால் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக நேரிடுகின்றது. அதற்கு இசைந்துகொடுக்க மறுப்பவர்களும் மானமே பெரிதென எண்ணுபவர்களும் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கும் அவலநிலை காணப்படுகின்றது.
குறுங்கடன் எடுத்தவர்களுக்கே இந்த நிலையென்றால் பாரிய கடன்களை எடுத்த நாட்டின்
நிலை என்ன? சீனா போன்ற பெரும் பொருளாதார இராணுவ வல்லரசின் முன்பாக பேரம்பேசுவது சாத்தியமா? பெற்ற கடனுக்காக சரணாகதி அடைவதே தெரிவு. சீனர்கள் கூறும்,செய்யும் அனைத்துவிடயங்களையும் கைகொட்டிப்பார்த்துக்கொண்டிருப்பதை விட வேறெதனையாவது பொருளாதார நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் இந்த அரசாங்கத்தால் செய்யமுடியுமா?
ஒவ்வொரு ஆண்டும் பெற்ற கடன்களுக்காக வட்டியோடு திருப்திச் செலுத்த வேண்டிய தொகையானது இலங்கைக்குள் உள்வருகின்ற வெளிநாட்டு நேரடி முதலீடுகளை விடவும் குறைவு எனும் போது கடனை அடைப்பதற்காக மேலும் கடன் பெற்றுக்கொள்வதை விடவும் வேறு தெரிவுகள் இலங்கையின் முன்பாக இல்லை. உதாரணமாக 2017ம் ஆண்டில் இலங்கைக்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகளாக 1.36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்தன. ஆனால் ஏற்கனவே பெற்ற கடன்களுக்காக 2017ல் செலுத்தவேண்டிய கடன் மீள்செலுத்துகை தொகை (2,417மில்லியன் அமெரிக்க டொலர்கள் )  2.4 பில்லியன் டொலர்கள் என்கிறபோது நிலைமையின் பாரதூரத்தை உணர்ந்துகொள்ளமுடியும்.

விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து இந்த நாட்டின் அனைத்து பகுதிகளையும் ஒன்றுசேர்ந்தவர் என தம்பட்டம் அடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் தென்மாகாணத்திலேயே 15000 ஏக்கர்கள் நிலப்பகுதியை சீனாவிற்கு 99 வருடக்குத்தகைக்கு கொடுப்பதை தடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டமைக்கு பெற்ற கடன்களே காரணம் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.

இந்த நாட்டின் இன்றைய மோசமான பொருளாதார நிலைக்கு வித்திட்டு மக்களைப் பெருங்கடனாளியாக்கிய ராஜபக்ஷ தரப்பினரை இன்னமும் பெரும்பான்மையான சிங்கள மக்கள் நம்புவது அண்மைய உள்ளூராட்சித் தேர்தலிலும் புலனாகியது. இன்னும் இன்னும் கடனைப் பெற்றாவது அவர் எம்மை மகிழ்ச்சிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பே அவரது ஆதரவாளர்களின் மனங்களில் தோன்றும் எண்ணமாக இருக்கலாம். பட்டுவேட்டியென்ற பெரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த தன்மானம் என்ற கோவணத்தையும் பறிகொடுத்த அவல நிலையின் விளிம்பில் இன்றோ இலட்சக்கணக்கான இலங்கையர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்களின் கண்களுக்கு முன்பாகவே சீனாவின் ஆதிக்கம் விஸ்வரூபம் பெற்றுவருகின்றது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுப்பெறுகின்றது எனக்கூறும் போது சிலருக்கு ஏதோ அந்நியமாக தோன்றலாம். அப்படியானவர்கள் ஒருமுறை கொழும்பு ஹைட்பார்க்கிலுள்ள ஆர்ப்பிகோ சுப்பர் மார்க்கெட்டுக்கு விஜயம் செய்து பாருங்கள். ஏதோ சீனாவில் இருப்பது போன்ற உணர்வு மேலிடுவதை உணர்ந்துகொள்ளமுடியும். மேற்குலகினர் இலங்கையை சுமார் 500 ஆண்டுகள் தமது காலனித்துவ நாடாக வைத்திருந்திருந்து சென்றனர். ஆனால் அடுத்துவரும் ஆண்டுகளில் உத்தியோகபூர்வமாக முடியாவிட்டாலும் யதார்த்தத்தில் இலங்கை, சீனாவின் காலனித்துவ நாடாக மாறிப்போய்விடும் என்பதையே நகர்வுகள் கோடிட்டுக்காட்டுகின்றன.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila