மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட மண்டையோட்டுக்குள் உலோகத் துண்டு!



மன்னாரில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, கண்டுபிடிக்கப்பட்ட மனித மண்டையோட்டினூள் இருந்து உலோகத் துண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.  இந்த உலோகப் பொருளை ஆய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்ட மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, இந்த அகழ்வுப் பணிகளை விரிவுபடுத்துமாறும் பணித்துள்ளார்.
மன்னாரில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, கண்டுபிடிக்கப்பட்ட மனித மண்டையோட்டினூள் இருந்து உலோகத் துண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த உலோகப் பொருளை ஆய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்ட மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, இந்த அகழ்வுப் பணிகளை விரிவுபடுத்துமாறும் பணித்துள்ளார்.

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்துள்ள சதோச வளாகத்தில் உள்ள மனித புதைகுழியை அகழும் நடவடிக்கை இன்று 12 ஆவது நாளாக மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆசீர்வதாம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெற்றது. கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் இடம்பெற்றுவரும் இந்த அகழ்வுப் பணிகளின் போது இதுவரை 23 மனித எலும்புகள், மண்டையோடுகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவை சட்ட வைத்திய அதிகாரியின் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற அகழ்வு பணிகளின்போது மனித எச்சங்கள் காணப்படும் இடத்தில் உள்ள மணல் வேறு இடத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு குறித்த இடத்தில் கொட்டப்பட்டதாக சட்டவைத்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த அகழ்வுப்பணிகளில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்களை அடுத்து கடந்த 4 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆணைக்குழு உறுப்பினர் மிராக் உள்ளிட்ட குழுவினர் அகழ்வு பணிகளை நேரடியாக சென்று அவதானித்தனர்.
விசேட சட்ட வைத்திய நிபுனர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகளை பார்வையிட மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல்பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அன்ரனி விக்ரர் சோசை அடிகளார் ஆகியோர் நேற்று நேரடியாக விஜயம் செய்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று 12 நாளாக காலை 7 மணி முதல் மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்துள்ள சதோச வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம்பெற்றன. இருப்பினும், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து பொது மக்களினால் மண் எடுத்துச் செல்லப்பட்டமை தொடர்பாக மன்னார் நீதிமன்றத்திற்கு பொலிஸார் வழங்கிய தகவலையடுத்து மண்ணை எடுத்துச் சென்ற நபர்களின் வீடுகளிலும் அகழ்வு பணிகள் இடம்பெறலாம் என ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சதோச வளாகத்தில் உள்ள மனித புதைகுழியின் அகழ்வு பணிகளை மேலும் விரிவுபடுத்துமாறு மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆசீர்வதாம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டதற்கு அமைவாக, எதிர்வரும் தினங்களில் வீதி அருகிலும் அகழ்வு பணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila