இன்றைய சமுதாயத்தில் இளைஞரின் பங்கு என்ன?

தமிழ் மக்கள் பேரவை எமது இளைய சமுதாயத்தினருடன் சந்திப்பை நிகழ்த்த ஆவல் கொண்டுள்ளது. எமது பேரவையில் இளைஞர்கள் சிலர் இருந்தாலும் பெருவாரியான இளைஞர் யுவதிகளைச் சந்தித்து பரஸ்பரம் எமது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதால் இரு சாராருக்கும் அது நன்மை பயக்கும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். இளைஞருடனான சந்திப்பு தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கலைத்துறைக் கலாமன்ற கருத்தரங்க கூடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் பொதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இங்கு'இரு சாரார்' எனும் போது நான் வயதில் மூத்தவர்களையும், இளைஞர்களையும் பிரித்துப் பார்ப்பதுபோல்த் தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல.
தமிழ்ச் சமுதாயம் ஒருகுடும்பம் என்றால் பெற்றோரும் அவர்தம் மக்களும் பிரித்துப் பார்க்கமுடியாதவர்கள். ஒரேகுடும்பம்.
ஆனால் வயதில், அனுபவத்தில் வித்தியாசங்கள் இருப்பவர்கள். ஆகவே எமது தமிழ்ச் சமுதாய இளையதரப்பினரை மூத்தோர் சந்திக்கும் ஒருநிகழ்வே இது. ஒரு சில விடயங்களை நான் அடையாளப்படுத்த விரும்புகின்றேன்.
இன்றைய சமுதாயத்தில் இளைஞரின் பங்கு என்ன? இளைஞர்கள் யுவதிகள் வயதில் குறைந்தவர்கள்.ஆனால் வாலிப வலிமைகொண்டவர்கள்.
பழையன கழிதலும், புதியன மலர்தலும் என்று கூறுவோமே! அதுபோல் தான் இளைஞர் யுவதிகள். அவர்கள் இடம் நிரப்பக் காத்திருப்பவர்கள்.
பகரமாகப் பதவி பெற காத்திருப்பவர்கள். எம் போன்ற வயோதிபர்கள் சமுதாயவானில் இருந்து மறைந்து போக எமது இடத்தை நிரப்ப இருப்பவர்கள்தான் நீங்கள்.
ஆகவே தான் உங்கள் செயல் பண்பு இடம் நிரப்புதல் ஆகிவிட்டுள்ளது. இன்னும் 20, 25 வருடங்களில் நீங்கள் தான் மக்களின் தலைவர்களாக இருப்பீர்கள்.
அதற்கான ஆரம்ப பயிற்சியை நீங்கள் பெறவேண்டும் என்றேநாங்கள் இளைஞருடனான இந்தசந்திப்புக்களை ஆயத்தஞ் செய்துவருகின்றோம். பேராசிரியர் சரவணபவன் போன்றோர் பயிற்சியை அளிக்கக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எமது கலை,கலாச்சாரம்,பாரம்பரியம்,விழுமியங்கள் போன்றபலவற்றையும் எமது தலைமுறையினர் உங்கள் கையில் கொடுக்க நீங்கள் அவற்றை உங்கள் காலத்தில் பேணிப் பாதுகாத்துச் சென்று அடுத்ததலை முறையினருக்குக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது அவற்றை மேம்படுத்தவும் நீங்கள் முன்வரவேண்டும்.
சிதைக்கவோ, சின்னாபின்னப்படுத்தவோமுனையக் கூடாது. அரசியல் அரங்கில் அதிகாரத்தைப் பெறப் போகின்றவர்கள் நீங்கள். அதற்கேற்றவாறு உங்களைத் தயார்படுத்திக் கொண்டு உங்களுக்குக் கிடைத்த விழுமியங்களை இன்னும் மெருகூட்டி மேன்மை கொடுத்து அடுத்ததலை முறையினருக்குக் கொடுக்க முன்வரவேண்டும்.
ஒருநாட்டில் அரசியல்,பொருளாதார,சமூ கவளர்ச்சியானது இளைஞர் யுவதிகள் கையிலேயே இருக்கின்றன. முதியோரான எமக்கு வலிமை குன்றக் குன்ற வளர்ச்சிக்குமுண்டு கொடுக்கப் போவது நீங்களே.
ஆகவே அனுபவத்திற்கும் ஆற்றலுக்கும் மதிப்புக் கொடுத்து அதேநேரம் வேகம், விவேகம் ஆகியவற்றைஉள்ளடக்கி எமது பாரம்பரியங்களை முன் கொண்டுசெல்ல நீங்களே முன்வர வேண்டும்.
முதியவரின் அனுபவமும் இளையோரின் வேகமும் ஒன்று சேர்ந்தால் ஒரு சமூகம் வெகுவாக முன்னேற்றமடையலாம். உங்களுள் தானாகவே எழும் ஒரு குணவியல்பு தான் புரட்சி என்ற மனோபாவம்.
இதுவரை நடந்தவற்றை எல்லாம் ஏற்க மனம் விடாது. புதியனவற்றைப் புகுத்தமனம் துடிக்கும். ஒன்றைமட்டும் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதேவேகம் இளைஞர்களாக இருந்த போது எங்களுக்கும் இருந்தது.
இன்று அமைச்சராக இருக்கும் ஜோன் அமரதுங்க, காலஞ்சென்ற முன்னைய அமைச்சர் ட்டெனிசன் எதிரிசூரிய போன்ற பலர் என்னுடைய தலைமைத்துவத்தின் கீழ் கொழும்பு நகர் வீதிகளில் அந்த நாட்களில் புரட்சி நடைகளில் ஈடுபட்டவர்கள். நான் அப்போது சட்ட மாணவர் தலைவராக இருந்தேன்.
எமது புரட்சிச் சிந்தனைகள், பேச்சுக்கள் எல்லாம் காலம் செல்லச் செல்ல அடங்கி விட்டன. அனுபவம் எமக்குப் பாடங்களைப் புகட்டின. முக்கியமாக எம்மை நாடி வரும் ஒவ்வொரு வரும் தாம் பகரும் காரணத்திற்காக மட்டும் எம்மிடம் வருவதில்லை என்பது. எனவே தான் கூறுகின்றேன் முதியோரின் அனுபவங்களை புறக்கணிக்காதீர்கள்.
உங்கள் இயல்பான வேகத்தையுந் தடுக்காதீர்கள். இரண்டும் சேர்ந்தே உங்களை வழி நடத்த வேண்டும். 'உந்தக் கிழடுகளுக்கு என்ன தெரியும்?' என்ற மனோபாவத்தில் இருந்தீர்களானால் எங்கோ ஒரு இடத்தில் உங்கள் அனுபவமின்மை உங்களுக்கு இடர்களைத் தந்துவிடுவன. மிகவும் மனவருத்தத்துடன் நான் கூறுவது அன்டன் பாலசிங்கத்தின் அனுபவமும், அறிவும் ஏற்றுக் கொள்ளப்படாதது பாரிய விளைவுகளை எமக்கு ஏற்படுத்தியது என்பது.
போர்க்காலத்தில் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டே எம்மவர் இயக்கங்களில் சேர்ந்தார்கள். அதுவேறு இன்றைய நிலைவேறு. போரை மையமாக வைத்து நடந்தேறியதே அன்றைய வாழ்க்கை. ஆனால் இன்று அவ்வாறல்ல. ஜனநாயக சூழல் வேறு போர்ச் சூழல் வேறு.
நீதியரசர் சட்டத்திற்கேமுதலிடம் கொடுக்கின்றார். அவரைவைத்துக் கொண்டுபுரட்சிநடவடிக்கைகளில் இறங்கமுடியாதுஎன்று கூறுவார்களும் இருக்கின்றார்கள்.
புரட்சிமட்டும் செய்துதெற்கிலும் எமது இளைஞர்கள் பயன் பெறவில்லைவடக்கிலும் எமது குறிக்கோளை நாங்கள் அடையவில்லை.
ஆனால் உரியகாலம் வந்ததும் யாவரும் ஒரு இயக்கரீதியான செயற்பாட்டுக்குள் இறங்க வேண்டிவரும் என்பது நிச்சயம். அதுவரையில் நீங்கள் உங்களைத் தயார்படுத்த வேண்டும். அறிவு பூர்வமாக எமது குறிக்கோள்கள் என்ன ,அவற்றின் தாற்பரியங்கள் என்ன, பன்னாடுகளில் அவற்றை நோக்கி முன்னெடுத்த போராட்டங்களுக்கு என்ன நடந்தது, எல்லாவற்றையும் கருத்தில் எடுத்து எமது அரசியல் பவனியை ஆற்றுப்படுத்த வேண்டும் என்பதுபற்றி எல்லாம் சிந்தித்து அறிந்து கொள்ளுதல் அவசியம்.
சட்டரீதியாகசத்தியாக் கிரகம் செய்வது எப்படி என்பது பற்றி ஒரு கிறீஸ்தவப் பாதிரியார் அவுஸ்ரேலியாவில் ஆராய்ச்சி செய்து நூல் வெளியிட்டுள்ளார் என்று அறிகின்றேன்.
எமக்குள் ஒற்றுமையைவளர்த்தல் அவசியம். எம்மவருக்கிருக்கும் சந்தேகங்களைப் போக்குதல் அவசியம். அதற்காகத்தான் இந்தக்கருத்துப் பரிமாற்றம்.
ஆனால் எமது கடமைகளில் தீவிரம் அவசியம். இலஞ்சம், ஊழல் ஆகியவற்றுக்கு இடமளிக்கக் கூடாது.
உங்கள் பவனியில் அறிவுடையோர்,அனுபவமுடையோர் பலநல்லவிடயங்களைஉங்களுக்குச் சொல்லிக் கொடுக்கக் காத்திருக்கின்றார்கள். அவர்கள் கூறுவதைச்செவிமடுப்பதில் குற்றமில்லை. தீர்மானங்கள் உங்களாலேயே எடுக்கப்பட வேண்டும்.
ஆனால் புதுமை காணும் விதத்தில் நீங்கள் சிந்திக்கப் பழகவேண்டும். பழைமையைப் புரிந்து புதுமையை வெளிக் கொண்டுவர நீங்கள் முன்வரவேண்டும்.
மேலும், இளைஞர்கள் புதிய புதியசிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக் கூடியவர்கள். இன்றைய கால கட்டத்திற்கும் சூழலுக்கும் ஏற்பசிந்திக்க கூடியவர்கள்.
அவர்களை சரியாக ஆற்றுப்படுத்தினால் எமது வருங்காலம் பெருமை வாய்ந்ததாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila