கால இழுத்தடிப்பு வேண்டாம் - யாழ்.ஆயர்!

9771589_orig

உண்மையை மூடி மறைக்கும் நோக்கிலோ அல்லது அரசியல் லாபம் கருதியோ காலத்தை இன்னும் இழுத்தடிக்காமல் விரைவாக செயற்படுங்கள் என இலங்கை அரசிடம் யாழ்.ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். தழிழ் புத்தாண்டு – ஈஸ்ரர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியினில் மேலும் தெரிவிக்கையினில் 2017ஆம் ஆண்டிற்குரிய தமிழ் – சிங்கள புத்தாண்டை கொண்டாடும் அன்பர்கள் அனைவர்க்கும்; இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை முதலில் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
மூன்று தசாப்த கால போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் நல்லெண்ண அரசு பல விடயங்களை இன்னும்; மிக வேகமாக ஆற்றி இயல்பு வாழ்வை வரைவிற் தோற்றுவிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
சொந்த நிலங்கள் விடுவிப்பு – இடம் பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் – வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் – அரசியற் கைதிகள் விடுதலை – முன்னாற் போராளிகளின் முழுமையான விடுதலையும் புனர்வாழ்வும் – காணாமற் போனோர் விவகாரம் – நீதியான போர்க்குற்ற விசாரணை – அரசியல் யாப்பு மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் என பல பிரச்சினைகளுக்கு வேகமாகவும் விவேகமாகவும் தீர்வு காணப்பட வேண்டி உள்ளன.
இவை தொடர்பான சுமூக நடவடிக்கைகள் நடைபெறாமையால் இன்று பல இடங்களிலும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இப்போராட்டங்கள் நீண்ட நாட்கள் எடுத்து மக்களை இன்னும் வேதனைப்படுத்தாமலும் மக்கள் விரக்தியுற்று வேறு முடிவுகளுக்குப் போகாமலும் இருக்கத்தக்க விதமாக அரசு வேகமாகச் செயற்பட்டு முடிவுகளைக் காண வேண்டுமென அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம். அரசு ஏற்கனவே ஆற்றியுள்ள நல்ல செயல்களுக்கு தமிழ் மக்கள் பெயரால் நன்றி தெரிவிக்கும் வேளை உண்மையை மூடி மறைக்கும் நோக்கிலோ அல்லது அரசியல் லாபம் கருதியோ காலத்தை இன்னும் இழுத்தடிக்காமல் விரைவாக செயற்படுங்கள் என வேண்டுகிறோம்.
இந்த மக்கள் தரமுடியாத எதையும் கேட்கவில்லை. வேறு யாருக்கோ உரிய எதையுயும் கேட்கவில்லை. புதிதாக எதையும் கேட்கவில்லை. தமது சொந்த மண்ணைக் கேட்கிறார்கள். தமது சொந்த பாரம்பரியத்தைக் கேட்கிறார்கள். தமது மிக அடிப்படையான விடயங்களையே கேட்கிறார்கள். இதனைக்கூட போராடித்தான் பெற வேண்டும் எனற ஒரு நிலையை அரசு உருவாக்குவது எந்த வகையில் நியாயம். 30 ஆண்டுகளாக ஓரு கொடிய போரின் பயங்கர அனுபவங்களில் வாழ்ந்தவர்கள் இந்த மக்கள். போர் முடிந்து எட்டு ஆண்டுகளாகியும் இன்னும் ஒரு ஆறுதலின் நம்பிக்கைப் பெருமூச்சை முழுமையாக விட முடியாமல் உள்ளனர்.
நல்லெண்ண அரசு இந்த அடிப்படை வசதிகளை மக்கள் கேட்காமலே நேரகாலத்தோடு செய்து கொடுத்திருக்க வேண்டும். தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி இரு இனங்களும் இனி இந்த நாட்டில் இணைந்தே வாழவேண்டும் என்ற சமாதான சமிக்கையைக் காட்டி இருக்க வேண்டும். இவ்வளவு காலம் தாழ்த்தியும் மக்கள் இவ்வளவு போராட்டம் நடத்தியும் இனியும் வேகமாக செயற்பட்டு இயல்பு வாழ்வை ஏற்படுத்தாது இருப்பது மிகவும் வருத்தத்தற்குரியது.
மக்கள் இனியும் போராட்டம் என்ற பெயரில் துன்பத்தையும் வேதனையையும் அனுபவிக்க அனுமதிக்காதீhகள்.
அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குமுன் உடனடியாக இயல்பு வாழ்வை முழுமையாகக் ஏற்படுத்துங்கள். மக்கள் குடியிருப்புக்களில் இருந்து இராணுவத்தை முழுமையாக அகற்றுங்கள். அவர்களுக்கு அரச காணிகள் நிறையவே உண்டு. போராட்டம் முடிந்தமையால் அவர்கள் தள்ளி இருப்பதே சிறந்தது.
காணாமற் போனோர் என்ற விடயத்திற்கு முழுமையான முடிவு காணுங்கள். உண்மையை வெளிக்கொணர்ந்து மக்கள் ஏற்கும் விதமாக அறியப்படுத்துங்கள். தமிழ் மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் யாரோ ஒருவர் இறந்தே உள்ளார். அவர்கள் எந்த முடிவையும் தற்போது ஏற்கும் மனநிலையிலேயே உள்ளனர். இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியாது அதே வேளை உயிரோடு இருப்பவர்களை காலம் காலமாக மறைத்தே வைத்திருக்க முடியாது. எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு முடிவு உண்டு. மனித உயிர் சம்பந்தமான இப்பிரச்சனைக்கு இனியும் காலம் தாழ்;த்தாது முடிவு காணுங்கள்.
இருப்பவர்களை உடன் விடுவியுங்கள். இல்லாதவர்கள் பற்றிய பிரச்சினையை தெளிவு படுத்தி சமயக் கடமைகளை நிறைவேற்றி இறந்தவர்கள் இழைப்பாறவும் உறவுகள் தம் மனசுகளை ஆறுதற்படுத்தவும் வழி செய்யுங்கள். இறந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழைப் பெறவும் இழப்பீடு பெறவும் வழி செய்யுங்கள். காணாமற் போனோரின் உறவுகள் அனுபவிக்கும் முடிவில்லாக சோகத்திற்கும் மன அங்கலாய்ப்பிற்கும் முடிவு கொண்டு வாருங்கள்.
எமக்கிடையே என்ன வேறுபாடுகள் இருந்தாலும் இலங்கை வாழ் மக்கள் என்ற நிலையில் இலங்கை மண்ணின் மைந்தர்கள் என்ற உறவு எம்மை எப்போதும் இணைத்துக் கொண்டே இருக்கவும் இனங்களையும் மதங்களையும் தாண்டி இலங்கை மண்ணின் மைந்தர்கள் என்ற பாலம் எம்மைப் பலப்படுத்திக் கொண்டே இருக்கவும் வழி செய்யுங்களென மேலும் யாழ்.ஆயர் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila