நாங்கள் புலனாய்வாளர்கள்! எங்களோடு மோதாதீர்கள், விளைவு விபரீதமாகும்: எச்சரித்த மர்ம நபர்கள்

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களது உறவுகளை மிரட்டும் பாணியில், தம்மை சி.ஐ.டி எனக் கூறி அவர்களைப் புகைப்படம் பிடித்த இனந்தெரியாதவர்களைச் மடக்கிப் பிடித்த காணாமல் போனவர்களது உறவினர்கள் அவர்களை எச்சரித்து விரட்டியடித்தனர்.
காணாமல் போனவர்களது உறவினர்களின் போராட்டம் 54வது நாளை எட்டியுள்ளது. நேற்றைய தினம் புதுவருட தினத்தில் கறுப்புடை அணிந்து கண்ணீர் விட்டுக் கலங்கினார்கள்.
கைது செய்யப்பட்ட, கடத்தப்பட்ட எங்கள் பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள் என்று கலங்கி நிற்கிறார்கள் அவர்கள். ஆனாலும் அரசாங்கம் எங்களின் போராட்டத்தை கண்டும் காணாதது போல இருக்கிறது என்று பெரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பகுதிச் சென்ற இருவர் காணாமல் போனவர்களது உறவுகளை ஏழனமாகப் பார்த்ததுடன், அவர்களை புகைப்படக் கருவி, கைத்தொலைபேசி மூலம் புகைப்படம் பிடித்துள்ளனர்.
இதன் போது எம்மைப் புகைப்படம் எடுக்க வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் அந்தச் சந்தேக நபர்கள் நாம் படம் எடுத்தால் நீங்கள் யார் எம்மைத் தடுப்பதற்கு என்று கேட்டு, தொடர்ந்தும் படம் எடுத்தார்கள்.
இந்நிலையில், சந்தேக நபர்களிடம் இருந்து புகைப்படக்கருவிகளைப் பறித்த காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளிடம், அவர்கள் தாம் ஊடகவியலாளர்கள் எனக் கூறியுள்ளனர்.
எனினும் உங்கள் ஊடகவியலாளர் அடையாள அட்டையைக் காட்டுங்கள் எனக் கேட்ட போது, தாம் சி.ஐ.டி எனக்கூறி உங்கள் ஒவ்வொருவரரைப் பற்றிய தரவுகள் மட்டுமல்ல உங்கள் குடும்பத்திலுள்ளவர்கள் பற்றிய முழுமையான தகவல்களும் எங்களிடம் உள்ளன.
எங்கள் புகைப்படக் கருவிகளைத் தாருங்கள் தராதுவிட்டால் என்ன நடக்குமென்று தெரியும்தானே. நாங்கள் சி.ஐ.டி எங்களோடு மோதாதையுங்கள்.
இதன் விளைவுகள் விபரீதமாக அமையும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள் என மிரட்டும் பாணியில் கூறிய போது அவர்களை மடக்கிப் பிடித்த காணாமல் ஆக்கப்பட்டோரது தாய்மார் அவர்களைக் கட்டிப் போடவும் முயன்றனர்.
நிலைமை விபரீதமானதை உணர்ந்துகொண்ட அவர்கள் தாம் செய்தது பிழை தம்மை விடுங்கள் என்று மன்னிப்புக் கேட்டு அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்கள்.
காணாமல் போன தமது உறவுகளைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் கோரி இரவு பகலாகத் தாம் இப்படியாகக் கஸ்டப்பட்டுக் கொண்டுள்ள நிலையில் இப்படியானவர்கள் தமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் தம்மை மிரட்டும் வகையிலும் செயற்படுவது தமக்கு மென்மேலும் கவலையையும் விசனத்தையும் தோற்றுவித்துள்ளதாகவும் கூறிக் கண்ணீர் விட்டுக் கலங்குகின்றார்கள்.Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila