நம்பிக்கையும் நம்பிக்கையீனமும் சந்திக்கும் களம் நெருங்குகிறது! பனங்காட்டான்

TNA-Sampanthan-Sumanthiran

இந்த அரசின்மீதான சம்பந்தனின் நம்பிக்கையும், தமிழ் மக்களின் நம்பிக்கையீனமும் சந்திக்கும் களம் நெருங்கி வருவதை சிங்களத்தின் புதிய அரசியலமைப்பும் தமிழர் தரப்பு விரும்பும் சர்வஜன வாக்கெடுப்பும் குறியிட்டுக் காட்டுகின்றன.
——
இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு வருட அவகாசம் வழங்கியபோது, ஜெனிவா குறிப்பிட்ட விடயங்களில் ஒன்றாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதை வரவேற்பதாக அமைந்தது.
இலங்கையில் புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுமென ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நம்புவதை இது தெரிவித்தது.
கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இப்படியான ஒரு நம்பிக்கைக் கூற்றை இலங்கை அரசு வெளிப்படுத்தியிருந்ததே இதற்குக் காரணம்.
இதற்கென வழிகாட்டல் குழுக்களை நியமித்து, கூட்டங்கள் சிலவற்றையும் கடந்த மாதங்களில் இலங்கை நடத்தியது.
இதன் அடிப்படையிலேயே ஜெனிவாவும் தனது நம்பிக்கையை கால அவகாசமாகச் சுட்டியது.
ஆனால், இது தொடர்பாக கிடைக்கப்பெறும் தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாகவும், நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குவதாகவும் அமைந்துள்ளன.
இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை புதிய அரசியலமைப்பை உருவாக்குவதா அல்லது ஏற்கனவே நடைமுறையிலுள்ள அரசியலமைப்பைத் திருத்துவதா?
இதுபற்றி எவருமே விளக்கம் கொடுப்பதாகவோ விபரம் அளிப்பதாகவோ இல்லை. ஒருவகையில் கள்ள மௌனமே.
இதுபற்றிய விளக்கமே இல்லாமல்தான் வழிகாட்டல் குழுக்கள் இயங்குகின்றனவா?
அப்படியெனில், சிறுபான்மை மக்களின் அரசியல் கட்சிகள் எந்த அடிப்படையில் இதில் நம்பிக்கை வைத்து செயற்படுகின்றன?
புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டால் போதுமா?
அப்படியாயின், இன்றைய இரு கட்சி அரசிடம் அதற்கான பலம் இருந்தும் அதனை இழுத்தடித்து எதற்காக காலத்தைப் போக்க வேண்டும்?
நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட பின்னர், சுநகநசநனெரஅ என்று சொல்லப்படும் சர்வஜன வாக்கெடுப்பு (பொதுவாக்கெடுப்பு அல்லது மக்கள் கருத்துக்கணிப்பு என்றும் இது அழைக்கப்படுகிறது) நடத்தப்படுவது அவசியமா? இதில் எவ்வளவு பெரும்பான்மையைப் பெற வேண்டும்?
இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடுவதற்கு முன்னர், அண்மையில் நடைபெற்ற வழிகாட்டல் குழு உறுப்பினர்களின் விவாதிக்கப்பட்ட சில விடயங்களை அணுகுதல் நல்லது.
புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான வரைவு இன்னமும் நிறைவு செய்யப்படவில்லையென்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. (இதன் முதலாவது பந்திகூட இன்னமும் தயாரிக்கப்படவில்லையென்று ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர் ஒருவர் பொதுநிகழ்வொன்றில் தெரிவித்ததை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்)
இப்பொழுது தயாரிக்கப்படும் வரைவை அரசியல் மறுசீரமைப்பு என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த வரைவு அறிக்கையை முதலில் அரசியலமைப்புச் சபையில் சமர்ப்பிப்பதென இங்கு இணக்கம் காணப்பட்டது.
தற்போதைய நாடாளுமன்ற அவையே அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டு இயங்கி வருவதால், இந்த வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென இது பொருள் கொள்ளப்படும்.
இந்த வரைவு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா இல்லையா என்பதை நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டுமெனவும் வழிகாட்டல் குழு முடிவெடுத்துள்ளது.
(குமரபுரம் கொலைவழக்கில் இராணுத்தினர் விடுதலை செய்யப்பட்டமை, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலைவழக்கில் எதிரிகள் விடுதலை செய்யப்பட்டமை, விமல் வீரவன்சவை சில நாட்களுக்கு முன்னர் பிணையில் விடுதலை செய்தமை போன்ற பல முக்கிய வழக்குகளின் தீர்ப்பில் அரசியல் கலப்பு எவ்வாறு இணைந்திருந்தது என்பது இப்போது நாற்றமடிக்கும் பேசுபொருளாக உள்ளதை இவ்விடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும்.
இவ்விடயத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு இன்றைய காலம் உகந்ததல்ல என்ற தங்கள் அபிப்பிராயத்தை பகிரங்கமாகத் தெரிவித்த செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
இந்த இரண்டு தலைவர்களும் சர்வஜன வாக்கெடுப்பை விரும்பவில்லை என்ற நிலைப்பாடும் ஏற்கனவே பல தடவை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இரண்டு பிரதானிகளினதும் விருப்பு இவ்விடயத்தில் என்னவென்பது நீதிபரிபாலனத்துறைக்கு பூடகமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதை இதனூடாக அறிந்து கொள்ளலாம்.
ஆதலால், இவ்விடயத்தில் நீதிமன்றத் தீர்ப்பு எவ்வாறாக அமையலாமென சாதாரண பொதுமகன்கூட ஆருடம் கூற முடியும்.
வழிகாட்டல் குழுவுடனான இந்த முக்கிய கூட்டத்தில் எதிர்க்;கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான மனோ கணேசன், ராவுப் ஹக்கீம், டிலான் பெரெரா, அனுர பிரியதர்சன யாப்ப, மலிக் சமரவிக்கிரம, நிமால் சிறிபால டி சில்வா மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் பங்குபற்றினர்.
புதிய அரசியலமைப்பை (?) விரைவில் கொண்டுவர வேண்டுமென ராவுப் ஹக்கீம் இங்கு வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
இவ்வேளையிலும்கூட ஜனாதிபதியும் பிரதமரும் இது அதற்கு உகந்த நேரமல்ல என்ற தங்கள் கருத்தை நேரடியாகக் கூறினர்.
புதிய அரசியலமைப்பை சர்வஜன வாக்கெடுப்புடன் கொண்டுவர வேண்டுமென தாம் கடுமையாக வலியுறுத்தியதாக இரா.சம்பந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் இவ்வியடத்திலும் தங்கள் சாதகத் தன்மையை வெளிப்படுத்தவில்லை.
ஜனநாயக ஆட்சியமைப்பில் ஆளும் தரப்பு, எதிர்க்கட்சி என்பவை அதிமுக்கியமான இரண்டு கூறுகள்.
அரசாங்க நடவடிக்கைகளையும் செயற்பாடுகளையும் பொறுத்தளவில் எதிர்க்கட்சியென்பது எப்போதும் காவல் நாயாக இருக்க வேண்டும். அரசு விடும் தவறுகளையும், ஜனநாயக விரோதப் போக்குகளையும் கண்விழித்துப் பார்த்து கண்டிப்பதும் தடுத்து நிறுத்துவதுமே எதிர்க்கட்சியின் பிரதான பணி.
ஆனால், இலங்கை அரசியல் என்பது இப்போது அப்படியானதாக இல்லை.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருக்கும் இரா.சம்பந்தன் அரசாங்கத்தின் காவல்காரனாகவும், அதனைச் சரிந்துவிடாது பாதுகாத்து வருபவராகவும் செயற்பட்டு வருகின்றார்.
அரசாங்கம் வெளிப்பார்வைக்கு எதிர்கட்சித் தலைவரின் தோள்களில் கைபோட்டவாறு அவரது கழுத்தை நெரிப்பது போன்று தனது காய்களை நகர்த்தி வருகிறது.
1978ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு தயாரித்த புதிய அரசியலமைப்பு குதர்க்கமானதும் குள்ளத்தனமானதும்.
அதில் நான்காவது திருத்தத்தைக் கொண்டுவந்த 1982ல் கொண்டு வந்த ஜே.ஆர். அப்போதைய நாடாளுமன்றத்தை மேலும் ஒரு பதவிக் காலத்துக்கு (ஆறு ஆண்டுகள்) நீடிப்பதற்கு அனுமதி கோரினார்.
அதற்கு முன்னராக நாலாம் சட்டத்திருத்தத்தை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி அதன் கருத்தைக் கேட்டார். நான்கு நீதியரசர்களில் மூவர் இதனை ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்தனர்.
1982 நவம்பர் 5ம் திகதி நாடாளுமன்றம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் இதனை அங்கீகரித்தது.
இதன் அடுத்த கட்டமாக அதே ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் திகதி சர்வஜன வாக்கெடுப்பை நடத்திய ஜே.ஆர். 54 வீத வாக்குகளைப் பெற்று அதனை நிறைவேற்றினார்.
ஜே.ஆர். அன்று விரும்பியிருந்தால் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றதோடு நிறுத்திவிட்டு, சர்வஜன வாக்கெடுப்பைப் புறக்கணித்திருக்கலாம்.
1977 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், அதன்பின்னர் பொதுத் தேர்தலின்றி 1989 பெப்ரவரிவரை ஆட்சியில் இருந்தது.
1977 முதல் 1989 வரையான சகல தேர்தல்களிலும் (சர்வஜன வாக்கெடுப்பு உட்பட) சிங்கள மக்களின் வாக்குப்பலத்தால் தாம் விரும்பிய சண்டித்தன ஆட்சியை ஜே.ஆர். அன்று நடத்தி முடித்தார்.
ஆனால், 2015ல் நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் தமிழ் மக்களின் வாக்குப்பலத்தால் ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் அரசு, அதனை மறந்து அவர்களின் அரசியல் அபிலாi~களை புறந்தள்ளி சிங்கள பௌத்தர்களுக்கு உருத்தான ஆட்சியை ஊரவாக்கி வருகிறது.
இந்த அரசின் மீதான சம்பந்தனின் நம்பிக்கையும், தமிழ் மக்களின் நம்பிக்கையீனமும் சந்திக்கும் களம் நெருங்கி வருவதை சிங்களத்தின் புதிய அரசியலமைப்பும் தமிழர் தரப்பு விரும்பும் சர்வஜன வாக்கெடுப்பும் குறியிட்டுக் காட்டுகின்றன.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila