தமிழ் அரசியல் தலைமை தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்


தினம் தினம் பதற்றத்தோடும் ஏக்கத்தோடும் வாழுகின்ற அவலம் காணாமல்போனவர்களின் உறவுகளை வாட்டி நிற்கிறது.

என் பிள்ளைக்கு நடந்தது என்ன என்பதை அறிய முடியாததால் பெற்றவர்களும் பிள்ளைகளும் குடும்பத் தலைவிகளும் படும் வேதனை அளவேயில்லை.

என் பிள்ளையை என் கையால் ஒப்படைத்தேனே என்று பெற்ற மனம் பதறுகின்ற அவலத்தை தீர்க்க யாரும் முன்வரவில்லை.

இது ஒருபுறம். மறுபுறத்தில் சொந்த நிலத்தில் வாழ முடியாத பரிதாபம். கூடவே, விளக்கம் விசாரணை இன்றி சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் அவலம் என தமிழ் மக்கள் ஏதோவொரு வகையில் யுத்தத்தின் கொடூரத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கின்றனர்.

இச்சந்தர்ப்பத்தில் தங்களின் உரிமைக்காக,  இழப்புக்காக நீதி கேட்டு தொடர் போராட்டம் நடத்தும் தமிழ் மக்களின் கோரிக்கையை உலகறியச் செய்யும் பொருட்டு வடக்கு கிழக்கு எங்கும் இன்று பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்குத் தழுவியதாக முன்னெடுக் கப்படும் இன்றைய ஹர்த்தாலால் போராட்டம் எந்தளவு தூரம் இலங்கை அரசை மசிய வைக்கும் என்று ஆராய்வதும் அவசியம்.

இத்தகைய கட்டத்தில், தொடர்ச்சியான மக்கள் போராட்டம்; கடையடைப்பு என்பன பல்வேறு  நடைமுறைச் சிக்கல்களைத் தரக் கூடியவை.

எனவே, இன்றைய ஹர்த்தால் போராட்டம் முழுமையாக நடந்தேறிய பிற்பாடு, அந்தப் போராட்டத்தை மையப்படுத்தி - உதாரணப்படுத்தி - எடுத்துக்காட்டி தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளை, அவலங்களை; துயரங்களை சிங்கள மயமாக்கும் சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துரைக்க வேண்டும்.

இதைச் செய்வதன் மூலமாகவே இன்று நடைபெறும் ஹர்த்தால் அர்த்தமுடையதாக - வெற்றியுடையதாக அமையும்.

எனினும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் தமது கடமை முடிந்து விடுவதாக தமிழ் அரசியல் தலைமை நினைக்கிறது.

காணாமல்போன உறவுகளின் பரிதாபத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும். அவர்கள் தொடர்ச்சியாக போராடுவதென்பது எத்துணை கடினமானதென்பதை உணர்ந்து தமிழ் அரசியல் தலைமை;

காணாமல்போனவர்கள் தொடர்பில், நிலமீட்புத் தொடர்பில்; தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தொடர்ச்சியாக குரல் கொடுப்பதுடன்,

வெளிநாட்டுத் தூதுவர்கள், இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மதத்தலைவர்கள் எனப் பலரையும் சந்தித்து மேற்குறிப்பிட்ட விடயத்துக்கு தீர்வு கட்ட வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

மிகக் குறுகிய கால அவகாசம் கொடுத்து மேற்குறிப்பிட்ட விடயத்துக்குப் பதில் சொல்லாவிட்டால் நாங்கள் எங்கள் ஆதரவை விலக்குவோம் என்று எச்சரிக்கை செய்ய வேண்டும்.

இதைச் செய்யாமல் வெறுமனே ஹர்த்தால் போராட்டத்தை நடத்தி முடிப்பது எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் போகும் என்பதால்,

இன்றைய ஹர்த்தால் போராட்டத்துடன் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தமிழ் அரசியல் தலைமை கையிலெடுக்க வேண்டும். இது மிகவும் அவசியமானதாகும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila