வருமானங்கள் கூடிவிட்டன! மனங்கள் சுருங்கிவிட்டன! புங்குடுதீவில் வடக்கு முதல்வர்

பொறுப்புக்களைத் தட்டிக் கழித்தல் அல்லது அவற்றில் இருந்து ஒதுங்கியிருத்தல் போன்ற சுயநலச் சிந்தனைகள் தலைதூக்கியதன் விளைவே இன்று நாம் அனுபவிக்கின்ற துன்பங்களுக்கு அடிப்படைக் காரணங்கள் என வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கலைப்பெருமன்றம் புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு உரையாற்றிய வட மாகாண முதல்வர்,
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒன்றாக விளங்கக் கூடிய இந்தப் புங்குடுதீவுக் கிராமம் 1950களின் முற்பகுதி வரை நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாகவே அமைந்திருந்தது.
இங்குள்ள மக்கள் கடல் வழிப் போக்குவரத்தினூடாகவே நாட்டின் ஏனைய பகுதிகளுக்குத்தமது போக்குவரத்தை மேற்கொண்டிருந்தார்கள்.
கிட்டத்தட்ட 36 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடைய இத்தீவில் 1990கள் வரை சுமார் 20ஆயிரம் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அப்போது ஏற்பட்ட இடப்பெயர்வின் விளைவாக பலர் வெளியேறி தற்பொழுது ஏறத்தாழ 4ஆயிரம் மக்கள் மட்டுமே இங்கு வசிக்கின்றார்கள்.
பொருளாதார சமூக பண்பாட்டு ரீதியாக சிறப்பான நிலையில் உள்ள இப்பகுதி மக்கள் பெருமளவிலாக விவசாய நடவடிக்கைகள் மூலமே தமது பொருளாதாரத்தை விருத்தி செய்து வந்தனர்.
ஏனையவர்கள் புலம்பெயர்ந்து தென்னிலங்கையிலும் வெளிநாடுகளிலும் பொருளாதாரத் தேட்டத்தைப் பெற்று புங்குடுதீவுக் கிராமத்தை வலுப்பெறச் செய்துள்ளனர்.
அக் காலத்தில் இக் கிராமங்களில் வசித்த செல்வம் படைத்தவர்களும் கல்விமான்களும் தமது பொருளீட்டல், குடும்ப முன்னேற்றம் ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தாது தாம் பிறந்த கிராமத்தை வளர்ச்சியுறச் செய்வதில்பெரும் பங்கு வகித்தனர்.
கல்வி அறிவில் வளர்ச்சியுற்ற பலர் வெளிநாடுகளில் சிறப்பான பதவிகளில் கடமையாற்றிய போதும் புங்குடுதீவுக் கிராமத்தை வளமுள்ள ஒரு கிராமமாக மாற்ற வேண்டும் என்ற அவாவில் பெரியவாணர் என அன்புடன் அழைக்கப்படும் க.அம்பலவாணர் அவர்களும் சின்னவாணர் என அழைக்கப்படும் ச.அம்பலவாணர் அவர்களும் மற்றும் இவர்களுடன் இணைந்து வ.பசுபதிப்பிள்ளை ஆகிய மூவரும் இக் கிராமத்தை வலுவூட்டச் செய்வதற்கு பெரும் பங்காற்றியமை மதிப்புடன் இச் சந்தர்ப்பத்தில் நினைவுகூரப்பட வேண்டும்.
சின்ன அம்பலவாணர், பெரிய அம்பலவாணர் இருவரும் ஒன்றுவிட்ட சகோதரர்களாக மலேசியாவில் சிறப்பான பதவிகளில் இருந்த காரணத்தினால் அவர்களின் முனைப்பினால் புங்குடுதீவுத் தாம்போதி அமைக்கும் பணி 1935இல் ஆரம்பிக்கப்பட்டு 17 ஆண்டுகள் கடுமையான முயற்சியின் பலனாக 1952ம் ஆண்டு தாம்போதியின் மேலால் மக்கள் பயணிக்கத் தொடங்கினர்.
இம்மாபெரும் சேவையைச் செய்த இவ்விரு அம்பலவாணர்கள் கௌரவிக்கப்படுவது சாலச்சிறந்தது. இவர்களை கௌரவிக்கும் முகமாக இந்தக் கலையரங்கிற்கு அம்பலவாணர் கலையரங்கம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அவர்களின் தீர்க்க தரிசனத்தின் பயனாகவே இன்று நாம் நினைத்தவுடன் விதம் விதமான வண்டிகளில் சவாரி செய்து விரைவில் இவ்விடத்தை வந்தடைகின்றோம்.
அக்காலத்தில் தாம்போதிப் பாலத்தை அமைப்பதற்கு கனரக வாகனங்களோ அல்லது பொருட்களை ஏற்றிச் செல்லக்கூடிய லொறி போன்ற வாகனங்களோ இல்லாத நிலையில் புங்குடுதீவு, வேலணை ஆகிய பகுதிகளில் தோண்டி எடுக்கப்பட்ட கற்களை மாட்டு வண்டில்கள் மூலமாக எடுத்துச் சென்று இத் தாம்போதியை அமைத்தார்கள் எனக் கூறப்படுகின்றது.
17 வருடங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட கடின உழைப்பின் பயனாக 1952இல் இப் பாலத்தின் மேலாக புங்குடுதீவு மக்களும் அவர்களுடன் இணைந்து நயினாதீவு நெடுந்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பிரயாணம் செய்யக்கூடிய வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டியது.
இத் தாம்போதியை அமைத்தவுடன் தமது பணி நிறைவடைந்துவிட்டது எனக் கருதி எவரும் ஒதுங்கிவிடவில்லை. மாறாக பண்ணைப் பாலம் மற்றும் சுகாதார வசதிகள், நீர் வழங்கல் போன்ற விடயங்களிலும் தொடர்ந்து தமது பங்களிப்பைச் செய்து அதிலும் வெற்றி கண்டார்கள்.
புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பல கல்விமான்கள் நாட்டின் பல பகுதிகளிலும் பரந்து வாழ்கின்றார்கள். அவர்களின் சிந்தனைகள் பொதுவாகத் தாம் பிறந்த மண்ணை விருத்தி செய்யும் நோக்கமுடையதாகவே காணப்படுகின்றது என அறிகின்றேன்.
இங்கு பல கல்விமான்கள் உள்ளூரில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்திருக்கிறார்கள். அனைவரின் நோக்கமும் ஒன்றாக சங்கமிக்கின்ற போது கிராமத்தின் அபிவிருத்தி துரிதமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
இவ்வாறான அளப்பரிய சேவைகளை வழங்கிய வாணர் சகோதரர்களின் சிறப்புக்களை இன்றைய இளஞ்சந்ததியினர் அறிந்து கொள்வதற்காக அவர்களுக்கு சிலை அமைத்தல், மடத்துவெளி தாம்போதி ஆரம்பிக்கும் இடத்தில் வளைவு ஒன்றைக் கட்டுதல், அவர்களின் நினைவாக கலையரங்கம் ஒன்றை நிறுவுதல் என்று பல செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறு சமூகப் பெரியோர்கள், கல்வியியலாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்தார்கள்.
அதன் பயனாக கனடாவில் வாழ்ந்துவரும் இக் கிராமத்து உறவுகள் முதலில் வாணர்கள் நினைவாக கலையரங்கம் ஒன்றை அமைத்து புங்குடுதீவு கிராம மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கலாம் என்ற முயற்சியில் இக்கலையரங்கம் சிறப்பாக அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கலையரங்கம் என்பது கூட்டங்கள் நடத்தவும், கல்வியை விருத்தி செய்யவும் வழிசமைக்கும். அழிந்து போகும் தறுவாயில் இருக்கும் பல கலைகளை, பாரம்பரியங்களை, தொழிற்திறன்களை அடையாளங்கண்டு அவற்றிற்கு புத்துயிர் அளித்து இக்கால மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அவற்றை விருத்தி செய்ய நாங்கள் முன்வர வேண்டும்.
வெளிநாட்டவர்கள் எங்கள் கல்வியையும், பாரம்பரியங்களையும், தொழிற்திறன்களையும் கற்றறிய விரும்புகின்றார்கள். அந்த அறிவுகளை நாம் பெற்று பிறர்க்குக் கற்பிக்க முன்வர வேண்டும்.
எமது பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஜனரஞ்சகமான முறையில் கலையம்சம் குன்றாத விதத்தில் எமது கலைகளை மேடையேற்றுதல் சாலப் பொருந்தும் என நான் நினைக்கின்றேன்.
அன்றைய மக்களின் வாழ்க்கை முறைமை மிகவும் எளிமையானதும் சிக்கனமானதுமாக இருந்தது. ஆனால் அவர்களின் மனங்கள் மிகவும் விசாலமானதாகவும் தம்மைப்போல பிறரையும் நேசிக்கின்ற தன்மையையும்கொண்டிருந்தன.
இன்று வசதி, வாய்ப்புக்கள், வருமானங்கள் கூடிவிட்டன. ஆனால் மனங்கள் சுருங்கிவிட்டன. பொறுப்புக்களைத் தட்டிக் கழித்தல் அல்லது அவற்றில் இருந்து ஒதுங்கியிருத்தல் போன்ற சுயநலச் சிந்தனைகள் தலைதூக்கியதன் விளைவே இன்று நாம் அனுபவிக்கின்ற துன்பங்களுக்கு அடிப்படைக் காரணங்கள்.
இவற்றில் இருந்து நாம் விடுபட வேண்டுமாயின் எமக்கு சிந்தனைத் தெளிவு பிறக்க வேண்டும். பிறரை நேசிக்கின்ற தன்மை வளரவேண்டும்.
எமது பிள்ளைகளுக்கும் இவை பற்றிய ஒரு தெளிந்த அறிவையும் சிந்தனையையும் இளம்பராயத்தில் இருந்தே ஊட்டி வளர்த்தல் அவசியமாகும்.
புங்குடுதீவுப் பிரதேசம் விவசாய முயற்சிக்கு மிகச் சிறந்த மண் வளத்தைக் கொண்ட ஒரு பிரதேசம். ஆனால் இன்று பல நூற்றுக் கணக்கான நிலங்கள் தரிசு நிலங்களாக காணப்படுகின்றன.
இங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்தமைக்கு வலுவான காரணங்கள் இருந்த போதும் போர் முடிந்து எட்டு ஆண்டுகளின் பின்இந் நிலங்கள் தரிசு நிலங்களாக இருப்பது எமது பகுதியின் வளங்களை நாமே மண்ணுக்குள் புதைப்பதற்கு ஒப்பானதாகும்.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து பணம் படைத்த சிலர் இப்பகுதிக்கு வந்து அவர்களின் உறவினர்களின் காணிகளை துப்பரவு செய்து அக்காணிகளில் விவசாய முயற்சிக்கு ஆயத்தங்கள் மேற்கொள்வதாக அறிய வருகின்றோம். இச் செய்தி எமக்குமகிழ்வைத்தருகின்றது.
இவ்வாறான முயற்சிகள் மென்மேலும் பெருக வேண்டும். இக் காணிகளில் விவசாய முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் இங்குள்ள மக்களுக்கு தொழில் வாய்ப்புக் கிடைக்கின்றது.
இம் மக்களுக்கான கல்வி வசதி, மருத்துவ வசதி,இருப்பிட வசதி போன்ற வசதிகளும் வெளிநாட்டில் வசிக்கும் உறவுகளால் செய்து கொடுக்கப்படுவதாக அறிகின்றோம்.
இப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் யாவரும் முனைப்புடன் ஈடுபடுவதனூடாக எமது உற்பத்தி உள்ளீடுகள் அதிகரிக்கின்றன என்பதை நாங்கள் மறக்கக் கூடாது.
இங்கு பல செல்வந்தர்கள், முதலீடுகளை மேற்கொள்ளக்கூடியவர்கள் வந்திருக்கின்றீர்கள். அன்று வாணர் சகோதரர்கள் எவ்வாறு இப்பகுதியை முன்னேற்ற பாடுபட்டார்களோ அதே போன்று நீங்களும் இப்பகுதியை வளம் கொழிக்கின்ற ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும் என வினையமாக வேண்டுகிறேன்.
உங்கள் விவசாய முயற்சிகளுக்கு தேவையான அறிவுரைகள் ஆலோசனைகள் என்பவற்றை வழங்குவதற்கு எமது விவசாய அமைச்சு தயார் நிலையில் உள்ளது என்றார்.
























புங்குடுதீவு அம்பலவானர் கலை அரங்கு திறந்து வைப்பு

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila