மக்களின் தொடர் போராட்டமே காணி விடுவிப்புக்கு காரணம்


காணி விடுவிப்புத் தொடர்பில் எவரும் அரசியல் இலாபம் தேடுவதை முற்றுமுழுதாகக் கைவிட வேண்டும்.

போர் முடிந்து எட்டு ஆண்டுகளாகிவிட்ட போதிலும் காணி விடுவிப்புத் தொடர்பில் அரசாங்கங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் மக்கள் தங்கள் காணிகளை எப்படியும் விடுவிப்புச் செய்வதென முடிவு செய்தனர்.
அதற்காக இரவு பகல் என்று பாராது வெயில்  குளிர் என்று நோவாது தொடர் போராட்டம் நடத்தினர்.

மக்களின் தொடர் போராட்டம் காரணமாக அவர்களின் காணிகளை விடுவிக்க வேண் டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது.

எனினும் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தாம் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையாலும் ஜனாதிபதித் தேர்தலின் போது செய்து கொண்ட  ஒப்பந்தம் காரணமாகவுமே நில விடுவிப்பு நடப்பதாக பச்சைப் பொய் கூறுகின்றனர். 

இவ்வாறு கூறுவது மிக மோசமான ஒரு செயலாகும். எல்லாவற்றிலும் அரசியல் இலாபம் தேட நினைப்பது அவ்வளவு நல்லதல்ல. 

உண்மையில் காணி விடுவிப்பு  என்ற விடயம் ஓரளவு வெற்றி அடைவதற்கு தமிழ் மக்கள் நடத்திய தொடர் போராட்டமே மூல காரணமாகும்.

தாமாக உணர்ந்து இனியும் பொறுக்க முடியாது என்ற கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலத்தை மீட்பதென முடிவு செய்தனர்.

இம்மக்களின் நியாயமான போராட்டத்துக்கு மனிதநேயமுள்ளவர்கள் தமது ஆதரவை வழங்கினர்.
தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் மக்கள் நடத்திய போராட்ட பக்கமே தலைவைக்கவில்லை.
இதுவே நிலைமையாக இருக்கையில், 

தங்களால்தான் காணி விடுவிப்பு நடந்தது என உரிமை கோருவது மிகப்பெரும் துரோகத்தனமாகும்.
மக்கள் போராட்டம் நடத்தி நிலத்தை மீட்டெடுத்தனர் என்றால் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அந்த மக்களைப் பாராட்டுவதே நியாயமானதாகும்.

இதைவிடுத்து ஜனாதிபதித் தேர்தலின் போது எந்தவித நிபந்தனையும் இன்றி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவை வழங்கி விட்டு நில மீட்புத் தொடர்பில் ஏலவே உடன்பாடு உண்டு எனக் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைப்பதற்கு ஒப்பானதாகும்.

ஏலவே உடன்பாடு இருந்தால் அதை ஏலவே செய்யாதது ஏன்? ஏற்கெனவே செய்யப்பட்ட உடன்பாட்டில் மக்கள் தங்களை வருத்தி போராட்டம் நடத்தினால்தான் அவர்களின் நிலத்தை விடுவிப்போம் என்ற உடன்பாடுகளும் இருந்தனவா என்ன?

ஆக, போரில் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்த மக்கள் தம்மளவில் ஒன்றுபட்டு நடத்திய தொடர் போராட்டமே நில விடுவிப்புக்கு காரணமாகும்.

இதில் பலர் உரிமை கோர நினைத்தாலும் அது உரிமை கோருபவர்களுக்கு மிகப்பெரும் பாதகமாக அமையும் என்பதே உண்மை.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila