வடக்கில் முதற்கட்டமாக ஆறாயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள அதேநேரம் அம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீனாவுக்கு வழங்குவதற்கும் அமைச்சரவையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
வாராந்த அமைச்சரவை கூட்டத்தொடர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இதன்போது வடக்கில் வீட்டுத்தேவையென்பது மிகவும் அத்தியாவசியமாக காணப்படுகின்ற நிலையில் 65ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டத்தில் முதற்கட்டமாக ஆறாயிரம் பொருத்து வீடுகளை அமைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்ட அமைச்சரவைப்பத்திரம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடமாகாணத்தின் உள்ளூர் பிரதிநிதிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறிக்கையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்து எவ்வாறு என்ற கருத்துப்பட வினாவொன்றை முன்வைத்துள்ளார்.
இச்சமயத்தில் வடக்கில் வீட்டுத்தேவையானது அத்தியாவசியமாக காணப்படுகின்றது. குறிப்பாக அரசாங்க அதிபர்கள் ஊடாக இந்த வீடுகளையாவது நிர்மாணித்து தருமாறு கோரப்பட்டு விண்ணப்பங்கள் கையளிப்பட்டுள்ளன. ஆகவே தான் மிகவும் அவசிய தேவையுடைவர்களுக்காக முதற்கட்டமாக ஆறாயிரம் வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு முன்னெடுப்புக்களைச் செய்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தரப்பினர் பதிலளித்ததையடுத்து அமைச்சரவை குறித்த பத்திரத்திற்கு அங்கீகாரம் அளித்தது.
வடக்கின் காலநிலைக்கு பொருத்துவீடு பொருத்தமில்லை என்பதாலும் குறித்த காலப்பகுதிக்குப் பின்னர் அதனைப் பயன்படுத்த முடியாது என்பதாலும் பொருத்துவீட்டிற்கு கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுவந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கோரப்பட்டது.
இதன்போது அதற்கு எதிர்ப்புக்கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு செல்லவுள்ளார். அதற்கு முன்னதாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவேண்டியுள்ளது. மேலும் நாட்டின் கடன்தொகை நெருக்கடியை தற்போதைக்கு சமாளித்துக்கொள்வதற்கு இவ்வாறான ஒப்பந்தம் அவசியம் எனக் கூறப்பட்டதையடுத்து அவ்வொப்பந்தத்தை சீனாவுடன் மேற்கொள்வதற்கும் அமைச்சரவை இணக்கம் வெளியிட்டு அங்கீகாரத்தையும் அளித்துள்ளமை குறிப்பிடத்தது.