சுயநலத்தினால் பொருளாதார நிலையம் முடக்கம் :முதலமைச்சர் கவலை!


Wigneswaran

வடமாகாணத்தில் ஒரு பொருளாதாரச் சந்தையை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது இடத்தைத் தேர்ந்தெடுப்பதில்,அப்பகுதிகளில் கடைகளை அமைத்தல், அவற்றை வாடகைக்கு விடுதல் என அனைத்து நடவடிக்கைகளிலும் சுயநலமான சிந்தனைகள் மேலோங்கியதால் அத்திட்டங்கள் கைகூட தாமதமானது.

எமது விவசாயிகளும் தமக்குக் கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்களை மறந்து ஏவிவிட்டவர்கள் பக்கத்திற்கு எழுந்து நின்று கூச்சல் போட்டதால் நிலைமைகள் குழப்பப்பட்டு ஈற்றில் பொருளாதார மத்திய நிலைய நடவடிக்கைகள் பின்தள்ளிப் போனது. அப்படி இருந்தும் சுயநலத்துடன் ஈடுபட்டோரே எம்மைக் குறைகூறுகின்றார்களென கவலை வெளியிட்டுள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.

இவற்றை நாம் பொருட்டாக எடுக்காவிடினும் எமது விவசாய முயற்சிகள் ஸ்திரமானதும் நிலையான வளர்ச்சி பெறக்கூடியதுமான ஒரு நிலையை அடைய எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதே போன்று சந்தை வாய்ப்புகளுக்கான மத்திய நிலையம் ஒன்று வட மாகாணத்தில் அமைக்கப்படும் பட்சத்தில் இங்குள்ள விவசாய உற்பத்திப் பொருட்கள் அம் மத்திய நிலையத்தில் விற்பனை செய்வதற்கும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள விவசாயிகள் இங்கே வந்து பொருட்களை கொள்வனவு செய்யவும் அதே நேரம் தமது பகுதிகளில் உற்பத்தி செய்கின்ற பொருட்களை கொண்டு வந்து இங்கு விற்பனை செய்யவும் ஏற்ற ஒரு தளத்தை நாம் உருவாக்க முன்வர வேண்டும்.அதன் மூலமாக அதனோடு அண்டிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் உருவாவன. உணவகங்கள் அதிகரிக்கப்படுவன. தொழில் வாய்ப்புக்கள் அதிகரிப்படுவன. ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு பல்வேறு தரத்திலான வேலைவாய்ப்புக்கள் கிட்ட வழிவகுக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் உலக வங்கியின் அனுசரணையுடன் வடமாகாணத்தில் விவசாயத்துறை நவீன மயமாக்கல் செயற்திட்டத்தின் ஆரம்பக் கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.நகரில் இடம்பெற்றிருந்தது.

அங்கு கலந்து கொண்டு தனது கருத்துக்களினை பகிர்ந்த முதலமைச்சர் வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய தொழில் முயற்சியான விவசாயம் விருத்திசெய்யப்படுதல் அவசரமானதும் அவசியமானதுமாகும். இப்பகுதியில் உள்ள பாரம்பரிய விவசாயிகள் பல்வேறு காரணங்களால் தமது விவசாய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் உரிய சந்தை வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதற்கும் சிரமப்படுவதையும் அக் காரணங்களால் தமது விவசாய முயற்சிகளில் இருந்து ஒதுங்கி வேறு சிறு தொழில்கள் புரிய முனைவதையும் அவதானித்திருக்கின்றோம்.

வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இங்கு நீர்த்தேவைக்கான ஆறுகளோ அல்லது நீர்வீழ்ச்சிகளோ இல்லாத நிலையில் நிலத்தடி நீரை நம்பியே எமது விவசாய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. அண்மைக் காலமாக விவசாய நிலங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் அளவுக்கதிகமான உரப்பாவனைகள் மற்றும் பூச்சிகொல்லிப் பாவனைகள் எமது நிலத்தடி நீரைப் பருக முடியாத அளவிற்கு அதை நஞ்சாக்கி விட்டது. எத்தனையோ நூற்றாண்டுகளாக விவசாய முயற்சிகளில் எமது விவசாயிகள் ஈடுபட்டுவந்துள்ளார்கள். ஆனால் விவசாய நிலங்கள் அண்மைக் காலங்களில் மட்டும் இவ்வாறு நச்சடைந்தமைக்கும் மழை காலத்திற்கு வராமைக்கும், நீர்பற்றாக் குறைக்கும் காரணங்கள் கண்டறிதல் அவசியமாகும்.

புற்றரைகள் பலதும் கற்றரைகளாக மாற்றப்பட்டமை, பனந்தோப்புக்கள், மரச்சோலைகள் அகற்றப்பட்டு அங்கே மாடிவீடுகள் அமைக்கப்பட்டமை, வீட்டைச் சுற்றியும், தோட்ட வயல் நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களைச் சுற்றியும் வரம்புகள் அமைத்து மழை நீரைத் தேக்கி நிலத்தடி நீரின் அளவை பேணுகின்ற நடைமுறையைக் கைவிட்டமை,சிறு சிறு குளங்களை தூர்வை வாரி நீரை சேமித்து வைக்க முயற்சி செய்யாமை,சேதனப் பசளைகள் பாவனைக்குப் பதிலாக இரசாயன உரக்கலவைகளின் பாவனை மற்றும் மாற்றுப் பயிரீட்டு முறைமைகள் இல்லாமல் ஆக்கப்பட்டதால் அதிகரிக்கப்பட்ட நோய்த்தாக்கங்கள், பூச்சித் தாக்கங்கள் அதன் காரணமான கிருமிநாசினிப் பாவனைகள் போன்ற பல தவறான நடவடிக்கைகள்நிலத்தடி நீர் அசுத்தமாவதற்கும்நீர்ப்பற்றாக் குறைக்கும் காரணங்களாக அமைந்து விட்டன. மலக் கழிவுகள் நீருடன் கலப்பதும் ஒரு பாரிய பிரச்சனையாகும்.

இதன் தாற்பரியம் என்னவென்றால் விவசாயத்தின் ஆத்மார்த்த சாராம்சத்தைப் புரிந்து கொள்ள மறந்து விட்டோம். நாம் வாழ்வது இந்தப் பூமியில். அதனோடு இயைந்து வாழப்பழகிக் கொள்ளாவிட்டால் அதன் எதிர்மறையான தாக்கத்திற்கு நாங்கள் இடங்கொடுக்க வேண்டிவரும். ஆகவே சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு இல்லாமல் விவசாயிகள் வாழ்ந்து வந்த உலகத்தில் சுய நலம் தலைவிரித்தாடத் தொடங்க அது விவசாயத்தையும் பாதிக்கத் தொடங்கிவிட்டது. விவசாயமானது நீரையும் நிலத்தையும் காற்றையும் நட்பன்புடன் பேணுவது போல் செயற்பட வேண்டும்.
நாம் இயற்கையில் இருந்து வளங்களை எடுக்கின்றோம். அதற்கேற்றவாறு இயற்கைக்கும் பாதுகாப்பு அளிப்பது எங்கள் கடமையாகும். உதாரணமாக நச்சுப் பொருட்களை நீர் நிலத்துடன் சேர்ப்பது நாம் இன்னொருவருக்கு நஞ்சை ஊட்டி கொலை செய்வதற்குச் சமமாகும். ஆகவே நச்சுத்தன்மை பொருந்திய கிருமி நாசினிகளும், உரவகைகளும் நிலத்தைப் பாதிக்க வைக்கின்றன. இதிலிருந்து விடுபட்டு நிலத்தை எமது நண்பராகப் பாவிப்பதில்த்தான் இயற்கை இயைபை நாம் பேண முடியும். இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு எமது விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

சின்ன வெங்காயச் செய்கையில் கிட்டத்தட்ட இலங்கையின் தேவையில் அரைப்பங்கிற்கு கூடுதலான தேவைகளை நிறைவு செய்த வடமாகாணம் இன்று வடமாகாணத்திலுள்ள மக்களுக்கே சின்ன வெங்காயம் முழுமையாகக் கிடைக்காத நிலைக்குவந்துள்ளது. வாழைப்பழ உற்பத்தியில் நாம் முன்னணி வகிக்கின்ற போதும் உற்பத்தியாளர்களின் அவசரங்களும் பண ஆசைகளும் மற்றும் அலட்சியத் தன்மையும் வாழைப்பழத்தின் தரத்தினை வெகுவாகக் குறைத்து விட்டது. மிளகாய் பயிர்ச்செய்கை கூட தற்போது மிகவும் குறைவடைந்து விட்டது. சிறிமாவோ அம்மையார் அவர்கள் பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் வட கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையோர் வன்குடியேற்றம் முடுக்கி விடப்பட்டிருந்தாலும் விசுவமடு போன்ற இடங்களில் ஊக்குவிக்கப்பட்ட மிளகாய்ப் பயிர்ச் செய்கையே யாழ்ப்பாணத்தில் மிகக் கூடுதலான கல் வீடுகள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது என்று கூறுவார்கள். அது போன்று கரட், கோவா, லீக்ஸ், முள்ளங்கி, பீற்றூட், கிழங்கு ஆகிய அனைத்து மரக்கறி வகைகளும் ஒரு காலத்தில் மலைநாட்டு மரக்கறிகளாகவே அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இன்று இவை அனைத்தும் இங்கே உற்பத்தி செய்யப்படுகின்ற போதும் இரண்டு குறைபாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று அளவுக்கதிகமான செயற்கை உரப்பாவனை மற்றது சந்தை வாய்ப்பின்மை. செயற்கை உரப்பாவனையைக் குறைத்து இயற்கை உரத்தைப் பாவிப்பது நீண்டகால நிலையான பாதுகாப்புள்ள விவசாயத்திற்கு இடங்கொடுக்கும். அடுத்து எமது சந்தை வாய்ப்புக்கள். இன்று முறையான சந்தை வாய்ப்புக்களைப் பெறுவதற்கு தம்புள்ளையில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கே பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

இந்த நிலையில் விவசாயத்தை நவீன மயப்படுத்த வேண்டிய நிலை எழுந்துள்ளது. விவசாயத்தை நவீனமயப்படுத்த மூன்று குறிக்கோள்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று – விவசாயப்பொருட்களை அதிகூடிய பெறுமதிசேர் பொருட்களாக விருத்தி செய்தல், இரண்டு – சந்தைக்கேற்றவாறு முக்கியமாக வெளிநாட்டுச் சந்தைக்கேற்றவாறு விவசாயத்தை மாற்றி அமைத்தல், மூன்று – செயற்றிட்ட முகாமைத்துவம், மேற்பார்வை, தொடர் மதிப்பீடு ஆகியவன சம்பந்தமாகத் திறம்படச் செயலாற்றல். இவை பற்றி இன்று நிபுணர்கள் பரிசீலிப்பார்கள். ஆனால் விவசாயத்தின் ஆத்மார்த்த சாராம்சத்தைப் புரிந்து கொண்டே எமது நடவடிக்கைகளில் நாம் இறங்க வேண்டும். நாம் இந்த பாரிய உலகின் ஒரு பகுதியே என்பது கருத்துக்கெடுக்கப்பட வேண்டும்.

இன்றைய இந்த நிகழ்வில் நாம் உலகவங்கிக் கடன் ஊடாகப் பெற்றிருக்கும் நிதி மூலம் நடாத்தவிருக்கும் விவசாயத் துறை நவீன மயமாக்கல் செயற்திட்டத்தை ஆராய இருக்கின்றோம்.இதன் போது எமது விவசாயிகளுக்கு எவ்வாறு நிலையான விதத்தில் உதவ முடியும் மற்றும் அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்புக்களையும் அதிகூடிய விலைகளையும் இடைத்தரகர்கள் அற்ற நிலையில் எவ்வாறு பெற்றுக் கொடுக்க முடியும் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட இருக்கின்றன. எமது உறுப்பினர்கள் கட்டாயமாக அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் இங்கு ஆராயப்படுவன என்று நம்புகின்றேன். யாழ்ப்பாணம், முல்லைத்தீவுகளிலேயே முதற்கட்ட நடைமுறைப்படுத்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila