பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பிரகாரம் அவர் மீண்டும் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை புறக்கணித்தும், இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியும் பிரித்தானியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கழுத்தில் கையை வைத்து அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்ட பிரிகேடியருக்கு எதிராக உலக நாடுகளின் பல்வேறு அமைப்புக்கள் வலியுறுத்தி வந்தன.
அதனைத் தொடர்ந்து அவர் பணியிலிருந்து விலக்கப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று மாலை அறிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், அவரை மீளவும் பதவியில் அமர்த்துமாறு ஜனாதிபதி மைத்திரி இன்று உத்தரவிட்டுள்ளார்.