நினைத்ததும் நடந்ததும் -பி. மாணிக்கவாசகம்உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள், மாற்றுத்தலைமை
மீதான மக்களுடைய ஆர்வத்தையும் அக்கறையையும் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. வேறு வேறு அரசியல் தளத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும், சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் மாற்றுத் தலைமைக்கே இந்தத் தேர்தலில் ஆணை வழங்கியிருக்கின்றார்கள். 

இருப்பினும் வடக்கு–கிழக்குப் பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் தமிழ் அரசியலின் செல்நெறியில் எழுந்துள்ள பாதகமான ஒரு நிலைமை குறித்து இந்தத் தேர்தல் அபாய அறிவிப்பை அமைதியாகச் செய்திருக்கின்றது. இந்த அறிவித்தல் குறித்து தமிழ் அரசியல் தளத்தில் பொறுப்புள்ளவர்கள் உரிய முறையில் கவனம் செலுத்தத் தவறியுள்ள நிலைமையையே காண முடிகின்றது.

தென்பகுதிகளில் உள்ள மக்கள் தமது வாக்களிப்பின் மூலம் ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டிணைந்த அரசாங்கத்தின் மீதான தமது அவநம்பிக்கையை வெளிப்படுத்தி, நல்லாட்சி அரசாங்கம் என்று கருதப்பட்ட கூட்டு அரசாங்கத்திற்கு எதிராகவே வாக்களித்திருக்கின்றார்கள். அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்திற்குப் பதிலாக முன்னாள் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொது எதிரணியினரை, அவர்கள் புதிய தலைமைத்துவத்திற்குத் தெரிவு செய்திருக்கின்றார்கள். இதில், அவர்களுடைய ஆணை தெளிவாக உள்ளது.

வடக்கிலும் கிழக்கிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பை குறிப்பிட்டு கூறத்தக்க வகையில் புறந்தள்ளி, சைக்கிள் சின்னத்திலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை மக்கள் முன்னிலைப்படுத்தியிருக்கின்றார்கள். அதேவேளை, தேசிய கட்சிகளுக்கும் சுயேச்சை குழுக்களுக்கும் கூட அவர்கள் தமது ஆதரவை அளித்திருக்கின்றார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியையும், அதனோடு இணைந்ததாக மாற்றுத்தலைமை வேண்டும் என்ற கோஷத்திற்கு செவிசாய்த்து அவர்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.

இது தெற்கைப் போலல்லாமல், குழம்பிய ஆணையாக உள்ளது. இதனால்தான் தெற்கில் சபைகள் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றியடைந்திருக்கின்றன. வட கிழக்கில் சபைகள் தொங்கு நிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.

தெற்கிலுள்ள மக்களுடைய உள்ளூராட்சித் தேர்தல் ஆணை என்பது, முழுக்க முழுக்க இனவாதம் சார்ந்தது. இனப்பிரச்சினைக்கு தமிழ் பேசும் மக்களால் ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியல் தீர்வைப் புறந்தள்ளியது. இனவாதப் போக்கிலான, தீவிர சிங்கள பௌத்தவாத அரசியல் கொள்கைக்கான அங்கீகாரமாகவும் இந்த ஆணையைக் கருத முடியும். ஏனெனில், பௌத்த சிங்களவாத அரசியல் நிலைப்பாட்டை, முழுமையான அடிப்படை அரசியல் கொள்கையாகக் கொண்டுள்ள மஹிந்த ராஜபக் ஷ அணியினருக்கு அந்த மக்கள் அமோகமாக ஆதரவை வழங்கியிருப்பது, இதற்கு ஆதாரமாகக் காணப்படுகின்றது.

மஹிந்த ராஜபக் ஷவின் அரசியல் கொள்கை, மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டுக்கு அப்பால் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் இனவாதப் போக்கில் அவர் மேற்கொண்டு வந்த தேர்தல் பரப்புரையை ஏற்று, சிங்கள மக்கள் அவருடைய அணியை ஆதரித்திருக்கின்றார்கள். இதனால்தான், அவர்களுடைய ஆணையை இனவாதத்திற்கான ஆணை என்று கருத வேண்டியுள்ளது.

வடக்கையும் கிழக்கையும் பொறுத்த வரையில் சிங்கள மக்கள் வழங்கியிருப்பதைப் போன்ற தெளிவான ஆணையைக் காண முடியவில்லை. ஆயினும், இந்த மக்களுடைய ஆணை பெருமளவில் அரசியல் உரிமை சார்ந்தது. இன விடுதலையைத் தழுவி அவாவி நிற்கின்றது. இது, தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும், தமிழ்த்தேசிய முன்னணிக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட தமிழ்த்தேசிய கொள்கை சார்ந்த கட்சிகளுக்கும், சுயேச்சை குழுக்களுக்கும் மக்கள் அளித்த ஆதரவின் வெளிப்பாடு.

தேசிய மட்ட அரசியல் கட்சிகளின் பிரவேசம்

ஆனால், ஒரு சாராரான தமிழ் மக்கள் தேசிய மட்டத்திலான சிங்களக் கட்சிகளுக்கும் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் அதிகமாக வாக்களித்திருக்கின்றார்கள். இது, பல்வேறு தேவைகளையும், உள்ளூர் மட்டத்திலான அபிவிருத்திகளையும் அவாவி நிற்கின்ற போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைத் தமது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்தி அரசியல் செய்கின்ற தென்னிலங்கையின் இனவாதப் போக்குடைய கட்சிகளின் அரசியல் பிரவேசத்திற்கு வழி வகுத்திருக்கின்றது.

ஏனெனில் வடக்கிலும் கிழக்கிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் சரி, சுரேஷ் பிரேமச்சந்திரனின் முயற்சியில் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியும் சரி, தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளையும், அதற்கானதோர் அரசியல் தீர்வையும் அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை முன்வைத்தே, தேர்தலில் போட்டியிட்டார்கள். இதேபோன்று, சில சுயேச்சை குழுக்களின் தேர்தல் கொள்கைகளும்கூட, தமிழ் மக்களுடைய அரசியல் உரிமை சார்ந்ததாகவே அமைந்திருக்கின்றன.

ஆனால், அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் போனதாலும், அபிவிருத்திப் பணிகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படாத காரணத்தினாலுமே, அதிருப்தியுற்ற மக்களில் ஒரு பகுதியினர், தேசிய கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள். இது, இதுவரை காலமும் இல்லாத வகையில், வடக்கிலும் கிழக்கிலும் அரசியல் ரீதியாக, சிங்களக் கட்சிகளைக் கால் ஊன்றச் செய்திருக்கின்றது.

கடந்த காலத் தேர்தல்களில் தேசிய கட்சிகள் வடக்கிலும், கிழக்கிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. அது, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானது. வளர்ச்சிப் போக்கைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் உள்ளூர் மட்டத்திலான பணிகளுக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்ற தொகுதி முறையும், விகிதாசார முறையும் கொண்ட கலப்புத் தேர்தலில் அந்தக் கட்சிகள் பலம் பெற்றிருப்பது மாகாணம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் அவைகள் இன்னும் பலமடைவதற்கான வாய்ப்பையே ஏற்படுத்தியிருக்கின்றன.

விகிதாசாரத் தேர்தலிலும் பார்க்க, கலப்பு முறையிலான தேர்தல் முறையானது, அடிமட்டத்தில் இருந்து எழுகின்ற பிரதிநிதிகளுக்கே மாகாணம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் அரசியல் ரீதியான வெற்றி வாய்ப்புக்கான அடித்தளத்தைக் கொண்டிருப்பதே இதற்கான காரணமாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும், ஐக்கிய தேசிய கட்சியுடனும் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ள சில அரசியல்வாதிகளும், தேசிய கட்சிகளை ஆதரித்து, அதன் ஊடாக தமது பிரச்சினைகளைத் தீர்த்து, அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு, தேசிய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தவர்களும் இதற்கான வழியைத் திறந்து விட்டுள்ளார்கள்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக் ஷ, விடுதலைப்புலிகளின் இரும்புப் பிடியில் இருந்து தமிழ் மக்களை விடுவித்து, அவர்களுடைய வாழ்க்கையில் அமைதியை ஏற்படுத்தி வாழச் செய்துள்ளதாக மேற்கொண்ட அரசியல் பிரசாரங்களின் மூலம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெல்ல முயன்றார். மறுபக்கத்தில், இராணுவ கெடுபிடிகளை அதிகமாக்கி, இராணுவ ஆட்சிக்குள் அந்த மக்களை அடக்கி வைத்து அச்சுறுத்தி, அவர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொள்ளவும், அதன் ஊடாக வடக்கு, கிழக்குப் பிரதேசத்தில் அரசியல் ரீதியாகக் கால் ஊன்றவும் முயன்றிருந்தார்.

ஆனால், விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாகக் காட்டி, அவர்களின் எழுச்சியைத் தடுத்து சமாதானத்தை நீடிக்கச் செய்ய வேண்டும் என்ற அவருடைய அரசியல் ரீதியான பிரசார உத்தி வெற்றியளிக்கவில்லை. இராணுவ மயப்படுத்தலையும், மக்களை அச்சுறுத்தி பணியச் செய்வதையும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெல்வதற்கான அரசியல் வழிமுறையாக அவர் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய இந்த உத்திகள் பலனளிக்கவில்லை. மாறாக அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், அவர் மீதான எதிர்ப்பு, ஓர் அரசியல் அலையாக எழுந்து 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் பலமாக அவரைத் தாக்கியிருந்தது.

ஆனால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவின் ஊடாக ஆட்சியைக் கைப்பற்றிய நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாகிய ஜனநாயக வெளியைப் பயன்படுத்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன என்பன இந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக இடம்பிடித்துக் கொண்டுவிட்டன.

இது, அரசியல் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுடைய அரசியலுக்கும், இருப்புக்கும் ஆபத்தானது. இந்த அரசியல் வளர்ச்சி அல்லது இப்போது ஏற்பட்டுள்ள திருப்பம் தமிழ் மக்களின் தேசிய கொள்கையையும், அரசியல் ரீதியாக அவர்கள் ஒன்றிணைய வேண்டிய தேவையையும் வேரறுக்க வல்லது. நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் இந்த ஆபத்து உருவாகி இருப்பதை கண்கூடாகக் காண முடிகின்றது.

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டைத் தகர்த்தெறியும் நோக்கில், பல்வேறு இடங்களில் வலிந்து சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்களவர்களின் மீள்குடியேற்றம் என்ற பெயரிலான சிங்களக் குடியேற்றங்கள், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பல்வேறு பெயர்களிலும் வழிமுறைகளிலும் அவைகள் இன்னும் தொடர்கின்றன.

அது மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பை முதன்மைப்படுத்தி இராணுவத்தினர் நிலைகொள்ளச் செய்யப்பட்டு இராணுவ மயப்படுத்தப்பட்டிருக்கின்றன. யுத்தம் முடிவடைந்த பின்னர், இராணுவ பிரசன்னம் அவசியமில்லை என்ற நியாயமான கோரிக்கை தேசிய பாதுகாப்பு என்ற கவசத்தினால் மழுங்கடிக்கப்பட்டிருக்கின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக பௌத்தர்கள் இல்லாத தமிழ் பிரதேசங்களில் வலிந்து புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பௌத்த விகாரைகளை நிறுவும் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இதன் ஊடாக மத ரீதியான ஆக்கிரமிப்பும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

இத்தகைய ஒரு பின்னணியில், அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று சிங்கள இனவாதப் போக்குடைய அரசியல் கட்சிகள் கால் ஊன்றும் கைங்கரியம் ஆரம்பமாகியிருக்கின்றது, இது தமிழ் மக்களின் உரிமை அரசியல் உளவியல் மீதான ஒரு ஆபத்தான பாய்ச்சல். அரசியல் இருப்பை மடடுமல்லாமல் தமிழ் மக்களின் இனக் குழும ரீதியான இருப்புக்கும் இது பேராபத்தை ஏற்படுத்த வல்லது.

நடந்தது என்ன?

தமிழ் அரசியல் கட்சிகளின் அரசியல் தூரநோக்கற்ற போக்கும், ஒன்றிணைந்த அரசியல் செயற்பாடுகளைத் தவிர்த்து, தங்களுக்குள் அரசியல் ரீதியாக மோதிக்கொள்கின்ற செயற்பாடுகளுமே, பாதிக்கப்பட்ட மக்களை, தேசிய கட்சிகளின் பக்கம் சாயச் செய்திருக்கின்றது. இது சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் பார்க்க, சண்டைக்காரன் காலில் விழுந்து போரினால் பாதிக்கப்பட்ட தமது வாழ்க்கையை மறுசீரமைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையை, அந்த மக்கள் செயற்படுத்துவதற்குத் தூண்டியிருக்கின்றது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் இரண்டு அரசாங்கங்களும் தேசிய மட்டத்தில் சமாதானத்தையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்காக, யுத்தகால கசப்பான அனுபவங்களை மறக்கடிக்கச் செய்யும் வகையில் தேசிய நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

ஆனால் முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்க முயற்சிகள் உண்மையான நல்லிணக்க முயற்சிகளாக இருக்கவில்லை. சிங்கள மக்களினதும், இராணுவத்தினரதும், ஆட்சி அதிகாரம் கொண்டவர்களினதும் நன்மைகளை முன்னிறுத்திய செயற்பாடுகளாகவே அவைகள் அமைந்திருந்தன. அதனால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதப் பயனும் கிடைக்கவில்லை. அந்த நல்லிணக்க முயற்சிகளும் வெறும் வாயளவு நடவடிக்கைகளாகவே முடிந்து போயின.

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நல்லிணக்க நடவடிக்கைகள் சமகால பிரச்சினைகளைத் தழுவி, அவற்றுக்குத் தீர்வு காண்பதன் ஊடாக மக்களின் மனங்களை வெல்வதற்குப் பயன்படவில்லை. நல்லிணக்கச் செயற்பாடுகள் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளும், யுத்த காலத்து உரிமை மீறல்கள், யுத்த குற்றங்களுக்கான பொறுப்பு கூறுதலை வழிமாற்றி, அதனைப் புறந்தள்ளி இழுத்தடிக்கும் உத்தியைக் கொண்டதாக, சர்வதேசத்திற்குப் போலியானதொரு தோற்றத்தைக் காண்பிப்பதற்கான முயற்சிகளாகவே அமைந்திருக்கின்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுவதாக உறுதியளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைக்காக வடக்கிற்கு வந்தபோது, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிப்பார்த்தேன். அவர்களை எங்கும் காணவில்லை. அவர்களை மறைத்து வைப்பதற்கான இரகசிய முகாம்களையும் காணவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை வேண்டுமானால் தரலாம் என்று கூறிச் செல்லும் அளவிலேயே இந்த அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

நல்லிணக்கம் என்பது தமிழர் தரப்பில் மட்டுமே விட்டுக்கொடுப்பது என்ற ரீதியிலேயே செயற்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆட்சி அமைப்பதற்காக நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்பட்டதுபோலவே, ஏனைய விடயங்களிலும் விட்டுக்கொடுத்தல் இடம்பெற்று வருகின்றது. ஆட்சியை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்கான பகீரத முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்ற எதிரணியினராகிய மஹிந்த அணியினருடைய எழுச்சிக்கு வழி வகுத்துவிடக்கூடாது என்பதற்காக அநேகமாக எல்லா விடயங்களிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்திற்கு விட்டுக் கொடுத்துச் செயற்பட்டு வந்துள்ளது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுக்களில் தமிழர் தரப்பே விட்டுக் கொடுக்க வேண்டும். பேச்சுக்களில் விட்டுக் கொடுப்பின்றி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் தத்துவம் பேசப்பட்டது. அத்தகைய விட்டுக்கொடுப்பின் உச்சக் கட்ட வெளிப்பாடே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் முன்னோடி நிகழ்வாக வெளிவந்துள்ள தமிழ் மக்களுக்குப் பயனளிக்காத வெற்று அறிக்கை என்று காரசாரமாக விமர்சிக்கப்பட்டு, சில தரப்பினரால் நிராகரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையாகும்.

நல்லிணக்க முயற்சியில் நல்லாட்சி அரசாங்கமும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் ஓர் அணியாகக் கைகோர்த்துச் செயற்பட்டிருக்கின்றன.

ஆயினும் இந்த முயற்சிகள் தமிழ் மக்களுடைய உடனடி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவவில்லை. அவர்களுடைய அரசியல் அபிலாஷைகளை அங்கீகரிக்கவும் இல்லை. ஆனால், அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதற்கோ, தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், அவர்களுடைய நாளாந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் அரசாங்கத்துக்கு நேரடியாக அழுத்தங்களைக் கொடுப்பதற்கு இதுவரையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை காத்திரமாகச் செயற்பட்டிருக்கவில்லை.

காணிகளை விடுவித்தல், மீள்குடியேற்றம், காணாமல் போயிருப்பவர்களுக்குப் பொறுப்பு கூறுதல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல பிரச்சினைகளிலும், தங்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் உரிய முறையில் செயற்படத் தவறியிருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட மக்களே வீதிகளில் இறங்கிப் போராடுகின்றார்கள். காணாமல் போனோருக்காகப் போராடுபவர்களும், காணிகளை விடுவிப்பதற்காகப் போராடுபவர்களும் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக தமது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள்.

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று

ஆனால், இந்தப் போராட்டங்களுக்கு வலிமை சேர்த்து, அரசாங்கத்தை நெருக்கி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அந்தப் போராட்டங்கள் மஹிந்த ராஜபக் ஷவின் எழுச்சிக்கே வழிவகுக்கும் என்று தமிழ் மக்களை அரசியல் ரீதியாக அச்சமடையச் செய்யும் வகையில் செயற்பட்டிருந்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைப் பெயரளவில் சந்தித்த பின்னர், ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை நடத்திய சில பேச்சுவார்த்தைகளில் பலன் கிடைக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடனான சந்திப்பின் போது அரச தலைவர்களினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் வெறும் வார்த்தை ஜாலங்களாகவே மாறிப்போயின.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கான செயற்பாடுகளும் பாதிக்கப்பட்ட மக்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக, அதனை உட்படுத்துவதாக அமையவில்லை. நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று, அவர்கள் நேரடியாகத் தெரிவித்து வலியுறுத்தியிருந்த கருத்துக்கள் உள்ளடக்கப்படவில்லை. அந்த நீதிப்பொறிமுறைகளில் செயற்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காணாமல் போனோருக்கான அலுவலக உருவாக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களாகிய காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களது பிரதிநிதிகளைப் பங்கெடுப்பதற்கும் அனுமதிக்கப்படவில்லை.

இத்தகைய நல்லிணக்க முயற்சிகளில்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை இதுவரையில் அரசாங்கத்துடன் இணைந்து விட்டுக்கொடுத்துச் செயற்பட்டு வந்திருக்கின்றது. விட்டுக் கொடுப்பதற்கும் ஓர் எல்லை உண்டு. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய சமிக்ஞைகளும், பிரச்சினைகளைத் தீர்வு நோக்கி நகர்த்துகின்ற அணுகுமுறைகளும் அற்ற நிலையில் எத்தனை காலத்திற்குப் பொறுமை காக்க முடியும்? எத்தனை காலத்திற்குத்தான் விட்டுக் கொடுக்க முடியும்? விட்டுக் கொடுத்துச் செயற்படுவதன் ஊடாக அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதன் மூலம் அடைந்த பலன்தான் என்ன? பலன்கள் கிடைக்கும் என்பதற்கான அறிகுறிகள் ஏதாவது காணப்படுகின்றதா? எதற்குமே காத்திரமான பதில் இல்லை.

ஆனால் தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்தினால், அதனைச் சாட்டாக வைத்து அரசாங்கத்தின் இருப்பை இல்லாது செய்துவிடக்கூடிய மஹிந்த ராஜபக்ஷ அணியினர் அரசியல் ரீதியாகப் பலம் பெற்றுவிடுவார்கள், அவருடைய மீள் வருகை தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமைந்துவிடும் என்று தமிழ் மக்களுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை அரசியல் ரீதியான அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தனர். பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தாங்களாகவே நடத்தி வருகின்ற போராட்டங்களினால் அத்தகைய நிலைமை உருவாகவில்லை. மாறாக, புதிய அரசியலமைப்பில் அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியில் வெளிவந்த இடைக்கால அறிக்கையையே தேர்தல் காலப் பிரசாரப் பொருளாக மாற்றி நல்லாட்சி அரசாங்கம் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு விலைபோய்விட்டது என்ற இனவாத விஷத்தைப் பரப்பி மஹிந்த ராஜபக் ஷ இன்று சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாகப் பலமடைந்திருக்கின்றார்.

ஆக, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நினைத்ததும் எதிர்பார்த்ததும் ஒன்று. நடந்திருப்பதோ அதற்கு எதிரான ஒன்று. நாட்டு நடப்புகளை ஊன்றிக் கவனித்து, அரசியல் போக்கின் திசைகளை உரிய முறையில் எடைபோட்டு, எதிர்கால நிலைமைகளை ஓரளவுக்காவது, அனுமானிக்கின்ற அரசியல் தீர்க்கதரிசனம் தமிழ் அரசியல் தலைவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒற்றுமைக்கான குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும்

தேசிய அரசியலில் மாத்திரமல்ல தமிழ் மக்கள் மத்தியில் செயற்படுகின்ற தமிழ் அரசியல் கட்சிகளை, அரசியல் ரீதியாக இராஜதந்திர ரீதியில் கையாண்டு, ஒற்றுமையும் உறுதியும் மிக்கதோர் அரசியல் தலைமையைக் கட்டியெழுப்ப முடியாத கையறு நிலையிலேயே தமிழ் அரசியல் காணப்படுகின்றது.

இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமைப் பொறுப்பை ஏற்று, அவர்களின் ஏகப் பிரதிநிதிகளான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழரசுக் கட்சியினால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பை, சிதறவிடாமல் கட்டிக்காக்க முடியாமல் போயிருக்கின்றது.

அந்தத் தலைமை, பங்காளிக்கட்சிகள் கூட்டமைப்பில் இருந்து ஒவ்வொன்றாகப் பிரிந்து செல்வதற்கே வழியேற்படுத்தியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், கூட்டமைப்புத் தலைமையின் செயற்பாடுகள், மாற்றுத்தலைமை ஒன்றை நோக்கிய அரசியல் நகர்வுக்கு களம் அமைத்துக் கொடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. அது மட்டுமல்லாமல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையையே முற்று முழுதாக நம்பி, ஓரணியில் ஒற்றுமையாகக் கட்டுண்டு கிடந்த தமிழ் மக்களை அரசியல் ரீதியாகச் சிதறச் செய்வதற்கும் வழி வகுத்திருக்கின்றது.

இன்றைய இந்த அரசியல் நிலைமை தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் மிகவும் கவலைக்குரியது. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கத் தக்க மாற்றத்திற்கான வலுவானதோர் அத்திவாரமாகும். இந்த ஆபத்தில் இருந்து மீள்வதற்குரிய வழி வகைகள் குறித்து இப்போது தீவிரமாகச் சிந்திக்க வேண்டியது அவசியம். தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் அரசியல் தலைவர்களும், நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் வெற்றிக் களிப்பில் மிதப்பதையும் தோல்வியில் துவண்டு தவிப்பதையும் கைவிட வேண்டும். உள்ளூராட்சித் தேர்தலினால் விளைந்துள்ள அரசியல் நிலைமைகளின் யதார்த்தத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கட்சி அரசியலையும், அது சார்ந்த அரசியல் அனுகூலங்களையும் சார்ந்து செயற்படுகின்ற போக்கிற்கு உடனடியாகக் கடிவாளம் இட வேண்டும். தமிழ் மக்களும், அவர்களின் அரசியல் அபிலாஷைகளும் அரசியல் சிந்தனையில் முதன்மை பெற வேண்டும். தேவையான அளவு விட்டுக்கொடுப்புடன் கூடிய தமிழ் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாட்டை வலியுறுத்தி, பரவலாக எழுந்துள்ள ஒற்றுமைக்கான குரலுக்கு செவிசாய்த்து உறுதியாகச் செயற்பட தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும். இது, இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila