சமஷ்டியை ஒத்ததான தீர்வென்பதும் ஒஸ்லோ கோட்பாடென்பதும் அபத்தம் – பனங்காட்டான்


Sumanthiran

சமஷ்டி இல்லை, வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை, இனப்பிரச்சனைக்குத் தீர்வு இல்லை, இடைக்கால அறிக்கையில் எதுவும் இல்லை என்ற நிலையில் மக்கள் முன்னால் சொல்ல ஒன்றுமில்லையென்ற நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள கூட்டமைப்பு, சம்பந்தா சம்பந்தமில்லாத உரைகளுக்குள்ளும் அறிக்கைகளுக்குள்ளும் ஒழித்து விளையாடுகிறது. இல்லை இல்லை என்பதை உண்டு உண்டு என்று சொன்னால் அது வந்துவிடுமா?
இந்த மாதம் பத்தாம் திகதி நடைபெறவிருக்கும் இலங்கையின் உள்ராட்சிச் சபைத் தேர்தல் பரப்புரை இவ்வளவு தூரம் பிரசித்தமானதற்கு என்ன காரணம்?
மைத்திரி, ரணில், மகிந்த என்ற சிங்கள மும்மூர்த்திகளும் கச்சையும் தலைப்பாகையும் கட்டிக் கொண்டு களமிறங்க நேர்ந்தது ஏன்?
யானை பாரம் தாங்குமா? கைகள் பலமிழக்குமா? தாமரை மொட்டு மலருமா? என்ற கேள்விகள் சிங்களச் சோதிடர்கள் முன்னால் எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு ஏற்றாற்போல சைக்கிள் ஓடுமா? உதயசூரியன் உதிக்குமா? வீடு திறக்கப்படுமா? என்றவாறு தமிழர் பகுதி நிலைவரம் பேசப்படுகிறது.
கடந்த வாரம் இப்பகுதியில் குறிப்பிட்டதுபோல இந்தத் தேர்தல் என்பது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என்பவர்களைத் தெரிவு செய்வதற்கானதன்று.
எனினும், இவ்வளவு தூரம் நாட்டை ஆக்கிரமிக்கும் அளவுக்கு பரப்புரை சூடு கொண்டிருப்பதற்குப் பிரதானமாக இரண்டு காரணங்களைக் குறிப்பிடலாம்.
மத்திய வங்கியின் பிணைமுறி அறிக்கை கோடிக்கணக்கான ரூபா மோசடியை வெளிக்கொணர்ந்திருப்பதும், காலமும் நேரமும் அறியாது புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளியாகியிருப்பதுமே அந்த இரண்டு காரணங்கள்.
இதற்கு மேலதிகமாக தமிழர் அரசியல் களத்தைத் தகர்த்திருக்கும் பாரிய குண்டொன்றை ஈ.பி.ஆர்.எல்.எவ். ஐச் சேர்ந்த சிவசக்தி ஆனந்தன் நேரம் பார்த்து வீசியுள்ளார்.
கூட்டமைப்பின் பதினைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதற்காக தலா இரண்டு கோடி ரூபாவை பிரதமர் அலுவலகம் வழங்கியதென்பது அந்தக் குண்டு.
அந்தக் குண்டு மொத்தம் 30 கோடி ரூபா பெறுமதியானது என்பதால் பெப்ரவரி 10க்குப் பின்னரும் இந்தக் குண்டு தொடர்ந்தும் புகைத்துக் கொண்டேயிருக்கலாம்.
இதனை ஒருபுறத்தே வைத்துவிட்டு, சிங்கள தேசக் காட்சியை மேலோட்டமாக நோக்குவோம்.
பிணைமுறி அறிக்கை ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு சிலரை குற்றவாளிகளாக்க வெளிச்சம் காட்டி நிற்கிறது. இதில் முக்கியமானவர் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க.
சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராகவிருந்தபோது சதி நடவடிக்கை மூலம் அவரது ஆட்சியைக் கவிழ்க்க திட்டமிட்டு அகப்பட்ட அப்போதைய பிரதி பொலிஸ்மா அதிபரான சிறில் திசநாயக்காவின் பேரனே (மகளின் மகன்) ரவி கருணநாயக்க.
மத்திய வங்கி ஆளுனர் பதவிக்கு தமது நண்பரான அர்ச்சுன மகேந்திரனை நியமித்தவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
ரணிலின் பெயரும் அறிக்கையில் விரல் காட்டப்பட்டிருந்த போதிலும், ரவி கருணநாயக்கவை மட்டும் பதவியிழக்கச் செய்துவிட்டு ஏனையோரைக் காப்பாற்ற அரசு முனைகிறது.
இதனை மகிந்த தலைமையிலான பொதுஜன முன்னணி பகிரங்கப்படுத்தியுள்ளது. இதனாற்போலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணிலையும் குற்றவாளியாகக் காட்டுவது போன்ற உரைகளை ஜனாதிபதி மைத்திரி நிகழ்த்தி வருகிறார்.
ஊழல்காரர் யாராயினும் அவர்கள் கூண்டில் ஏற்றப்படுவர் என்று ரணில் தரப்பை குறி வைப்பதுபோல் மைத்திரி அறைகூவுவதும், அதனையே ரணில் திருப்பிக் கூறுவதும், இவர்களில் யார் திருடன் என்ற சந்தேகத்தை மக்களிடம் எழுப்புகிறது.
மகிந்தவுடன் சார்ந்திருக்கும் சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் தம்முடன் இணைந்தால் தனித்து சுதந்திரக் கட்சியின் ஆட்சியை அமைப்பேனென்று மைத்திரி கூறுகிறார்.
இதற்குப் பதிலளிப்பதுபோல ரணில் தரப்பு, தங்களிடம் 125 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும், எவரது ஆதரவுமின்றி தங்களால் தனியாக ஆட்சியமைக்க முடியுமென்று பதிலடி கொடுத்து வருகிறது.
இது போதாதென்று மகிந்தவைக் காப்பாற்ற சுதந்திரக்கட்சி முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டி வரும் ரணில், மகிந்த மீதான ஊழல் விசாரணை அறிக்கையை அமுல்படுத்தினால் அவர் குடியுரிமையை இழப்பாரென்று அதிரடி அறிவிப்புக் கொடுத்துள்ளார்.
மகிந்தவை ஒரு நாளாவது சிறையில் தள்ளினால் கொழும்பு வீதிகள் பிக்குகளால் நிரம்பி வழியுமென்று எச்சரித்துள்ளார் ராவண பலவயவின் தலைமைப் பிக்கு.
இதற்கும் அப்பால் தமிழரின் வாக்குகளை உடைப்பதிலும், தமக்காக்குவதிலும் சிங்களத் தலைவர்கள் கடும் போட்டியிடுகின்றனர்.
மட்டக்களப்பு கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரி கடந்த தேர்தலில் தம்மை ஜனாதிபதியாக்கியவர்கள் தமிழர்களே என்று கூறி நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வவுனியா சென்று தமிழ் மக்களை வாயாரப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இம்மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணம் சென்ற மகிந்த ராஜபக்சவுக்கு கடும் பாதுகாப்பின் மத்தியிலும் தடல்புடலான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றபோது கறுப்புக் கொடி காட்டியவர்கள், மகிந்த யாழ்ப்பாணம் சென்றபோது வாலைச் சுருட்டிக் கொண்டு படுத்து விட்டார்கள்.
ஒன்றரை லட்சம் அப்பாவி மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்து, இனப்படுகொலை நடத்தியவருக்கு அடையாள எதிர்ப்பைக் காட்டக்கூட கூட்டமைப்பு தயாராகவில்லையென்பதே இன்றைய யதார்த்தம்.
எதிர்க்கட்சித் தலைவரென பெயரளவில் காட்சி தரும் இரா.சம்பந்தன் ரணிலின் பொக்கற்றுக்குள் இருப்பவரென்று யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச சாடியுள்ளார்.
ரணிலின் பொக்கற்றுக்குள் சம்பந்தன் இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவராக அவர் தனித்து இயங்காது, அரசாங்கத்தின் கூட்டணிக்குள் ஒன்றாக கூட்டமைப்பு இயங்குகிறது என்றும் தமிழரின் கலாசார தலைநகரில் நின்று மகிந்த கூறியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து எதிர்வரும் ஐந்தாம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் செல்லும் மைத்திரி என்ன சொல்வாரோ? நிச்சயமாக யாழ்ப்பாண மக்களுக்கு இரு கரம் கூப்பி நன்றி சொல்வார். இனியும் தங்களுக்கே வாக்களிக்குமாறு வேண்டுகோளும் விடுவார்.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆறாம் திகதி யாழ்ப்பாணத்தில் உரையாற்றுவாரென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்தவின் குற்றச்சாட்டுக்குப் பதிலும், மைத்திரியின் நன்றிக்கு வினாவும் கூற வேண்டிய கடப்பாடு இவருக்குண்டு.
சமஷ்டியென்றும், ஒஸ்லோ உடன்படிக்கையென்றும், அடுத்த பொங்கலுக்கு முன்னர் தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கையுண்டு என்றும் அதே பழைய வாய்ப்பாட்டைத்தான் சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் வாசிப்பாரென்றால், அது கேட்டு கேட்டு அலுத்துப்போன குறட்டையாகவே இருக்கும்.
சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லையென்றும், இணைப்புக் கிடையாதென்றும் மைத்திரி இந்த வாரமும் கூறியுள்ளார்.
அதனாற்தான்போலும் சம~;டிக் கோட்பாடு என்ற வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சம~;டியை ஒத்த ஆட்சி என்ற பதத்தை கூட்டமைப்பினர் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
சமஷ்டியை ஒத்த ஆட்சி என்ற பதத்தை முதன்முதலாக அரங்கேற்றியவர் சுமந்திரன்தான்.
இந்த வாரம் வெளியான கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இதனை மேலும் விளப்பமாகக் கூறியுள்ளது.
இதற்கு ஓணானைச் சாட்சிக்கு அழைப்பதுபோன்று இடைக்கால அறிக்கையை கூட்டமைப்பு இழுத்து வந்துள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் பின்வருமாறு அந்த வாசகம் அமைகிறது:
“இடைக்கால அறிக்கையில் சமஷ்டி என்ற சொல் பயன்படுத்தப்படாவிட்டாலும், சமஷ்டியை ஒத்த ஆட்சி முறையாகவே அது அமைய வேண்டுமென்பதில் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது” என்கிறது இந்த வாசகம்.
எங்களுக்கு பெயர்ப்பலகை முக்கியமல்ல என்று சுமந்திரன் சொல்லி வந்ததும் இதனையேதான்.
அடுத்ததாக இங்கு குறிப்பிடப்பட வேண்டியது, ஒஸ்லோ ஒப்பந்தம் என்றும் ஒஸ்லோ கோட்பாடு என்றும் கூட்டமைப்பு தமது வசதி கருதி ஓதிக் கொண்டிருக்கும் (சு)மந்திரம்.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நோர்வேயின் அனுசரணையில் நடைபெற்றது எல்லோருக்கும் தெரியும்.
இதன் மூன்றாவது சுற்றுப் பேச்சு 2002 டிசம்பர் 2 முதல் 5ம் திகதிவரை இடம்பெற்றது. இதன் இறுதி நாளன்று இனப்பிரச்சனைத் தீர்வுக்கான ஆரம்ப ஏற்பாடாக (கவனிக்கவும் – ஆரம்ப ஏற்பாடாக) இரு தரப்பும் ஓர் அறிக்கையை இணைந்து வெளியிட்டன.
இந்த அறிக்கை பின்வருமாறு கூறுகிறது. “உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சிமுறை தழுவிய தீர்வு ஒன்றை ஆராய்வது” என்பதுவே அந்த வாசகம்.
இது ஒஸ்லோ கோட்பாடோ அன்றி உடன்படிக்கையோ அன்று. ஓர் ஆரம்ப ஏற்பாடு மட்டுமே.
இதுகூட இறுதியில் இலங்கை அரசால் கைவிடப்பட்டது.
இதற்கு முன்னைய ஆண்டும் அதே ஆண்டும் மாவீரர் தின உரையில் தேசியத் தலைவர், “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்பதை மறவாது குறிப்பிட்டார் என்பதை சுமந்திரனும், சம்பந்தனும் மறந்தும் மறைக்கக்கூடாது.
உண்மை நிலை இப்படியிருக்க, ஒஸ்லோ கோட்பாடுதான் விடுதலைப் புலிகளின் கோட்பாடு என்றும், அதனையே தாம் கடைப்பிடிப்பதாகவும் கூட்டமைப்பின் சுமந்திரன் சொல்வது சுத்துமாத்து, அதற்கு சம்பந்தன் தலையாட்டுவது அரசியல் பம்மாத்து.
மேடைப்பேச்சிலும், சொல்லலங்காரத்திலும் தங்கள் கெட்டித்தனத்தைக் காட்டிவரும் கூட்டமைப்பினர், மறுபுறத்தில் தங்கள் கட்சியை தாமே வெட்டிச் சரித்து வருவதையும் பார்க்க முடிகின்றது.
உண்மைக்கு முன்னால் பதில் சொல்ல முடியாதிருக்கும் சுமந்திரன், நொடி அவிழ்க்க முடியாத சிறுவர்கள் மாற்று நொடி போடுவது போன்று அரசியலில் விளையாடி வருகிறார்.
சமஷ்டிக் கோரிக்கையை எதற்காகக் கைவிட்டீர்கள் என்று எவராவது கேட்டால் விடுதலைப் புலிகள் கைவிடவில்லையா என்று கேட்கிறார்.
தமிழீழத்தை ஏன் கைவிட்டீர்கள் என்று கேட்டால், பிரபாகரன் அதனைக் கைவிட்டபோது ஏன் கேட்கவில்லையென்று கேட்கிறார்.
கூட்டமைப்பின் பதினைந்து எம்.பிக்கள் தலா இரண்டு கோடி ரூபாவை அரசியல் லஞ்சமாகப் பெற்றனர் என்று கேட்டால், சிவசக்தி ஆனந்தன் முன்னர் இப்படிப் பெறவில்லையா என்று வாய்ச்சவடால் அடிக்கிறார்.
சம~;டி இல்லை, வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை, இனப்பிரச்சனைக்குத் தீர்வு இல்லை, இடைக்கால அறிக்கையில் எதுவும் இல்லை என்ற நிலையில் மக்கள் முன்னால் சொல்ல ஒன்றுமில்லையென்ற நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள கூட்டமைப்பு, சம்பந்தா சம்பந்தமில்லாத உரைகளுக்குள்ளும் அறிக்கைகளுக்குள்ளும் ஒழித்து விளையாடுகிறது.
இல்லை இல்லை என்பதை உண்டு உண்டு என்று சொன்னால் அது வந்துவிடுமா?
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila