கடந்த காலத் தவறுகளை மன்னித்து மறக்க கற்றுக் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துஸித்த பனன்வல தெரிவித்தார்.
மட்டக்களப்பு – தன்னாமுனை புனித ஜோசெப் கல்லூரியின் 143ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற கல்லூரிதின நிகழ்வில் நேற்று (திங்கட்கிழமை) அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் மறந்து மன்னிக்கவும் வேண்டும். நாம் மற்றவர்களுடன் முரண்பட்டுக் கொண்டு வாழ்க்கையை இழந்து விடக் கூடாது. நாங்கள் ஒருவர் மற்றவரில் கரிசனை கொள்ள வேண்டும்.
வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தி உங்களிடமே உள்ளது. வாழ்க்கையை வீணடிக்காமல் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மையளிக்கக் கூடிய விதத்தில் பயன்படுத்தி மகிழ்ச்சியாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். நாம் எம்மைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு எமது பிரதிபலிப்பை காட்ட முடியும். ஒருபோதும் கல்வியைக் கைவிடாதீர்கள்” எனத் தெரிவித்தார்.
நிகழ்வில் பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி ஆயர் கலாநிதி பியரென் நுயன் வன் டொற், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசெப் ஆண்டகை, படையதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.