கொடிய அரக்கனின் புரட்சியால் விஸ்வரூபமெடுக்கும் பாலியல் வன்கொடுமைகள்!

கொடிய அரக்கனின் புரட்சியால் விஸ்வரூபமெடுக்கும் பாலியல் வன்கொடுமைகள்! கேள்விக்குறியாகும் இளம் பெண்களின் வாழ்க்கை..?
சங்க காலம் முதல் இன்று வரை பெண்களின் வீரமும், புகழும் நிலை நாட்டப்பட்டு கொண்டு வருகின்றது. வீரத்தின் விளை நிலமாக பெண்கள் விளங்குகின்றனர். போர்க்களத்தில் வீரமுடன் போராடிய வீர மங்கையர்களும் எம் நாட்டில் இருந்தார்கள்.
பெண்ணின் பெருமை இப்படி ஒரு புறமிருந்தாலும் இந்த நூற்றாண்டில் இன்று வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஓய்ந்தபாடு இல்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் அபிவிருத்தி இடம்பெற்று வந்தாலும், தமிழர் தாயகப் பிரதேசத்தில் கலாசார சிதைப்புகள் மிகவும் சூட்சுமமான முறையில் இடம்பெற்று வருகின்றது.
இதன் ஓர் அங்கமாகவே போதைப்பொருள் பாவனை, கலாசார அடையாளங்கள் அழிக்கப்படுதல், பெண்கள் மீதான வன்புனர்வு சம்பவங்கள், வாள்வெட்டு சம்பவங்கள் என எல்லை இல்லாமல் நீண்டு கொண்டிருக்கின்றது.
இதன் உச்சமாகவே வித்தியா, சரண்யா, ஹரிஸ்ணவி என்ற மாணவிகளை ஈழமண்ணில் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

பெண்கள் சிறுவர்கள் தொடர்பில் 2017ம் ஆண்டு 2324 முறைப்பாடுகளும், 2018ம் ஆண்டில் இவரையில் 1048 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. இது அதிகமான எண்ணிக்கையாகும். இதன் அடிப்படையில் பார்த்தால் மிகக் கூடுதலாக வன்முறைகள் பதிவாகியிருப்பதனைக் காணமுடிகிறது.
இன்றைய இளம் யுவதிகள் முதல் சிறு குழந்தை வரை பாலியல் தொல்லைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. இதில் இன்னும் என்ன கொடுமையான விடயம் என்றால் பாதுகாப்பு வழங்க வேண்டிய தந்தைக்கும், சகோதரர்களுக்கும் இறையாகும் பெண்கள் எத்தனையோ... வறுமையின் காரணமாக பெண் பிள்ளைகளை குழந்தையில் விட்டு செல்லும் தாய்மார்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல் இது.
இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச அளவில் இந்தப் பிரச்சினை ஒரு தீராக் கவலையாக உருமாறிக் கொண்டிருக்கிறது.

ஏன் சில கொடூரர்களின் கண்களில் பெண்ணை பெண்ணாகவும், சக உயிராகவும் பார்க்க முடிவதில்லை, எந்த ஊனக் கண்கள் அவர்களுக்கு பெண்களையும், பெண் குழந்தைகளையும் வெறும் பாலியல் பிண்டங்களாகக் காட்டுகிறது? என்று யோசித்துப் பார்த்தால் நமது சமூக அமைப்பின் மீதே கடும் கோபம் எழுகிறது.
நமது சமூகம் எப்போதும் முன்னுரிமை தருவது சினிமாக்களுக்குத் தான். நமது அன்றாட வாழ்வில் அரசியலைக் காட்டிலும் சினிமாவின் தாக்கமே அதிகம் எனில் அது மிகையில்லை.
இன்றைய தொலைக்காட்சியில் விளம்பரம் முதல் நாடகங்கள் வரை எல்லாமே ஆபாசமாகத்தான் காண்பிக்கப்படுகின்றது. இலங்கையில் தென்னிந்திய தொலைக்காட்சி நாடகங்களின் தாக்கமும் பெண்களின் பாலியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
அன்று அரசமரம் சுற்றிய பெண்கள் இன்று அண்டவெளியையும் சுற்றித் திரிகிறார்கள். விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியே இதற்கு காரணம்.

குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி சோறு ஊட்டும் காலம் சென்று மொபைல் போனை காட்டி சோறூட்டும் காலத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
விந்தைமிகு அதிசயங்களை நவீன தொழில்நுட்பங்கள் மேற்கொண்டிருந்தாலும் தீமையான விடயங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ‘ஸ்மாட் போன்’ என்பது இன்றைய காலத்தில் மனிதனை ஆட்கொண்டு விட்ட ஒருவித போதை பொருள். இன்றைய இளைஞர், யுவதிகள் 'ஸ்மாட் போன்' என்ற சாதனத்துடனேயே எந்நேரமும் உறவாடிக் கொண்டிருக்க ஆசைப்படுகிறார்கள்.
இந்த போதையிலிருந்து மீள்வது இலகுவானதல்ல. நவீன தொலைபேசி சாதனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தயாரித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களது வர்த்தகப் போட்டியில் இளைஞர்களே பிரதான இலக்கு.
ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில், இன்டர்நெட் என்ற தனி உலகம் இளைஞர்களின் வாழ்கையை கேள்விக்குறி ஆக்கிவிடுகின்றது.
‘ஸ்மாட்போன்’ சாதனத்துக்குள் இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தேவையான பயனுள்ள ஏராளமான விடயங்கள் பொதிந்துள்ளன. அதேசமயம் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைச் சீரழிக்கக் கூடிய ஏராளமான ஆபத்துகள் அதற்குள் மறைந்துள்ளன.
மனித சமுதாயத்துக்கு ஆக்கத்தைத் தந்துள்ள அறிவியல் வளர்ச்சியானது, அழிவுக்கும் வழிகோலும் போது யாரால்தான் அதனைத் தடுத்து நிறுத்த முடியும்.
அண்மைக்காலமாக இந்தியாவில் பல பாகங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் தீவிரம் பெற்றுள்ளன.
பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை, குஜராத் மாநிலம் சூரத்தில் 9 வயது சிறுமி கொலை என அடுத்தடுத்த அதிர்வுகள் அடங்குவதற்குள் ஹரியானாவில் மேலும் ஒரு சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைய செய்தது.
அவ்வாறான ஒரு சூழ்நிலை இலங்கையிலும் தற்போது தீவிரம் அடைந்து வருகின்றது. பேருந்துக்களில் செல்லும் பெண்கள் தினம் தினம் அனுபவிக்கும் கொடுமைகள் சொல்லில் அடங்காது.
பொது இடங்களில் தனியாக செல்லும் ஐந்து வயது குழந்தை முதல் மூதாட்டி வரை இந்த கொடூரத்தினால் பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
வருடா வருடம் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. சமூகத்தில் விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்படுகின்றது. ஆனால், பாலியல் துஷ்பிரயோகங்கள் தீவிரம் பெற்று வருகின்றன.

இன்றைய இளைய தலைமுறையினரின் தலைவிதியை தீர்மாணிக்க கூடிய வகையில் தொழில்நுட்பம் அமைந்து விட்டது. புதுப்புது ஆபாசப்பட இணையத்தளங்களும் நாளுக்கு நாள் உதயமாகிக்கொண்டே இருக்கின்றன.
இதனை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் அரசாங்கம் தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பெண் பிள்ளைகளையும் பெற்றோர் எப்போதும் பாதுகாப்புடன் கண்காணிக்க வேண்டும்.
தலைத்தூக்கியிருக்கும் இந்த பிரச்சினையை அழித்து ஒழிக்கா விட்டால் இலங்கைத் தீவை அமைதி இழக்கச் செய்து சமூக கேடுமானங்களை உருவாக்கி நல்லிணக்கத்தையும் இன ஒற்றுமையையும் உடைத்துவிடும் .உடனே அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila