மனிதவுரிமைகளை பாதுகாக்க வேண்டியவர்களே அதனை மீறுகின்றனர்!- யாழ்.சிவில் சமூகத்தினர்

இலங்கையில் மனிதவுரிமைகளை பாதுகாக்க வேண்டியவர்களே அதனை அப்பட்டமாக மீறிக்கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் யாழ்.சிவில் சமூகத்தினர், பின் அவர்களால் எவ்வாறு மனித உரிமைகளை பாதுகாக்க முடியும்? எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
இன்றைய தினம் யாழ்.நகரில் இடம்பெற்ற சிவில் சமூகங்களுடனான மனிதவுரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்.அலுவலகத்தின் ஒன்றுகூடலிலேயே சிவில் சமூகத்தினர் மேற்படி கேள்வியினை எழுப்பியிருக்கின்றனர்.
விடயம் தொடர்பில் மேலும் பேசப்படுகையில்,
வடமாகாணத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்களையும் அவர்களுடைய வாழ்விடங்களையும் பொதுத்தேவை என அடையாளப்படுத்திப் படையினரின் தேவைகளுக்காக அபகரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்விடயம் தொடர்பாக வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மக்கள் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிடம் பல முறைப்பாடுகளை கொடுத்தும் நடவடிக்கை எவையும் எடுக்கப்பட்டனவா? என்றால் இல்லை என்பதே பதிலாக காணப்படுகின்றது.
இந்நிலையில் எங்களை அழைத்து நீங்கள் மனிதவுரிமைகள் குறித்துப் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். நாம் சர்வதேச மனிதவுரிமைகள் தினத்தை ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. அதற்கு இவ்வாறான சம்பவங்களே அடிப்படையாக அமைந்துள்ளன.
இங்கே மனிதவுரிமையினை மீறுபவர்கள் யார்? என்றால் அதனை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டி ல் உள்ள ஆட்சியாளர்களே. எனவே மீறப்படும் மனிதவுரிமைகளுக்கு மக்களுக்கு எவ்வாறு? எங்கிருந்து நியாயம் கிடைக்கும்?
அவ்வாறான மிக இக்கட்டான நிலையில் மக்களாகிய நாங்கள் இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு கொடுத்தால் உங்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா? என சிவில் சமூகத்தினர் கேள்வி எழுப்பினர்.
சிவில் சமூகத்தினர் எழுப்பிய இந்தக் கேள்விகளுக்கு மனிதவுரிமைகள் ஆணைக்குழுவினர் பதில் வழங்க முடியாமல் திணறிய நிலையில் விடயத்தை திசை திருப்பி வேறு விடயங்களைப் பேசிக் கொண்டனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila