எதற்கான போர்க்குற்றம் என்பதை ஐ.நா ஏற்றிருக்க வேண்டும்: குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

எதற்கான போர்க்குற்றம் என்பதை ஐ.நா ஏற்றிருக்க வேண்டும்: குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-



ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்ட சர்வதேச விசாரணை தொடர்பான அறிக்கை ஈழத் தமிழர்களின் நீதி வேண்டிய போராட்டத்தில் மிகவும் முக்கியமான ஒரு முன்னேன்றத்திற்கான படிக்கல்லாக மாற்றத்தக்கது. ஈழத்தில் நடந்த மிகப் பெரும் இனப் படு கொலையான முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையுடன் தொடர்பு பட்டவர்களின் சாட்சியங்களுடன் கடந்த பல வருடங்களாக ஒடுக்கு முறையால் பாதிக்கப் பட்டவர்களின் சாட்சியங்களையும் அவ் அறிக்கை அடிப்படையாக கொண்டுள்ளது.
மிகவும் குரூரமான பாலியல் வன்முறைகள், நீதிக்குப் புறம்பான மனித படுகொலைகள், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமை, சரணடைந்தவர்கள் அழிக்கப்பட்டனர், வெள்ளைவேன்களின் கடத்தி ஒழிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகள்மீது எறிகணைத் தாக்குதல்கள் என பல்வேறு விடயங்களை மிகவும் தெளிவாக உள்ளடக்கியிருக்கிறது. இசைப்பிரியா, பாலச்சந்திரன் போன்றவர்கள் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது இராணுவத்தினரால்தான் என்பதையும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நடந்த நான்காம் ஈழ யுத்தத்தில் ஈழ மக்களுக்கு நிகழ்ந்த மாபெரும் அநீதியை இந்த அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது. அத்துடன் 2001 முதல் 2011 வரையான காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் என்னும்போது சந்திரிக்கா, ரணில் முதலியோரின் ஆட்சிக்காலங்களும் இதில் உள்ளடக்கப்படுகின்றன.
சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்பின் அறிக்கையில் இந்த தீவில் நடந்த மாபெரும் அநீதி ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கூறியுள்ளதைப்போல தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும்  தருகின்ற விடயமாகும். இந்த அறிக்கை தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி தருகின்றபோதும் இதனை ஒரு படியாக கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் நடவடிக்கையில் ஈழத் தமிழர்களும் அவர்களுக்காக போராடுபவர்களும் இயங்க வேண்டும்.
ஐ.நா அறிக்கை குறிப்பாக இரண்டு தரப்புக்களுக்கு இடையிலான உள்நாட்டுப் போராகவும் அதன்போது இழைக்கப்பட்ட குற்றமாகவும் வறையறுக்கும்போது இலங்கை அரசு தனது குற்றச்சாட்டுக்களை சமப்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. இதை ஐ.நா அறிக்கையே சுட்டிக்காட்டியுள்ளது. ஆனாலும் ஈழத் தமிழ் இனத்திற்கு எதிராக நடைபெற்ற இந்தப் போரில் தமிழ் மக்கள் எவ்வாறெல்லாம் அழிக்கப்பட்டார்கள் என்பதை ஒப்புக்காள்ளும் ஐ.நா அறிக்கை நடந்த இன அழிப்புப் போரை வெறும் போர்க்குற்றங்களாக வறையறுப்பது தவறானது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையக அறிக்கை இலங்கையின் அரசியல் அமைப்பும் நிறுவன கட்டமைப்பும் எத்தகையதாக இருக்கிறது என்பதும் அதனால் தமிழ் மக்களுக்கு நீதியினை வழங்க முடியாது என்றும் குறிப்பாக படைத்துறை, நீதித்துறை என்பன தமிழ் மக்களுக்கு எதிராக இயங்குவதையும் சுட்டிக்காட்டியுள்ளது. 2009ஆம் ஆண்டில் மாத்திரமின்றி கடந்த பல வருடங்களாக இலங்கையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்ட வந்துள்ளதையும் ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. முழுக்க முழுக்க ஒரு இனத்திற்கு எதிராக இத் தீவில் முன்னெடுக்கப்பட்ட அழிப்பு நடவடிக்கைகளை வரிசைப்படுத்தியபோதும் அது ஒரு இன ஒடுக்குமுறை என்றோ, இனஅழிப்பு என்றோ யாரத்த்தை ஒப்புக்கொள்ளாதிருப்பது ஏமாற்றமானது.
இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பவதை ஏற்றுக்கொண்ட ஐ.நா அறிக்கை எதற்காக அவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் என்ற அடிப்படையை குறித்து குறிப்பிட மறுத்திருப்பது தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் தரக்கூடியது மாத்திரமல்ல பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியுமாகும். இலங்கையில் நடந்தது போர்க்குற்றங்கள் என்று ஐ.நா வரையறுக்கின்றது. ஆனால் அந்தப் போர்க்குற்றங்கள் எதற்காக நிகழ்த்தப்பட்டன என்பது குறித்து ஐ.நா மௌனத்தையே வெளிப்படுத்தியிருக்கிறது. ஐ.நாவின் அறிக்கையை இலங்கையின் அரசியல் கட்டமைப்பும் நடந்த படுகொலைகளும் அவை நடத்தப்பட்ட விதங்களும் ஓர் இனப்படுகொலைக்கான அடிப்படை கொண்டவை என்பதை சொல்லாமல் சொல்கிறது. 
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்ற தீர்மானத்தை வடமாகாண சபை நிறைவேற்றியது. 2009இல் முள்ளிவாய்க்காலில் மாத்திரமின்றி காலம் காலமாக திட்டமிட்ட இன அழிப்பு நடந்து வருகிறது என்பதையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியது. இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதிலிருந்தே இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வொன்றை காண இயலும். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று இப்போது கருதவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கூறியிருக்கிறார்.
இன சமத்துமின்மையாலும் இன ஒடுக்கல் நோக்கத்தாலும் இனவொறுப்பு தன்மையாலும் கட்டமைக்கப்பட்ட இலங்கை 2009ஆம் ஆண்டுடன் தனது நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சியில் அதன் தலைமைத்துவம் அதற்கான நடவடிக்கைகளை நிறுத்தியிருந்தாலும் தொடர்ந்தும் அந்தக் கட்டமைப்பு பேணப்படுகிறது. அரசியல் மற்றும் இராணுவக் கட்டமைப்புக்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிரான வித்தில் உள்ளன.
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று ஐ.நா தனது அறிக்கையில் கூறிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தாகவும் அவ்வாறு ஐ.நா அறிக்கை கூறினால் நாடு பெரும் ஆபத்தில் சிக்கியிருக்கும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். ஐ.நா அறிக்கையில் ஆயிரம் மடங்கு காரம் குறைக்கப்பட்டுள்ளது என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகிறார். அந்த ஆயிரம் மடங்கு காரமும் தமிழ் மக்களுக்கு எதிராக மகிந்த அரசும் படைகளும் இழைத்த அநீதிகளாகும். அவைகளை மறைத்து இலங்கையின் புதிய அரசுக்கு சலுகை செய்வதும்க அதன் ஊடாக இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட  மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை மேற்கூறப்பட்ட நிகழ்வுகள் வெளிப்படையாக்கிறது.
நீதி நிலைநாட்டப்படும் இலங்கை அரசு கூறுகிறது. ஆனாலும் உள்ளக விசாரணையே நடத்தப்படும் என்றும் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச நீதி விசாரணைக்கு தென்னிலங்கையில் எதிர்ப்பு வெளியிடப்படுகிறது. இலங்கை அரசு கடந்த காலத்தில் நடத்திய இனப்படுகொலைகளும் அதற்கான விசாரணைகளும் எப்படி நடந்து முடிந்தன? என்ன நீதி கிடைத்தன என்பது யாவரும் அறிந்ததே. சர்வதேச கண்காணப்புடன் கூடிய விசாரணைகள்கூட நாடகமாகவே முடிந்தன. இலங்கை அரசின் இனப்படுகொலை விசாரணைகள் இனப்படுகொலைகளை மறைக்கும் தந்திரோபாய விசாரணைகளே நடந்தன. இதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை நல்ல எடுத்துக்காட்டு.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த நிகழ்வுகளை விசாரிக்கும் நீதிக் கட்டமைப்பு இலங்கையில் இல்லை என்றும் அது சிதைந்துபோயிருப்பதையும் ஐ.நா அறிக்கை நன்கு புரிந்து கொண்டுள்ளது. கடந்த மகிந்த ஆட்சிக்காலத்தில் நடந்த ஐ.நா விசாரணையை உள்நாட்டில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக இன அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட பெருமளவான மக்கள் சாட்சியளிக்க முடியாதுபோனமையும் இதற்கு காரணமாக அமையலாம். தொடர்ந்து நடைபெறும் ஐ.நா விசாரணையில் தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்திச் செல்லி நீதிக்காய் போராடுவதை தவிர வேறு என்ன செய்வது?
இலங்கையில் ஏன் இனப்படுகொலைகள் நடந்தன என்பதையும் அதை இன்னொருமுறை நடக்காமல் செய்யும் தொடர்ந்தும் ஈழத் தமிழர்கள் போராட வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் நடைபெறும் ஐ.நாவின் சர்வதேச விசாரணையில் உரிய வகையில் சாட்சியளித்து இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை எமது சாட்சியங்கள் ஊடகா எடுத்துரைத்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதன் மூலமே இலங்கையில் ஈழத் தமிழர் சந்திக்கும் இன ஒடுக்குமுறைக்கும் தீர்வையும் நடந்த இனப்படுகொலைக்கு நீதியையும் பெற முடியும். 
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila