யாழ். சுன்னாகம் ரவுடி கும்பல்களை அடக்க விசேட அதிரடிப்படை! நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு

யாழ்.சுன்னாகம் பகுதியில் தலைதூக்கியுள்ள குண்டர்களை அடக்குவதற்கு விசேட அதிரடிப் படையை அமர்த்தி உடன் நடவடிக்கை எடுக்குமாறு, வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல் மா அதிபருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல் மா அதிபருக்கு நீதிபதி நேரடியாக உத்தரவிட்டுள்ளார். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்தி, மக்கள் நிம்மதியாக வாழ தடையாக இருக்கின்ற, சுன்னாகத்தின் குண்டர்களின் செயற்பாடுகள் இடம் பெற்றிருப்பதையடுத்தே, நீதிமன்றம் அதிரடியாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஞாயிறன்று சுன்னாகம் நகரப்பகுதியில் பிற்பகல் 3 மணியளவில், 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஒன்று, கடையொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த இருவரை வாளால் வெட்டி காயப்படுத்தியதுடன். கடையையும் அடித்து நொறுக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
சட்டவிரோதமான முறையில் ஒரு மோட்டார் சைக்களில் 3 பேர் வீதம் இந்தக் கும்பல் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்து சென்றுள்ளனர்.
வீதியில் போக்குவரத்துப் பிரிவு பொலிசார் கடமையில் இருந்த நேரத்திலேயே இவ்வாறு அந்தக் கும்பல் வந்து பட்டப்பகலில் நகர்ப்புறத்தில் இவ்வாறு வாள்வெட்டு ரவுடித்தனத்தைச் செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
இதேவேளை, யாழ் நகரப்பகுதியில் சனிக்கிழமை இரவு யாழ் பஸ்நிலையப் பகுதியில் தேநீர் அருந்தச் சென்ற ஆசிரியர்களான புதுமணத் தம்பதியர் இருவரை தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து கேலி செய்த மூன்று இளைஞர்கள் பின்னர் அவர்களைத் தாக்கியுள்ளனர்.
தனியார் கல்வி நிறுவன ஆசிரியரான கணவன் கைமுறிந்த நிலையிலும், அவருடைய மனைவி காயமடைந்த நிலையிலும் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து இளைஞர்கள் வம்புத்தனத்தில் ஈடுபட்டபோது, கணவன் அவர்களுடன் வாதிட்டபோது 119 காவல்துறையினருக்கு, மனைவி அவசர அழைப்பை ஏற்படுத்தி சம்பவம் பற்றி முறையிட்ட போதிலும்,
சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கடைக்கு வெளியில் வைத்து அவர்கள் தாக்கப்பட்டதன் பின்பே காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர்.
இந்த சம்பவங்களின் பின்னணியிலேயே சுன்னாகம் ரவுடிக்கும்பல்களை அடக்குவதற்கு விசேட அதிரடிப் படையினரைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவாட்சிக்கு அச்சுறுத்தலாக வீதியோர ரவுடித்தனம், வீதிகளில் ஆட்கள் மீது வாள் வெட்டு நடத்திள் மக்களை அச்சுறுத்தும் தன்மையிலான கோஸ்டி மோதல்கள் போன்ற குற்றச் செயல்களை அடக்கி,
ரவுடித்தனத்தில் ஈடுபடுகின்ற கும்பல்களைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜராக்குமாறு வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல் மா அதிபருக்கான உத்தரவில் நீதிமன்றம் பணித்துள்ளது.
அண்மைக் காலமாக அடங்கிக் கிடந்த ரவுடி சாம்ராச்சியம் மீண்டும் தலையெடுக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
எனவே, ரவுடித் தனத்தில் ஈடுபடும் அனைவரையும் விசேட அதிரடிபப்டையைப் பாவித்து கைது செய்து நீதிமன்றில் ஆஜராக்குமாறு நீதிமன்றத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதற்காக நீதிமன்றங்கள் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துச் செயற்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவுகளுக்கும் செயற்பாடுகளுக்கும் சவால் விடும் வகையில் சுன்னாகத்தில் இயங்கும் அனைத்து ரவுடிகளும் கைது செய்யப்பட வேண்டும்.
இந்த ரவுடிகளுக்குப் பாதுகாப்பு, அடைக்கலம் மற்றும் உணவு வழங்கி உதவி புரிகின்ற ரவுடிகளின் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களும் கைது செய்யப்பட வேண்டும்.
வீதிகளிலும் பொது இடங்களிலும் ரவுடித்தனம் புரிந்து, வாள்வெட்டுக்களை நடத்தி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ரவுடிக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் சட்ட ஆட்சிக்கு விரோதமானவர்கள்.
நீதிமன்றங்களின் நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகளுக்கும், ஜனநாயக ஆட்சிக்கும் இவர்கள் இடையூறு விளைவிப்பவர்கள். இவர்கள் அனைவரும் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலையாகும்.
சட்டவாட்சிக்குப் பொறுப்பான நீதிமன்றத்திற்கு சவால் விடும் எந்தவொரு ரவுடியம் யாழ் மாவட்டத்தில் இருப்பதற்கு அனுமதிக்க முடியாது.
நீதித்துறையுடன் மோதுவதற்கு எத்தனிக்கின்ற எந்தவொரு ரவுடிக்கும் மன்னிப்பு வழங்கப்படமாட்டாது, நீதின்றங்களின் உத்தரவுகள் தீர்ப்புக்களுக்குத் தலை வணங்காமல், சட்டத்தை கையில் எடுப்பதற்க முயற்சிக்கும் இத்தகைய ரவுடிக் கும்பல்கள் ஒரு நிமிடம்கூட சுதந்திரக் காற்றை அனுபவிப்பதற்கு பொலிசார் அனுமதிக்கக் கூடாது.
குற்றங்களைச் செய்துவிட்டு சுதந்திரமாக நடமாடுவதற்கு எவரையும் பொலிசார் அனுமதிக்கக் கூடாது. எனவே ரவுடிக் கும்பல்களையும், அவற்றுக்கு உதவுபவர்களையும் உடனயாகக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
சுன்னாகம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் அங்கு கடமைபுரியும் காவல் உத்தியோகத்தர்கள் குற்றவாளிகளையும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் கைது செய்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதிலும், அத்தகைய கடமைகளில் ஈடுபடுவதிலும் திறமையற்றவர்களாக நீதிமன்றம் கருதுகின்றது.
திறமையற்ற காவல் உத்தியோகத்தர்கள் பலர் சுன்னாகம் காவல் நிலையத்தில் கடமையாற்றுவதாகவே நீதிமன்றம் கருதுகின்றது.
இவர்களுக்கு எதிரான உடன் நடவடிக்கை எடுத்து, சுன்னாகம் காவல் நிலையத்தின் செயற்பாடுகளைச் சீரமைப்பதற்குத் தேவையான முன்னெடுப்பக்களை மேற்கொள்ள வேண்டும்.
திறமையற்ற காவல் உத்தியோகத்தர்களை காவல் மா அதிபரின் அனுசரணையுடன் வேறிடங்களுக்கு இடம் மாற்றம் செய்து, திறமையானவர்களை சுன்னாகம் காவல் நிலையத்திற்கு நியமிக்க வேண்டும்.
கடந்த ஒரு வாரமாக சுன்னாகம் பகுதியின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கவனம் செலுத்தி, சுன்னாகம் காவல் நிலைய பொறுப்பதிகாரியையும், அவர் கடமையில் இல்லாதவேளையில்,
அந்த காவல் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியையும் நீதிமன்றத்திற்கு அழைத்து சுன்னாகம் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்கள் தொடர்பில் உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தும்,
அங்கு குற்றச் செயல்களையும் ரவுடிகளின் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தும் திறமை இல்லாமல் சுன்னாகம் காவல் பிரிவு காணப்படுவதைக் கவனத்திற் கொண்டு உரிய நடவடிக்கைகளை உடன் எடுக்க வேண்டும்.
இந்த அதிரடி உத்தரவை நீதிபதி இளஞ்செழியன் வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல் மா அதிபரை, தமது நீதிமன்ற அறைக்கு அழைத்து, நேரடியாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila