இலங்கையில் இப்போது எல்லாம் ஐயமே! யார் தலைவர்? யார், ஏன் வருகின்றார்? நினைவேந்தலை யார் நடத்துவது!

இலங்கையில் எல்லா தரப்பினரிடமும் விடைகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. நாட்டின் தலைவர் யார்? ஜனாதிபதியா! பிரதமரா! மந்திரிசபை மாறுமா? தொடருமா! ஆட்சியே கவிழுமா!!
இலங்கையில் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை உண்டா இல்லையா! பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிட்டுமா? வடபகுதியில் நடக்கும் போராட்டங்களுக்கு பலன்கிடைக்குமா?
எரிபொருளின் விலை மேலும்கூடுமா குறையுமா! வறுமை நீங்குமா! மேநாள் ஊர்வலங்கள் நாட்டின் நிலமையை மாற்றுமா? 2009 இல் நடந்த அவலங்களின் நினைவுநாள் யாரால் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்துவது?
இந்தியப்பிரதமர் ஏன் வந்தார்? ஏன் நுவரெலியா சென்றார்? ஏன் தமிழில் பேசினார்?? ஏன் சிங்களத்தில் பேசவில்லை? கொழும்பு கண்டிப் பயணங்களை விட நுவரெலியாப் பயணம் எப்படி பிரதமர் மனதைப் பாதித்தது.
நடந்த சந்திப்புக்களில் எது முக்கியமானது எது சடங்கு போன்று நடந்தது. இன்றைய உலகில் மனிதனின் வேகம் எப்படிப்பட்டது என்பதையும் பிரதமர்மோடி அவர்களின் இலங்கையின் 24 மணி நேரங்களும் எடுத்துக்காட்டுகின்றன.
இதனைப்பார்க்கும் போது எமது தமிழ்த்தரப்பினரின் திட்டமிடல்கள் வேகங்கள் எப்படி இருக்கும்? எல்லாம் ஐயம்! ஐயம்!!
இலங்கையில் இந்தக்காலம் மறக்க முடியாத வடுக்கள் படிந்த காலம். இலங்கையின் உள்ளநாட்டுப் போர் நிறைவுக்கு வந்த காலம் இதில் வெளிநாடுகளின் பங்களிப்புகள் அதிகம்.
அதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். உண்மையில் தமிழர்களின் உயிர் இழப்புக்கள் அதிகம். இதில் மிக அதிக பாதிப்பினை பெற்றுக் கொண்டவர்கள் ஒருசாராரின் தேவைகள் எதுவும் முடிவுறாத தொடர்கதையாக பல்கிப்பெருகி நீண்டு அவலமாகவே உள்ளது.
இதில் எம்தரப்பின் வெட்கத்திற்குரிய நிலை என்னவென்றால் திட்டமிடல்களும் பொறுப்பு வாய்ந்த நிகழ்ச்சித் தொடர் இன்மைகளுமாகும்.
எமக்கு தலைமை தாங்கும் கட்சிகளே சரியான திட்டமிடல் நிர்வாகம் நோக்கம் திசை ஏதும் இன்றி எழுந்த மானத்திலும் மேலோட்டத்திலும் தான் இருக்கின்றன. இந்த நிலையில் மாற்ற மில்லாத வரையில் இந்த தேக்கநிலையில் மாற்றமே இல்லை. எல்லாமே சடங்குகளாகவே முடியும் அரசியல் தீர்வும் இல்லை அவலங்கள் அகலப்போவதும் இல்லை.
சடங்கிற்காக விமானநிலையத்தில் சந்திக்கப்ட வேண்டிய தரப்பாக மட்டுமே ஈழத்தில்(இலங்கையில்) இலங்கைத் தமிழர் என்ற இலங்கையின் பூர்வீக மக்கள் ஆக்கப்பட்டு விட்டார்கள்.
அதற்கு காரணம் அவர்களே என்பதும் தெளிவாகின்றது. மோடியின் பயணத்தில் ஈழத்தமிழர்பற்றிய நிகழ்ச்சிநிரல் திட்டமே இல்லை. ஆனால் மலையகத் தமிழர்களுக்கு முதன்மை முன்னுரிமை எல்லாம் சிறப்பாக அமைந்தது.
அதற்குகாரணம் மலையக மக்கள் ஒடுக்கப்பட்டாலும் விழித்துக் கொண்டார்கள். ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட்டாலும் உறங்கிக் கொண்டே இருக்கிறார்கள் என்ற நடைமுறைதான் காரணம்.
இன்றைய இலங்கையின் ஆட்சியாளர்களின் தந்திரங்கள் சூழ்ச்சிகள் மந்திரங்கள் மாயைகள் ஏமாற்றுக்கள் எல்லாவற்றையும் நன்கு அறிந்து அதற்கு தம்மை தயார்ப்படுத்தி மலையகத் தமிழர்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்கள் தமிழர் என்ற வகையில் மகிழ்ச்சியான நிலை.
அவர்களுக்கு இந்தியாவைவிட வேறு வழியில்லை. இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் போலப்பல நாடுகள்.
இதற்கு காரணம் மனோகணேசன் போன்ற விழிப்பான துடிப்பான தலைமை அவர்மட்டுமல்ல மறைந்த சந்திரசேகரனின் மாற்று தலைமை எண்ணப்பாடுகளும் மலையகத்தின் இந்த மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் காரணம்.
எல்லாத்திற்கும் மேலாக தோட்டத் தொழிலாளர் என்ற கட்டுக்கோப்பை உலகின் பெரிய தொழிற்சங்கங்களில் ஒன்றாக பல் நெடுங்காலம் வழிநடத்திய ஆளுமை கொண்ட அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களின் பங்கெடுப்பும் அடிப்படையானது.
அதன் தொடர்ச்சிகள் சரியான திசையில் திட்டமிடல்களுடன் நகர்ந்தமை இந்த வெற்றிகளுக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக அமைந்திருந்தாலும் ஈழத்தமிழர்களிள் உயிர் ஈகப் போராட்டத்தின் தாக்கம் மிக முக்கிய காரணியாக அமைந்திருந்தது.
திம்பு பேச்சுவார்த்தையில் மலையக மக்களின் உரிமைகள் பற்றி கோரப்பட்டது. எல்லா விடுதலை அமைப்புகளும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒருமித்த கருத்தாக அதனை முன்வைத்தார்கள்.
இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியிடம் இந்த கோரிக்கையை. ஆனால் முல்லைத்தீவில் கிளிநொச்சியில் கால் இழந்தவருக்கு பொய்க்கால் பொருத்திட உதவுங்கள் என்ற ஒரு வேண்டுகோளைக்கூட எத்தரப்பாலும் முன்வைக்கப்படாமை தமிழரை இலங்கை இந்தியா பிரித்தாழ்வதில் வெற்றி கண்டு விட்டது என்ற ஆபத்தின் அறிகுறிதான் என்பதை இலங்கைவாழ் எல்லாத்தமிழ்தரப்பும் எழுதி வைத்து எண்ணிக்காலடி வைக்க வேண்டிய விழிம்பில் நிற்கின்றோம்.
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தமட்டில் 2009 இல் அழிக்கப்பட்டவர்களின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூட எந்த முகாந்தரமும் இல்லாமல் நிற்கிறது.
இவ்வளவு இடர்கள் தீர்வுகள் இன்றிய நிலையில் இருக்கும் இனத்தை எதிர்கட்சிக் கூட்டுக்குள் போட்டு பூட்டி மாட்டியதால் இந்தியத் தலைவர் வருகின்றார் என்று உணர்ந்தும் இதன் ஏற்பாட்டில் இந்திய துாதரகம் முக்கிய பங்காற்றும் என்பதை அறிந்திருந்தும் அவர்களுடனான தொடர்பு மந்தமாக இருந்ததால் தான் சடங்கிற்கு சந்திப்பு நிகழ்ந்தது.
இது எமது தரப்பின் குற்றமே அவர்கள் குற்றமல்ல. தேவைகள் உள்ள எங்கள் தரப்பின் தவறு. மலையகத் தமிழர்கள் எப்போதும் இந்தியத் தூதரகத்துடன் நெருக்கமாக இருப்பார்கள்.
தனிநபர் உடல்நலம் பற்றி பேசும் நிலையில் வயதில் எமது தலைமைகள். தமிழகத்தில் கருணாநிதி ஜெயலலிதா இவர்களின் உடல் நலக்குறைவால் தமிழகம் நாற்றமெடுக்கின்றது அந்த நிலைக்கு நீங்களும் வந்து விடாதீர்கள் என்பதை மோடி அவர்கள் குறிப்பால் உணர்த்தி விட்டு சென்றுள்ளார்களோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது.
நுவரெலியாவில் இந்தியப்பிரதமர் பேசிய பேச்சு அரசியலாக அலங்காரமாக தமிழர்களைக்கவர திட்டமிட்டு பேசியிருந்தாலும் தமிழ் மொழி உலகின் பழமையான மொழி என்றும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் பொதுத்தன்மை உயர்ந்த எண்ணம் மனிதம் கொண்ட அறிஞர்களை கொண்ட ஒரு நாகரீகமான இனமாக தமிழர்கள் இருந்தார்கள் என்பதை பெரியநாட்டின் உலகின் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தலைவர் அவர்களின் எண்ணத்தில் புகுந்து வெளிவந்திருப்பதானது மிகப்பெரிய பெறுமதி இதுதான் தமிழின் சிறப்பு.
அடுத்தது கண்டி ஆட்சிக்காலத்தில் தமிழும் சிங்களமும் ஆட்சிமொழி எனப்பேசியமை இலங்கை தனிச்சிங்கள நாடு என்ற நிலைப்பாட்ற்கு விழுந்த மகத்தான அடி.என்பதை உணராத மரமண்டையர்களாக நாம் உள்ளோம். 1987 இல் ராஜீவ் காந்தி வாங்கிய அடிக்கு பதிலடி இந்தியாவால் நேற்றே வழங்கப்ட்டிருக்கிறது.
இலங்கையின் இருதலைவர்களின கையைப்பிடித்துக் கொண்டு கூறியமை இதுதான் உண்மை என்பதை நீங்களும் ஏற்கவேண்டும் என்பதாக அமைந்தமை அவர்களுக்கு கசப்பாக இருந்தாலும் இலங்கை அரசியலில் வரலாற்றில் இந்தியாவின் தாக்கம் இருக்கும் என்பதையும் நேற்றைய நிகழ்வும் நிரூபித்திருக்கிறது.
தமிழர்கள் இந்தியாவின் கலாச்சாரத்தை குறிப்பாக தங்களின் வட இந்தியரின் கலாச்சாரத்தை உள்வாங்கியவர்கள் என்ற வரலாற்றையும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் புரியவைத்தார்.
மோடியை உலகம் பொருளாதாரத்தின் தரம்மிகு தலைவராகப் பார்ப்பதை தமிழகம் கண்டுகொள்ளாது 40-50 ஆண்டுகளுக்கு முந்திய குத்துச்சண்டை வீரர் அரசியலில் நின்று மோடியை சரியாக கையாளமல் இருக்கின்றார்கள் விமர்சிக்கின்றார்கள்.
அதற்காக பாரதிய ஜனதாவை ஆதரிப்பதல்ல ஆட்சியில் அமர்த்துவதல்ல இத்தகைய தலைவரை தமிழகம் எப்படிக் கையாள வேண்டும் என்பதை இலங்கை மலையகத் தமிழர்களின் மனோகணேசன் போன்றவர்களிடம் கற்கவேண்டும்.
அவர்களால் எழுத்துவடிவில் தமது தரப்பு நிலை கோரிக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலை சரியானது. அதிலும் 7 வகை கோரிக்கைகளும் நியாயபூர்வமானவை.
இலங்கைக்குள் கேட்டு கிடைக்காததை நாங்களும் இந்தியாவிடம் கேட்போம். என்ற நிலைக்கு மலையகமும் வந்து விட்டது இது யாருக்கு பாதகம்.
சிறுபான்மை இனங்களுக்கு இலங்கையில் எதுவும் தீர்க்கப்பட்டதே இல்லை என்பதை இது நிறுவி நிற்கிறது. இத்தகைய பேச்சுவார்த்தை எழுத்து வடிவக் கோரிக்கைகளையும் சம்மந்தரையா தரப்பு கையாண்டமை குறைவு.
பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளிக்கப்பட்ட ஆவணத்தில் பின்வரும் விடயங்கள் அடங்கியுள்ளன.
1. தனி வீடமைப்பு – லயன்கள் ஒழிக்கப்பட்டு தனி வீடமைப்பு திட்டத்துக்கான மேலதிக 20000 வீடுகளுக்கான ஒதுக்கீடு
2. ஆசிரிய பயிற்சி கல்லூரி – மலையக பாடசாலைகளுக்கு தேவையான விஞ்ஞானம் கணித பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களை பயிற்றுவிக்க தமிழ் மொழியிலான பயிற்சி கல்லூரியும் அதற்கான கணித விஞ்ஞான இந்திய பயிற்சியாளர்கள்
3. பாடசாலை உட்கட்டமைப்பு – மலையக மற்றும் தென்னிலங்கை தமிழ் பாடசாலைகளுக்கு அவசியமான உட்கட்டமைப்பு உதவிகள்
4. தமிழ் மொழியிலான நவீன தொழில் நுட்ப கலாசாலை – தொழில் பயிற்சி நிறுவனத்தின் அடுத்த கட்டம்
5. மலையக பல்கலைக்கழகம் – பிரபல இந்திய பலகலைக்கழகம் ஒன்றின் இணைவுடன் முதற்கட்ட பீடங்களை அமைத்து ஆரம்பிக்க வேண்டும்.
6. புலமைப்பரிசில் – 'இலங்கை தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளை' மூலமாக இன்று வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகைகளுக்கு மேலதிகமாக பல்கலைக்கழக தகைமை பெற்ற மலையக மாணவர்களுக்காக முழுமையான புலமைப்பரிசிலுடன் கூடிய இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வி வாய்ப்பு
7. மொழிக்கொள்கை மற்றும் சகவாழ்வு புரிந்துணர்வு உடன்பாடு – கடந்த மகிந்த ராயபக்ச ஆட்சியில் 2013ம் வருடம் இந்திய அரசிற்கும்இ இலங்கை அரசிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்ட மொழித்துறை அமைச்சுக்கும் இடையிலான மொழிகொள்கை அமுலாக்கல் தொடர்பான ஒத்தாசைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்தல்.
இறுதியாக இலங்கையின் தெளிவற்ற நிலை தொடர்கின்றது இது புதிய அணுகுமுறையின் ஆரம்பம் என்பதாலா அல்லது தவறாக இருக்குமா என்ற கேள்விகள் தேவை.
இருந்தாலும் இருதலைவர்களும் பல விட்டுக்கொடுப்புகளுடன் இணைந்த ஆட்சி என்ற தேசிய அரசாங்கம் என்ற பெயருடன் நடத்திச் செல்வது கடினம்பற்றி எண்ணும் போது இதுவும் மிகப்பெரிய திறமை என்று தான் எண்ணவேண்டும்.
இந்த இரு தலமைகளுக்கும் கீழே பெரிய பெரிய டைனோசர் மிருகங்கள் வாலை முறுக்கிக்கொண்டு பல்லை நெறுமிக்கொண்டுதான் தேசிய அரசு என்ற மின்பாயும் கம்பிக்கூட்டுக்குள் நிற்கின்றன இதுதான் உண்மை.
மோசடிக்காரை தண்டிப்பது சிக்கலாகவுள்ளது இவர்களின் ஆட்சிக்குள்ளும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் இருக்கிறார்கள் அதில் கை வைத்தால் இந்த அரசே இந்த ஆட்சியை கவிட்டமாதிரி ஆகிவிடும்.
ஜனாதிபதி அதிகாரம் குறைக்கப்பட்டாலும் அதே கதை தான் ஆப்பு இழுத்த குரங்கின் நிலையில் தேசிய அரசாங்கம்.
தமிழர்களின் நினைவேந்தல் நிகழ்வின் முதன்மையை மோடியின் வருகை பாதித்திருப்பதையும் உணர்க சிங்களவர்களும் விட்ட பிழைகளால் சிக்கி தவிக்கின்றார்கள் இலங்கைத் தமிழர்கள் அதிலிருந்து மீண்டும் எழும்படி முறைகளைத் தேடாமல் சரியான தெரிவுகள் இல்லாமலே அலைகின்றார்கள்.
இதன் பயனாக மலையகத் தமிழர்களும் இஸ்லாமியத் தமிழர்களும் குளிர்காயும் அரசியலை சரியாகப் பயன்படுத்துகிறார்கள் இது அவர்களின் திறன் என்று தான் பாராட்ட வேண்டும்.
இந்தியப் பிரதமர் மோடி அவர்களை சூழ்நிலை காரணமாக அழைத்தோம் வேண்டப்படாதவராக இருந்தாலும் இப்படி மதிப்பளித்து(கெளரவப்படுத்தியே) ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் எல்லாம் செய்கின்றார்கள் சீனாவிடம் அதிகம் வாங்க என்பதையும் மோடி அவர்களும் உணர்ந்திருக்கக்கூடும்.
இந்த நிலையில் மலையகக் கட்சிகள் கூட்டாக மக்களைக் கூடச்செய்து வரவேற்றமையும் உண்மையாக மனதார வரவேற்றமையானதும். வீதிகளில் மலைச்சாரல்களிலும் நின்று மலையக மக்கள் வரவேற்றதையும் வழியனுப்பியதையும் உணர்ந்துவிட்டார்.
அவர்மனதை அது பாதித்துள்ளது. அதனால் அந்தக்காட்சிகளை தனது முகநூலில் உடனே ஏற்றிக்கொண்டார். இலங்கைப்பயணம் நினைவுக்குரியது என அறிவித்தும் விட்டார்.
அவர் பயணத்தில் தமிழர்களுக்கு நன்மை உண்டோ இல்லையோ பண்பாடு ஒன்றிருக்கின்றது அரசமட்ட ஆட்சியாளர் கூத்து அழகாக திட்டமிட்டு நடந்திருக்கிறது. தமிழகத்தில் ஜெயலலிதாவின் மரண வீட்டிற்கு வந்த பிரதமர் நெருக்குப்பட்டதை அந்தக்காட்சிகளை ஒப்பிட்டுப் பாருங்கள் இலங்கையர் கட்டமைப்பு எப்படிப்பட்டது என்று.
- பூநகரி பொன்னம்பலம் முருகவேள்: சுவிற்சர்லாந்து-
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila