காப்பாற்றப்படும் கறுப்பு ஆடுகள்!

ஜெனிவா தீர்மானம் தொடர்பாக கூட்டு எதிரணியைச் சேர்ந்த பா.உ. தினேஷ் குணவர்தனவினால் கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது உரையாற்றிய முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் நிதி அமைச்ருமான மங்கள சமரவீர இராணுவத்தில் சில கறுப்பு ஆடுகள் இருப்பதாகக் கூறியிருந்தார்.
இராணுவத்தில் உள்ள தவறுகளை இழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரமே இலங்கை இராணுவத்தின் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஒட்டுமொத்த இராணுவமும் போரின் போது தவறிழைக்கவில்லை. குறிப்பிட்ட சிலர் மாத்திரமே தவறுகளை இழைத்திருக்கின்றனர் என்று நிரூபிப்பதற்கு அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அரசதரப்பினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கூட ஒட்டுமொத்த இராணுவத்தையும் குற்றம் சாட்டவில்லை. இராணுவத்தில் உள்ள சிலரே தவறிழைத்தனர் என்றும் அவர்களை அரசாங்கம் பாதுகாக்க முற்படக்கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.
முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்றும் அது ஒரு நிறுவன ரீதியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்றும் தமிழர் தரப்பு கூறிவரும் நிலையில் இரா.சம்பந்தன் இராணுவத்தில் உள்ள சிலரே குற்றமிழைத்தனர் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒட்டுமொத்த இராணுவத்தையும் குற்றம் சாட்டினால் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் முடங்கி விடும் என்ற அச்சத்தினால் அவர் அவ்வாறு இறங்கி வந்திருக்கக் கூடும். ஆனால் தீவிர தமிழ் தேசிய வாதக் கருத்துடையோர் அவரது அந்த நிலைப்பாட்டுடன் இணங்குவதற்கு வாய்ப்பேயில்லை.
தற்போதைய அரசாங்கம் இராணுவத்துக்குள் தவறுகளை இழைத்தவர்கள் இருக்கிறார்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியிருக்கிறது.
இதுவரையில் இராணுவத்தில் தவறிழைத்தவர்களைக் கண்டறிவதற்கோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கோ எந்தவொரு பொறிமுறையும் உருவாக்கப்படவில்லை.
மனித உரிமைகள் தொடர்பான அரசாங்கத்தின் மெத்தனப் போக்கையே இது வெளிப்படுத்துவதுடன் இந்த விவகாரத்தை காலம் கடத்தி ஆறப்போட்டு நீர்த்துப் போகச் செய்வதற்கான எத்தனமாகவே கொள்ளப்படுகிறது.
அரசாங்கம் இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் தற்போதைய நெகிழ்வுப் போக்கையும் தனக்கு சாதகமாக்கி வருகிறது.
போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதையும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதையும் முன்னிறுத்தி ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா இதுவரையில் நான்கு தீர்மானங்களை முன்வைத்திருந்தது.
ஜெனிவாவில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட இந்த தீர்மானங்களில் ஒரு கட்டமாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் ஒரு விசாரணையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அந்த விசாரணை அறிக்கையிலும் கடந்த மார்ச் மாதம் ஐநா மனித உரிமை ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசெய்னினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலும் முன்வைக்கப்பட்டிருந்த ஒரு விடயம் படையினரை அமைதி காப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கு முன்னரும் சர்தேச பயிற்சிகள் பரிமாற்றங்களில் ஈடுபடுத்துவதற்கு முன்னரும் முறையான ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்பதாகும்.
அதாவது போரின் போது மனித உரிமை மீறல்கள் எதிலும் ஈடுபடாதவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சர்வதேச அளவில் அமைதி காப்பு பணி அல்லது பயிற்சிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தது.
2015ம் ஆண்டு செப்படம்பர் மாதம் முன்வைக்கப்பட்ட இந்தப் பரிந்துரை தற்போது நடைமுறையில் இருப்பதாகவும் மூன்று கட்டங்களாக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இதனைக் கண்காணிக்கும் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த மார்ச் மாத அமர்வில் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகமும் இந்த ஆய்வு முறையின் ஒரு கட்டத்தில் பங்கேற்கிறது.ஐநா அமைதி காப்பு படைக்கு படையினரைத் தெரிவு செய்யும் போது தரமானவர்களைத் தெரிவு செய்வது தொடர்பாக ஐநா தற்போது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுகிறது.
இலங்கையில் இருந்து அனுப்பப்படும் படையினரின் 2005ற்குப் பின்னரான தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அவர்கள் இராணுவத்தில் பணியாற்றும் போது மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை இலங்கை வழங்கும்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் அல்லது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை ஐநா அமைதி காப்பு பணிக்கு அனுப்பப்படும் படையினர் எந்தவிதத்திலும் மீறவில்லை என்பதை இலங்கை அதிகாரிகள் எழுத்து மூலம் உறுதிப்படுத்துவதுடன் இராணுவத்தினர் தவறிழைக்கும் பட்சத்தில் அவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் தாம் ஈடுபடமாட்டோம் என்றும் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐநா பொதுச் செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் அண்மையில் ஏபி செய்தி நிறுவனத்துக்கு கூறியிருந்தார்.
இந்த ஆய்வு முறை நடைமுறைக்கு வந்த பின்னர் ஐநா அமைதிப் படைக்காக இலங்கையில் இருந்து அனுப்பப்படும் படையினரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
ஐநா அமைதிப்படையில் பணியாற்றுவதற்குத் தேவையான தகைமைகளைக் கொண்டவர்கள் இலங்கை இராணுவத்தில் குறைந்தளவிலேயே இருப்பது தான் அதற்குக் காரணம்.
மனித உரிமைகள் தொடர்பான ஒழுக்கமான பதிவுகளைக் கொண்ட படையினர் இராணுவத்தில் குறைவாக இருப்பது முக்கியமான பிரச்சினையாக மாறியிருக்கிறது.
எவ்வாறாயினும் ஐநா அமைதி காப்பு பணியில் இலங்கைப் படையினரை ஈடுபடுத்தும் விடயத்தில் புதிய கண்காணிப்பு நடைமுறைகளால் அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.
இதற்கு முன்னர் பரூண்டி மற்றும் கொற்கோ நாட்டுப் படையினரை ஐநா அமைதிப் படையில் சேர்த்துக் கொள்ளும் போது தான் இந்த ஆய்வு முறை கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் அது பெரியளவிலானதாக இருக்கவில்லை.
முதல்முறையாக இலங்கைப் படை்யினர் விடயத்தில் தான் பெரியளவிலான ஆய்வு முறையை ஐநா நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஆபிரிக்க நாடுகளான கொங்கோ, புரூண்டி என்பன மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற நாடுகள். அங்கு இராணுவத்தினர் மத்தியிலான ஒழுக்கம் மிகக் குறைவே.
அத்தகைய இராணுவங்களுக்குப் பின்பற்றப்பட்ட ஒழுக்க ஆய்வு முறையைத்தான் இப்போது இலங்கைப் படையினர் மத்தியிலும் ஐநா மேற்கொள்கிறது.
இத்தகைய நிலையானது பாராளுமன்றத்தில் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்ட இலங்கை இராணுவத்தின் நற்பெயர் என்ற விடயத்தைப் பற்றிய கேள்வியை எழுப்ப வைக்கிறது.
படையினர் பற்றிய தனிப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படத் தொடங்கிய பின்னர் ஐநா பணிக்காக அனுப்பப்படும் இலங்கைப் படையினரின் எண்ணிக்கையில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
உதாரணத்துக்கு மாலியில் ஐநா அமைதிப்படையில் பணியாற்றுவதற்கு 1000 இலங்கைப் படையினரை அனுப்புமாறு ஐநா கேட்டிருந்தது. இலங்கை அரசாங்கமும் அதற்கு இணங்கியிருந்தது.
எனினும் தற்போதைய கடுமையான கண்காணிப்பு ஆய்வு முறையினால் 200 பேரை மாத்திரமே இலங்கைப் படையினரால் மாலிக்கு அனுப்ப முடிந்திருக்கிறது.
மாலியில் பணியாற்றும் இலங்கைப் படையினருக்குத் தேவையான போதிய ஆயுத தளபாடங்கள் இல்லாமையே இதற்குக் காரணம் என்று இராணுவத்தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
ஆனாலும் இராணுவத்தினரில் பெரும்பாலானவர்கள் ஒழுக்க விடயத்தில் திருப்தியான பதிவுகளைக் கொண்டிராமையே மாலியில் பணியாற்றுவதற்கான ஐநா அமைதிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படவர்களின் எண்ணிக்கை குறைந்தமைக்கு காரணம் என ஐநா அமைதிப் படையின் ஒழுக்காற்றுப் பிரிவின் தலைவர் அதுல் காரே தெரிவித்துள்ளார்.
எமது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் தோல்வி அடைந்தவர்கள் தொடர்பாக கருத்துக்கூற நான் விரும்பவில்லை. ஆனால் ஒழுக்காற்று விடயத்தில் நாங்கள் பலமானதொரு கோட்பாட்டைக் கொண்டுள்ளோம் என அவர் அண்மையில் ஏபி செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டிருந்தார்.
இது ஐநா அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக அனுப்பப்படும் இலங்கைப் படையினர் விஜடயத்தில் மாத்திரமே கடைப்பிடிக்கப்படும் நடைமுறையாக உள்ளது.
இது மாத்திரமே மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஒரு இராணுவத்தினர் மீதான சர்வதேசத்தின் நடவடிக்கையாக இருக்கப் போகிறதா?இது மட்டுமே மனித உரிமை மீறல்களை சர்வதேச அளவில் கட்டுப்படுத்துவதற்குப் போதுமானதைாக இருக்குமா? ஆகிய கேள்விகள் இச்சூழலில் எழுகின்றன.
இலங்கை அரசாங்கமே கறுப்பு ஆடுகள் இராணுவத்துக்குள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்கிறது.
ஐநா அமைதிப்படைக்கு அனுப்புவதற்குத் தேவையான மனித உரிமைகள் பற்றிய நல்ல பதிவுகளுடன் கூடிய தகைமையைக் கொண்டவர்கள் அரிதாகவே இராணுவத்தில் இருக்கின்றனர்.
இப்படியான சூழலில் மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான ஒரு விரிவான ஒழுற்கிற்குள் சர்வதேச சமூகம் வரவேண்டியுள்ளது.
ஆனால் சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் பெரியளவிலான பொறுப்புடன் நடந்து கொள்வதாக கூறமுடியாது.சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் எத்தகைய கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது?
அந்தக் கடப்பாடு எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது? என்ற கேள்விகளுக்கான பதில் தொடரும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila