இனவாத செயற்பாடு நன்மை தராது!

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதியன்று, காலஞ்சென்ற வணக்கத்துக்குரிய மாதுளுவேவ சோபித தேரரே மனம் நொந்த நிலையில் ஒரு கருத்து வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதி அவர்களே! மிகச் சிரமமானதொரு வேலையை நாம் மேற்கொண்டோம். ரொட்டி சுடும் கல்லைச் சூடாக்க நாங்கள் வருடக்கணக்கான நாள்களை புகையில் கழித்தோம். அவ்விதம் அந்தக் கல்லை, ரொட்டி சுடுவதற்காகவே நாம் சூடாக்கிக் கொடுத்தோம். ஆனால் தற்போது பார்க்கும் போது அது தீப்பற்றி மூண்டெரிகிறது. நாங்கள் அதனை ரொட்டி சுடுவதற்காகத்தான் தயார் செய்தோம். ஆனால் அந்த ரொட்டி தற்போது கருகிச் சாம்பராகிப் போயுள்ளது.
இதுவே அவர் அன்று வெளியிட்ட கருத்து
மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசை அகற்றி, நியாயமான சமூகமொன்றை உருவாக்கும் முயற்சியில் முன்னின்று பாடுபட்ட சோபித தேரர், தாம் உயிரிழக்கு முன்னர் மைத்திரிபால அரசுக்கு விடுத்த கடைசி அறிவுறுத்தல் இதுவாகும்.
உண்மையில் மைத்திரிபால சிறிசேன அரசு மற்றெல்லோரது ஆலோசனைகளையும் விட, சோபித தேரரது ஆலோசனைக்கே முன்னுரிமை வழங்கிச் செயற்பட்டிருக்க வேண்டும். மகிந்தவின் தலைமையிலான அரசை அகற்றி, மைத்திரிபால தலைமையிலான அரசைப் பதவியில் அமர்த்த சோபித தேரர் மேற்கொண்ட முயற்சிகள் பெரும் பெறுமதி மிக்கவை.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதிய அரசியல் தலைமைத்துவ மாற்றத்தின் பின்னர், சோபித தேரர் பொது சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐ.தே.கட்சியுடன் உடன்படிக்கையொன்றை மேற்கொண்டார்.
முக்கிய 14 விடயங்களை உள்ளடக்கி வரையப்பட்ட அந்த உடன்படிக்கையில் கீழ்க் குறிப்பிடப்படும்
புனர்நிர்மாணங்களை மேற்கொள்ளல்,
புதிய நாடாளுமன்றத்தை அரசமைப்பு உருவாக்கல் சபையாக ஆக்கி நடைமுறையிலுள்ள நிறைவேற்று ஜனாதிபதி நடைமுறையை ஒழித்து நாடாளுமன்றம் பொறுப்புக்கூறத்தக்க அமைச்சரவை அரசமைப்பொன்றை உருவாக்க முன்னுரிமை வழங்கல்,

நாடாளுமன்றத் தேர்தல் மூலம் நாடாளுமன்றம் உருவாக்கப்பட்ட பின்னர் அரசமைக்கும் அதிகாரத்தைப் பெற்ற கட்சியை மாற்ற இயலாத விதத்திலான சட்டமொன்றை அரசமைப்பு விதிகளில் உள்ளடக்கல்
போன்ற முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
குறித்த அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஐ.தே.கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி என்பவை இணைந்து இணக்கப்பாடொன்றை எட்டின. நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழிப்பதென்பது மைத்திரிபால ஏற்றுக்கொண்ட முக்கிய அம்சமாக அமைந்திருந்தது.
ஆனால் தற்போது சுதந்திரக் கட்சியோ ‘‘மைத்திரிபால அவ்விதம் இணக்கப்பாடொன்றுக்கு ஒப்புக் கொண்டிருந்தாலும், சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல’’ எனத் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சுதந்திரக் கட்சி ஒரு நிலைப்பாட்டிலும் தாம் மற்றொரு நிலைப்பாட்டிலும், இருப்பதாக மைத்திரியால் உணர இயலாது எனக் கூறிவிட இயலாது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசியத்தின் அடிப்படையில் மேற்கொள்ளும் சகல பிரிவினை முயற்சிகளையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன்; வெறுக்கிறேன். நான் எனது வாழ்நாள் முழுவதும் பிரிவினைவாதத்துக்கு எதிராகப் போராடி வந்துள்ளேன்; தற்போதும் போராடி வருகின்றேன்; எனது உயிர் பிரியும் நாள் வரை போராடுவேன்’’ என பிரிவினைவாதத்துக்கு எதிரான கடும் கொள்கை நிலைப்பாட்டைக் கடைக்கொண்டவர் தென்னாபிரிக்காவின் முன்னாள் அரச தலைவர் நெல்சன் மண்டேலா.
பல்லாண்டுகள் காலமாக ஐரோப்பாவின் குடியேற்ற நாடாகவிருந்த தென்னாபிரிக்காவில் நிலவிய அடிமைத்தளை நடைமுறைக்கு எதிராகப் போராடிய அவர், இனபேதமற்ற உலகொன்றுக்காகக் கனவு கண்ட பெருமகனாவார்.
ஒரு இனத்துக்கு இருக்க வேண்டிய அடிப்படை அம்சங்களென சொந்த இனக்குழுமம், பொதுவான மொழி, பொதுவான கலாசாரம் என்பவை ஆரம்பத்தில் எம்மிடம் இருந்ததில்லை. நாம் தென் சீன, தென்னிந்திய, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் (பாகிஸ்தானிலிருந்து பிரிவதற்கு முன்னர்) இலங்கை மற்றும் தீவுக் கூட்டங்களிலிருந்து வந்து குடியேறிய சமூகங்களைக் கொண்டிருந்தோம். இத்தகைய சகல நாடுகளிலிருந்தும் வந்து குடியேறிய இனத்தவர்களையும் ஒன்றிணைத்து நாட்டை நிர்வகிக்க இயலுமா என்ற சிக்கல் நிலை எம்முன் பூதாகரமாக எழுந்து நின்றது.
மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டவர் சிங்கப்பூரை உருவாக்கிய சிற்பியாகக் கொள்ளப்பட்ட சிங்கப்பூரின் பிரதமர் பொறுப்பு வகித்த லீ குவான் யூ என்ற பெருமகனாவார். ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமாகவேயன்றி இரண்டு மூன்று பிரிவுகளாக நாட்டைப் பிரித்து அந்த நாட்டை முன்னேற்ற இயலாதெனக் கூறியவர் லீ குவான் யூ.
நாட்டில் வாழும் சகலருமே சிங்கப்பூர் பிரஜைகள்தான் என்ற உணர்வை அங்கு வாழ்ந்த பல்வேறு நாட்டவர்கள் மனங்களில் நிலைபெற வைத்து, சிங்கப்பூரின் பல்வேறு இனக்குழுமங்களையும் சிங்கப்பூரின் தேசிய அன்னியோன்ய நிலைப்பாட்டுக்கு ஒன்றிணைத்ததன் மூலம் லீ குவான் யூ சிங்கப்பூரை உலகின் தலைசிறந்த நாடனெ்றாகக் கட்டியெழுப்புவதில் வெற்றி கண்டவர்.
1948ஆம் ஆண்டளவில் ஆசியப் பிராந்தியத்தில் முன்னேற்றமடைந்த நாடாகத் திகழ்ந்தது ஜப்பானே ஆகும். அதற்கடுத்த இரண்டாவது நிலையில் இலங்கை திகழ்ந்து வந்தது.
சிங்கப்பூரைச் சிறந்ததொரு நாடாக உருவாக்கக் கடுமையாக உழைத்த லீ குவான் யூ, இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட வேளை, சிங்கப்பூரை இலங்கை போன்ற நாடாக ஆக்குவதே தமது கனவாகும் எனத் தெரிவித்திருந்தார்.
அவ்விதம் தெரிவித்த லீ குவான் யூ, பின்னர் ஒரு காலகட்டத்தில், இத்தகைய எதிர்கால எதிர்பார்ப்பைக் கொண்டிருந்த இலங்கை, சுதந்திரம் பெற்றதன் பின்னர் எத்தகைய விதத்தில் பின்னடைவுக்கு உட்பட்டதென்பதைத் தாம் கண்டு கேட்டு உணர்ந்ததாகக் கூறியிருந்தார். அது இன, மத பேதங்கள் அடிப்படையில் முரண்பாடுகளுக்கு உட்பட்டதனால் ஏற்பட்ட விளைவேயாகும்.
1953ஆம் ஆண்டில் நாட்டில் வடபகுதிக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.தே.கட்சி அரசின் பிரதமர் சேர்.ஜோன். கொத்தலாவல , சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் நாட்டில் சம அந்தஸ்து வழங்கப்படுமெனக் கூறியமை தென்பகுதியைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. சேர்.ஜோன், சிங்கள இனத்தைக் காட்டிக் கொடுத்து விட்டதாக எதிர்க்கட்சித் தரப்பினர் குற்றம்சாட்டினர்.
பெளத்தமதத் துறவிகள் தரப்பினர் சேர்.ஜோனுக்கு எதிராக தீவிர எதிர்ப்பை வெளிக்காட்டியதுடன், பண்டாரநாயக்க மற்றும் பிலிப் குணவர்த்தன போன்ற இனவாத அரசியல்வாதிகள் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தமை போன்று, ஐ.தே.கட்சி அரசுக்கு எதிரான செயற்பாடுகளுக்குத் தூண்டுதல் அளித்து வந்தனர்.
இத்தனைக்கும் பிரதமர் சேர்.ஜோனோ, பெளத்த துறவிகள் எத்தகைய எதிர்ப்பை மேற்கொண்டாலும் நான் என்னுடைய கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
அப்படியானால் நாம் சிங்கள மொழியை அரச கரும மொழி ஆக்குவோம்’ என 1956ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வேளையில் பண்டாரநாயக்கா தமது தேர்தல் குறித்த கொள்கை நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
மக்கள் அலை பண்டாரநாயக்கவின் நிலைப்பாட்டால் கவரப்பட்டு பண்டாரநாயக்கவுக்கு ஆதரவாகத் திரண்டெழுந்தது.
அந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் ஐ.தே.கட்சிக்கு ஆக எட்டே எட்டுத் தொகுதிகளில் மட்டும் வெற்றி கிட்டியது. சேர்.ஜோனினது கொள்கை நிலைப்பாட்டாலேயே தோல்வி கிட்டியது எனவும், நாட்டின் தேசியப் பாதுகாப்புக் குறித்து அவர் அக்கறை கொள்ளாததனாலேயே அத்தகைய பின்னடைவை ஐ.தே.கட்சி அரசு சந்திக்க நேர்ந்ததெனவும் பலர் அரசுக்கு எதிராக விமர்சனம் முன்வைத்தனர்.
இவற்றையெல்லாம் ஒரு சிறிதுதானும் கணக்கில் எடுக்காத சேர்.ஜோன் கொத்தலாவல, பொதுத் தேர்தலில் வெற்றியீட்டியிருந்த பண்டாரநாயக்கவிடம் அரசுப் பொறுப்பை முறைப்படி ஒப்படைத்து விட்டு, தமது கந்தவளைத் தோட்டத்தில் சென்று ஓய்வாகப் பொழுதைக் கழிக்க முடிவு செய்து அதற்கமையச் செயற்பட்டார்.
இனவாதத்தைத் தூண்டி அரச அதிகாரத்தைப் பண்டாரநாயக்க கைப்பற்றிக் கொண்டாலும் பாதிக்கப்படப் போவது எந்தத் தரப்பினர் என்பது மிக விரைவில் தெரியவருமெனவும் சேர்.ஜோன் தெரிவித்திருந்தார்.
காலப்போக்கில் சிங்களத்தை அரச கரும மொழியாக்க பண்டாரநாயக்க தாமதிப்பதாகக் குற்றஞ்சாட்டி அவர் பதவிக்கு வருவதற்கு ஆதரவளித்த பெளத்த துறவிகள் உட்பட்ட இனவாதத் தரப்பினர் பண்டாரநாயக்கவுக்குப் பலவழிகளில் இடையூறுகளை ஏற்படுத்த ஆரம்பித்தனர்.
காலப்போக்கில் அத்தகைய எதிர்ப்புணர்வு தீவிரமடைந்து கடைசியில் பண்டாரநாயக்க பெளத்த துறவியொருவரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட நேர்ந்தது.
பண்டாரநாயக்கவின் பூதவுட லுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற சேர் ஜோன் கொத்தலாவல, இவ்வாறு நடக்கக்கூடுமென நான் எதிர்பார்த்தேன். நான் கட்டி வைத்திருந்த நாய்களை பண்டாரநாயக்க அவிழ்த்து விட்டிருந்தார். அவைகள் பண்டாரநாயக்கவையே கடித்துக் குதறி விட்டன எனக் கருத்து வெளியிட்டிருந்தார்.
சேர் ஜோன் இனவாதிகளையே அவ்விதம் விமர்சித்திருந்தார். அந்த வகையில் அவர் இனவாதப் போக்கில் ஒருபோதும் செயற்படவில்லை. இன்றைய மைத்திரி – ரணில் கூட்டு அரசும் கூட நடுநிலைப் போக்கில், மிதவாதப் போக்கில் செயற்படுகிறது என்றே இன்று கடும் கோட்பாட்டாளர்கள் தரப்பால் விமர்சிக்கப்படுகிறது.
சேர் ஜோன் பிரதமராகச் செயற்பட்ட வேளையில் நாடு குறித்து அக்கறை காட்டாத தலைவரென எதிர்க்கட்சியினர் அவரை விமர்சித்து வந்தனர். ஆனால் ஒன்றரை வருடங்கள் வரை மட்டுமே பிரதமராகப் பதவி வகித்த சேர். ஜோன், தனது பதவிக் காலத்தில் முதன்முதலாக இலங்கைப் பிரஜையான சேர் ஒலிவர் குணதிலகவை தேசாதிபதியாக நியமித்து இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய சகாப்தம் ஒன்றை ஏற்படுத்தினார்.
நாட்டின் சகல சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போதும் இலங்கைத் தேசியக் கொடியுடன் பிரிட்டன் கொடியையும் ஏற்றி வைக்கும் நடைமுறையை முதன்முதலில் கைவிட்டு நாட்டின் தேசியக் கொடியை மட்டுமே ஏற்றி வைக்கும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர் சேர் ஜோனே. அதுமட்டுமன்றி, இலங்கைக்கு ஐ. நா. சபையின் உறுப்புரிமையை முதன் முதலில் பெற்றுக் கொடுத்தவரும் சேர் ஜோன் கொத்தலாவலவே.
அந்த வகையில் சேர் ஜோன் இலங்கையின் பிரதமராகச் செயற்பட்ட குறுகிய காலம், இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்தது. இன்றைய கூட்டாட்சி அரசின் மீதும் கூட, கூட்டு எதிரணியினர் சிங்கள இனம் குறித்து அரசு முக்கியத்துவம் வழங்கிச் செயற்படுவதில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆனால் மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் எவ்வாறு மனம் போனபடியெல்லாம் செயற்பட்டார்கள் என் பது குறித்து சிந்தித்துப் பார்க்க அவர்கள் தவறியுள்ளனர்.
தாம் உயிரிழப்பதற்கு முன்னர் கூட்டு ஆட்சித் தரப்பினருக்கும், எதிரணித் தரப்பினருக்கும் சேர்த்து வேண்டுகோளொன்றை விடுத்த காலஞ்சென்ற சோபித தேரர், கட்சிகளது கொள்கை நிலைப்பாடுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டுச் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தை அரசமைப்புச் சபையாக மாற்றி புதிய அரசமைப்பொன்றை உருவாக்குமாறு கோரியிருந்தார்.
நிறைவேற்று அரச தலைவர் நடைமுறையை ஒழித்துக் கட்டி நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லுமாறு கோரியிருந்தார்.
சோபித தேரரது மேற்குறித்த கோரிக்கையை மறந்து போய் விட்ட தரப்பினர்கள், மீண்டும் அதனை நினைவுபடுத்திப் பார்த்தல் இன்றைய காலத்தின் தேவையாக ஆகியுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila