நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவின் எதிரொலி! களமிறங்கியது விசேட பொலிஸ் குழு

யாழ்.மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு வேளைகளில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளன.
இதனையடுத்து யாழில் தொடரும் வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேற்படி பொலிஸ் குழுக்கள் யாழில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை(14) இரவு யாழ். கோண்டாவில், நல்லூர், சங்குவேலி, ஆறுகால் மடம் உள்ளிட்ட ஆறு பகுதிகளில் ஒரே இரவில் அடுத்தடுத்து நடாத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவங்களில் ஒன்பது பேர் படுகாயமடைந்ததுடன் பல இலட்சம் ரூபா பெறுமதியான உடமைகளும் சேதமாக்கப்பட்டிருந்தன.
புதன்கிழமை இரவு யாழ். நகரை அண்டிய பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நேற்றைய தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றும், இன்றும் யாழ். நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகள், கொக்குவில், கோண்டாவில், உரும்பிராய் உள்ளிட்ட பகுதிகளில் இரவு வேளைகளில் பெருமளவான பொலிஸார் வழமைக்கு மாறாகப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் கோண்டாவில், உரும்பிராய் உள்ளிட்ட பகுதிகளில் பொலிஸாருடன் அதிரடிப்படையினரும் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila