இறுதிப்போரில் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுங்கள்! – பிரித்தானியா


british parliamentarian

இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது படையினரிடம் சரணடைந்தவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிடுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
தமிழர் தாயகப் பகுதியில் யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் குறித்த உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள், 300 நாட்களை கடந்துள்ளன. இந்நிலையில், இலங்கை ஜனாதிபதிக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
300 நாட்கள் கடந்துள்ள போதும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எவ்வித காத்திரமான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லையென பிரித்தானியாவின், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் Paul Scully தெரிவித்துள்ளார்.
எனினும், அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் வயதான காலத்திலும் இம்மக்கள் மனதைரியத்தை கைவிடாமல் போராடி வருவது பாராட்டத்தக்க விடயமென குறிப்பிட்டுள்ளார்.
பல பாதிப்புக்களை சந்தித்த தமது நாட்டு பிரஜைகளின் மீது அரசாங்கம் காட்டும் பாகுபாடானது அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், காணாமல் போனோர் விடயத்தில் தான் விரைந்து செயற்படுவதாக கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி மைத்திரி உறுதியளித்தார். எனினும் ஜனாதிபதியின் வாக்குறுதி நிறைவேற்றப்படாமை துரதிஷ்டவசமானதென Paul Scully குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் நீண்ட கால வாக்குறுதியான காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த அலுவலகத்தினை அமைக்கும் நடவடிக்கை இழுத்தடிக்கப்படுவதானது, உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சரணடைந்தவர்களின் பெயர் பட்டியலை இனியும் தாமதிக்காது உடன் வெளியிட வேண்டுமென கோரியுள்ளதோடு, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களது போராட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாகவும் Paul Scully குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila