தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களுக்காகப் போராடவில்லை?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களுக்காகப் போராடவில்லை, தங்களுடைய அதிகார வெறிக்காகத்தான் போராடியது என்ற போலி முகத்தை உருவாக்க வேண்டிய தேவை சில சக்திகளுக்கு இருந்தது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முற்பகல் 11 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலமையகத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டபோது நான் பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். அப்போது விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரித்தவர்களை நினைவுகூர முடியாத ஒரு சூழல் காணப்பட்டிருந்தது.
ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள் அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஒரு தாக்குதல் நடவடிக்கைக்குத் தயாராகுவது போல ஆயிரக்கணக்கில் திரண்டு மாமனிதருக்கு அஞ்சலி செலுத்தினர்.
அந்தளவிற்கு நினைவுகூரத்தக்க வகையில் மாமனிதர் இந்தத் தேசத்திற்கு அற்பணிப்பைச் செய்திருந்தார். ஏன் குமார் பொன்னம்பலத்தை கொல்கின்ற அளவிற்கு சந்திரிக்கா அரசாங்கம் சென்றது என்பதைத்தான் நாங்கள் இன்றைய காலகட்டத்தில் விளங்கிக்கொள்ள வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமாகச் சித்தரிக்கப்படவேண்டி தேவை சந்திரிக்கா அரசாங்கத்துக்கு இருந்தது. அந்த இயக்கம் தமிழ் மக்களுக்காகப் போராடவில்லை தங்களுடைய அதிகார வெறிக்காகத்தான் போராடியது.
அவர்கள் துப்பாக்கி முனையிலே மக்களை அடக்கி வைத்திருக்கின்றார்கள் என்ற ஒரு போலி முகத்தை காட்டவேண்டிய ஒரு தேவை தமிழ் மக்களையும், விடுதலைப் புலிகளையும் பிரிக்க விரும்பிய சக்திகளுக்கு இருந்தது.
இதில் முதலாவது தேவை இலங்கை அரசாங்கத்துக்கு இருந்தது. இரண்டாவது தேவை இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பிய வல்லாதிக்க சக்திகளுக்கு இருந்தது.
இலங்கை அரசாங்கத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக தமிழர்களை வெறும் கருவியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் தமிழர்களுக்காக நேர்த்தியாக சிந்திக்கக்கூடியவர்கள் தலமைத்துவத்தில் இருக்கக்கூடாது என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.
முன்னரும் பல இயக்கங்கள் உருவாகின. அவை தங்கள் கொள்கை கோட்பாடுகளைக் கைவிட்டுவிட்டு இந்தியா கொள்கைகளை வகுக்கட்டும் நாங்கள் இந்தியாவின் சிறந்த சிப்பாய்களாக இருப்போம் என பிரகடனங்களைச் செய்துகொண்டு கூலியாட்களாகச் செயற்படத் தொடங்கின.
ஆனால் தமிழினத்துக்காக தமிழர்களுடைய விடுதலைதான் தங்களுடைய கொள்கை என்பதில் மிக உறுதியாக செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏதோவொரு வகையிலே தனிமைப்படுத்த வேண்டுமாக இருந்தால் அதற்கு ஏனைய அரசியல் தரப்புக்கள் அனைத்தும் தங்களுடைய எடுபிடிகளாக இருக்கவேண்டும் என்பது இலங்கை அரசினதும் இந்த சர்வதேச சக்திகளினதும் தேவையாக இருந்தது.
அப்படிப்பட்ட சூழலிலே விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்த வேண்டும் தமிழ் மக்களுடைய தலமை தமிழ்மக்களைப் பற்றி சிந்திக்காத ஒரு தலமையாக இருக்க வேண்டும் என்ற ஒரு கணக்குப்போட்டு இந்த ஜனநாயக அரசியல் தலமைகளை தங்களுடைய கூலிகளாக வளர்த்தெடுத்து வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் குமார் பொன்னம்பலம் இவர்களுடைய எதிர்பார்ப்பிற்கு மாறாக தமிழ் மக்களுடைய நலன் அடிப்படையில் சிந்திக்கின்ற, செயற்படுகின்ற ஒருவராக விளங்கினார்.
அவரை எடுத்துக்கொண்டால் அரசியல் நிலைப்பாடுகளிலும் சரி மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடையங்களிலும் சரி தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதிலே நீதியாக நின்று செயற்பட்டுக்கொண்டு வந்த ஒருவர்.
கிழக்கில் இடம்பெற்ற பல படுகொலைகளை சர்வதேச அரங்கிற்குக் கொண்டுசென்ற பெரும் பங்கு குமார் பொன்னம்பலத்துக்கு இருந்தது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான சந்திரிக்கா அரசாங்கத்தின் இராணுவ ரீதியான நடவடிக்கைகள் தொடர் தோல்விகளைச் சந்தித்துவந்த சூழலில் அரசாங்கம் பலவீனமடைந்திருந்த சூழலில் சமாதானப் பேச்சுக்கு அரசாங்கம் வரவேண்டிய நிலை ஏற்பட்டது.
அதனோடு அண்டியதாக தேர்தல் ஒன்றும் வரவேண்டியிருந்து. விடுதலைப் புலிகளது இராணுவ பலம் ஓங்கியிருந்த அந்தச் சூழலில் சமாதான உடன்படிக்கை ஒன்று வரபோகின்றது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது.
அப்படிப்பட்ட ஒரு சூழலில் குமார் பொன்னம்பலம் உயிரோடு இருப்பாராக இருந்தால் அவர்தான் தமிழர்களின் ஜனநாயக அரசியல் அணிக்கு தலைமைதாங்குவார் என்ற ஒரு நிலை ஏற்படும் அப்படி ஏற்பட்டால் விடுதலைப் புலிகளின் 30 வருட கால அரசியல் கோரிக்கையை ஒரு பயங்கரவாதக் கோரிக்கையாக சித்தரிக்க முடியாமல் போய்விடும்.
புலிகளையும், மக்களையும் பிரிக்க முடியாமல் போகும். விடுதலைப் புலிகளை ஓரங்கட்டி கைக்கூலிகளை தங்களுடைய தலைமைகளாகக் கொண்டுவர முடியாமல் போகும் என்ற ஒரு சூழலில் தான் குமார் பொன்னம்பலம் இலக்குவைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila