இராணுவத் தலையீடு இலங்கையை ஒரு பாகிஸ்தானாகவோ அல்லது ஆப்கானிஸ்தானாகவோ மாற்றும்!


வடக்கு கல்வி அமைச்சர் எச்சரிக்கை…


இராணுவத் தலையீடு இலங்கையை ஒரு பாகிஸ்தானாகவோ அல்லது ஆப்கானிஸ்தானாகவோ மாற்றும் என்று தெரிவித்துள்ள வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் வடக்கு கல்வி செயற்பாடுகளில் இராணுவம் தலையிட முயல்வது ஒரு நிர்வாக அராஜகம். அதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
வவுனியா தெற்கு வலயத்தில் இடம்பெற்ற வடமாகாண கல்வி அமைச்சின் நடமாடும் சேவையில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் அரசாங்கம் அதிகளவிலான இராணுவத்தை குவித்து வைத்துள்ளதாகவும் இராணுவத்தினருக்கு இங்கு எந்தவிதமான வேலைகளும் இல்லை என்றும் கூறிய அவர் மத்திய அமைச்சர்களே வடக்கில் எந்தவிதமான அச்சுறுத்தல்களும் கிடையாது என குறிப்பிடுவதாகவும் தெரிவித்தார்.
எனவே இவ்வளவு தொகையான இராணுவத்தை இங்கு கொண்டு வந்து வைத்திருக்க வேண்டிய தேவை கிடையாது என தெரிவித்த அமைச்சர் வடக்கில் உள்ள இராணுவத்தை 9 ஆக பிரித்து 9 மாகாணங்களுக்கு கொண்டு செல்லுமாறு ஏற்கனவே முதலமைச்ர் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
இராணுவத்திற்கு வேலை இல்லை என்று அவர்களை சிவில் நிர்வாகத்தில் தலையிட தூண்டுவதாகவும் இது ஒரு நல்ல விடயமல்ல எனக் குறிப்பிட்ட அவர் இலங்கை பாகிஸ்தானோ அல்லது ஆப்கானிஸ்தானோ இல்லை என்றும் தெரிவித்தார்.
இராணுவத்தினர் இராணுவத்திற்குரிய கடமைகளை மாத்திரம் செய்ய வேண்டும் என்றும் இந்த நாட்டிக்குள் இராணுவம் தேவையில்லை என்றும் குறிப்பிட்ட அவர் இங்கு இன்னொரு நாட்டுடன் சண்டையோ அல்லது எல்லைப் பிரச்சினையோ இல்லை என்றும் தெரிவித்தார். இந்த நாட்டு மக்களுடன் சண்டை பிடிப்பதற்கு தான் இங்கு இராணுவம் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டைச் சூழ கடல் இருப்பதால் கடற்படை மட்டுமே போதுமானது. . அங்கு தான் பாதுகாப்பு தேவை. ஆனால் இராணுவத்தை நிலை கொள்ள செய்வதற்காக அவர்களை சிவில் நிர்வாக நடவடிக்கைகளிலும், பாடசாலை செயற்பாடுகளிலும் தலையிட செய்ய முயற்சிப்பது ஒரு தவறான நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.
அச்செயற்பாடானது இலங்கையை ஒரு பாகிஸ்தானாகவோ அல்லது ஆப்கானிஸ்தானாகவோ மாற்றுவது போன்ற செயற்பாடு ஆகும். ஆகவே சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வட புலத்தின் கல்வி நடவடிக்கைகளில் புகுவதற்கு அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். வடக்கு மாகாண கல்வி அமைச்சைப் பொறுத்தவரை வடக்கு மாகாண பாடசாலை செயற்பாடுகளில் கல்வி அமைச்சு தவிர்ந்த வேறு அமைச்சுக்களினது செயற்பாடுகள் கல்வி அமைச்சரது அல்லது அமைச்சின் செயலாளரது அனுமதியுடனயே இடம்பெற வேண்டும். இதனை அனைத்து வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஏனைய அமைச்சின் கீழ் உள்ளவர்கள் கல்வி அமைச்சின் செயற்பாடுகளில் புகுவது என்பது ஒரு நிர்வாக அராஜகம். அது இலங்கையில் இருக்கக் கூடிய நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையில் அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கட்டமைப்பில் உள்ள அதிகாரிகள் தவிர்ந்த வேறு அமைச்சுக்களினதோ, இராணுவத்தினரோ செயற்பாடுகள் கல்வி அமைச்சின் அல்லது செயலாளரின் அனுமதி இன்றி இடம்பெற முடியாது. இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு பாடசாலைகளில் அனுமதி வழங்க முடியாது என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila