வடமாகாண அமைச்சர் அனந்தியிடம் துப்பாக்கி உள்ளதாக கருத்தினை வெளியிட்டுள்ள மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தொடர்பில் அனந்தி நாளைய அமர்வில் பதிலளிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.அனந்தி தனக்கு கைத்துப்பாக்கி கோரி விண்ணப்பித்தாக ஒருபுறமும் தனது மெய்ப்பாதுகாவலர்கள் சுலபமாக கொண்டு செல்ல கைத்துப்பாக்கி கோரி விண்ணப்பித்திருந்ததாக மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது.
அனந்தியுட்பட பெரும்பாலான மாகாணசபை உறுப்பினர்கள் இலங்கை காவல்துறை பாதுகாப்பினை பெற்றுள்ளனர்.அவர்களிற்கு ரி-56 ரக துப்பாக்கியே வழங்கப்பட்டுள்ளது.எனினும் வாகன பயணங்களின் போது அதனை எடுத்துச்செல்வது கடினமென்பதால் கைத்துப்பாக்கிக்கோரியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அஸ்மினிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரவுள்ளதாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். குறிப்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்வின் போன்றவர்கள் இங்கிருக்கின்ற நிலையில் துப்பாக்கி பெண்களிடம் இருக்க வேண்டும் என்ற நிலையும் தற்போது தோன்றியுள்ளதாகவும் அனந்தி கருத்து வெளியிட்டிருந்தார். அத்துடன் சாவகச்சேரி காவல்நிலையத்தில் முறைப்பாட்டினையும் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் தன்னிடம் சான்றாதாரங்கள் இருப்பதாக கூறியுள்ள அஸ்மின் அதனை நாளைய அமர்வில் முன்வைப்பதாக தமிழரசுக்கட்சி பத்திரிகைக்கு தகவல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.