கிளிநொச்சி பூநகரி பகுதியிலிருந்து படையினர் மற்றும் இலங்கை காவல்துறை கூட்டினில் நடைபெறும் சட்டவிரோத மண் அகழ்வு அம்பலத்திற்கு வந்துள்ளது.குறித்த மண் வியாபாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியிலுள்ள காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் படை அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கொழும்பிலிருந்து அத்தியாவசிய பொருட்களை எடுத்துவரும் பாரவூர்திகள் போன்று குறித்த சட்டவிரோத மண் நள்ளிரவு வேளையினில் யாழ்ப்பாணத்திற்கு கட்டுமானப்பணிகளிற்கு எடுத்து வந்து விற்கப்படுவதாக அண்மையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இணைத்தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், சிவஞானம் சிறிதரன், அகியோரின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
அப்போது குறித்த மண் கடத்தல் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இதனை தன்னால் கட்டுப்படுத்த முடியாதிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
சட்டம் ஒழுங்கைப்பேண வேண்டிய காவல்துறையின் உயரதிகாரிகளது கூட்டு களவாணி தனத்தில் மணல் கொள்ளை மீண்டும் தலைதூக்கியிருப்பது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.