யாழ். ஒல்லாந்தர் கோட்டை இராணுவத்திற்கு சொந்தமானது. கோட்டைக்குள் இருந்து இராணுவத்தை எவராலும் வெளியேற்ற முடியாது என இராணுவ கட்டளை தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்திற்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்த இராணுவத் தளபதி, யாழ் கோட்டையை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது, கோட்டைப் பகுதியில் பாதுகாப்பின் நிமித்தம் நீண்டகாலமாக தங்கியுள்ள இராணுவத்தினரை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் கலந்துரையாடினார்.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த இராணுவ தளபதி, ”யாழ். கோட்டையை இராணுவம் கையகப்படுத்துவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆனால் அதில் எவ்வித உண்மையும் இல்லை.
இராணுவத்தினர் கடந்த 1960ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலிருந்து யாழ். கோட்டைக்குள் தங்கியிருக்கின்றனர். கோட்டை என வரும்போது அது இராணுவத்திற்கே சொந்தமானது. அதற்கு வேறு எவரும் உரிமை கோர முடியாது.
இராணுவம் கடந்த பல தசாப்தங்களாக கோட்டைக்குள் தங்கியிருக்கிறது. எதிர்காலத்தில் தங்கியிருக்கும். இங்கிருந்து வெளியேறிச் செல்வதற்கான எவ்வித காரணங்களும் இராணுவத்திற்கு இல்லை” எனத் தெரிவித்தார்.