உலக மொழிகளுள் மூத்ததும் முன்னோடியுமான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்றால் அது மிகையாகாது.
கலைஞர் கருணாநிதி தமிழ் எத்தனை ஊடக வகைகளில் வளர்ந்து வந்த போதும், அத்தனையிலும் தனது பங்களிப்பை அளித்துத் தொண்டாற்றியவர்.
கையால் எழுதி விற்கும் மாணவர் நேசன் என்ற பத்திரிக்கையில் துவக்கிய தனது தமிழ் எழுத்தாளுமையை, அச்சு பத்திரிக்கை, வானொலி, நாடகம், தொலைக்காட்சி, திரைப்படம், முகநூல் வரையிலும் தன் பங்கினை சோர்வடையாமல் செலுத்தியவர்.
கலைஞர் கருணாநிதி தனது எழுத்து, பேச்சு, வசனம், கதை, நாடகத்தில் தமிழை திறம்பட கையாண்டிருக்கிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், கடிதம் எழுதுவதிலும் கூட ஒரு தனித்தன்மையை கையாண்டிருக்கிறார்.
கடந்த 04.12.1945இல் கருணாநிதி திருவாரூரை சேர்ந்த தனது தோழர் திருவாரூர் கு. தென்னன் என்பவருக்கு எழுதிய கடிதத்தை சங்கு சக்கரம் போன்ற வடிவத்தில் எழுதியிருக்கிறார்.
அக்கடிதத்தின் முடிவு அதன் நடுவே, கலைஞரின் மு.க எனும் கையொப்பத்துடன் முடிகிறது. கடந்த 2010ஆம் ஆண்டில் தான் முதல்வராக இருந்த போது, கோவையில் உலக செந்தமிழ் மாநாட்டை பெருமளவில் சிறப்பாக நடத்தினார் கலைஞர்.
அவ்விழாவில் பாடலை தானே எழுதினார். அதற்கு பின்னணி இசை அமைத்தார் ஏ.ஆர். ரகுமான். இப்பாடலில் தமிழின் சிறப்புகள் அனைத்தையும் உள்ளடக்கி தன் எழுத்தாளுமையை மீண்டுமொரு முறை நிரூபித்திருந்தார் கலைஞர்.
மார்த்தட்டி பெருமை கொள்ளும் தமிழன் இன்று தமிழ் பொக்கிஷத்தை இழந்து விட்டோம். அவர் எம்மை வீட்டு நீங்கி சென்றிருந்தாலும், தமிழுக்கு அவர் ஆற்றிய சேவை என்றும் அழியாது என்பது மட்டும் உண்மை.