குற்றஒப்புதல் வாக்குமூலங்களால் அரசியல் கைதிகள் எதிர்கொள்ளும் அவலம்!


சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களால் அரசியல் கைதிகள் நீண்டகாலம் தடுத்து வைக்கப்படும்  அவலநிலை உள்ளதாக, முன்னாள் அரசியல் கைதியான இ. இராமநாதன் தெரிவித்துள்ளார்.
சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களால் அரசியல் கைதிகள் நீண்டகாலம் தடுத்து வைக்கப்படும் அவலநிலை உள்ளதாக, முன்னாள் அரசியல் கைதியான இ. இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து வருடங்களாக அரசியல் கைதியாகவிருந்து விடுதலை செய்யப்பட்ட அவர் நேற்றுபிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
'இலங்கையில் 14 சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் காணப்பட்டார்கள். ஐந்து வருட காலத்திற்கும் 24 வருட காலத்திற்கும் இடைப்பட்ட வகையில் அரசியல் கைதிகள் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். சிறைகளில் தீர்ப்பு வழங்கப்பட்டவர்களில் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற ஒன்பது பேரும், மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பேரும் காணப்படுகின்றார்கள்.
குறிப்பாக கடந்த 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தங்களுடைய குடும்ப நிலை காரணமாக வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நீங்கள் அவ்வாறு ஒப்புக் கொண்டால் நாங்கள் உங்களுக்குச் சிறிய தண்டனையை வழங்குவோம் எனச் சொல்லப்படுவதே இதற்குக் காரணம். இவ்வாறான முடிவினை எடுத்தவர்கள் தான் கடந்த காலங்களில் விடுதலையாகியுள்ளார்கள்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் விடுதலையான இந்து மதகுருவும் பல சித்திரவதைகள் அனுபவித்த நிலையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதை நீதிமன்றம் உறுதி செய்த பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அதே போன்று தான் தற்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமென்பது பெரும் பிரச்சினையாகவுள்ளது.
நானும் சிறையிலிருந்து அனைவருடனும் பழகியவன் என்ற வகையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒருவராலும் சுயமான விருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பதே இங்கு முக்கியமான விடயம்.
தாங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று சந்தோசமாகவிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு தடவையும் நீதிமன்றத்திற்குச் செல்கின்ற போதிலும் நீதிமன்றத்தில் ஐந்து, ஆறு மாதங்கள் காலநீடிப்பு வழங்கப்படுகின்றது. இவ்வாறு வழங்கப்படும் காலநீடிப்பு முடிவடைந்த பின்னர் மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படும் போது அரச சட்டத்தரணி மற்றும் மனித உரிமை சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு வர மாட்டார்கள்.
இவ்வாறு சட்டத்தரணிகள் மாறி மாறி வராமலிருக்கும் போது தற்காலிக நீதிபதி மன்றுக்கு வருவார். அவர் இன்னும் நான்கு அல்லது ஐந்து மாத காலத்திற்கு அவரை சிறையில் தடுத்து வைத்திருப்பதற்கான அனுமதியை வழங்குவார். இதனால், அரசியல் கைதிகள் காரணமின்றி நீண்டகாலம் சிறைகளில் வாட வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
நான் முதன்முதலாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது எனக்கு எட்டு மாதங்கள். அதனைத் தொடர்ந்து வந்த வழக்குத் தவணைகளின் போது ஆறுமாதங்கள், மூன்றுமாதங்கள் எனக் கால நீடிப்பு வழங்கப்பட்டது. இறுதியில் என்னுடைய நிலைமையை எடுத்துச் சொன்ன பின்னரே கே.வி.தவராஜா என்ற சட்டத்தரணி என்னுடைய வழக்கை எடுத்து வாதாட முன்வந்தார். எனக்கு அடிகாயமுமிருந்த நிலையில் என்னைப் பரிசோதித்த வைத்தியரும் இது தொடர்பில் வைத்திய அறிக்கை தயாரித்து வழங்கியிருந்தார்.
இந்நிலையில் எனது குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை ஏற்றுக் கொள்ள முடியாதெனத் தெரிவித்து நீதிமன்றத்தால் நான் விடுதலை செய்யப்பட்டேன். எனது நகங்கள் பிடுங்கப்பட்டுச் சித்திரவதைப்படுத்தப்பட்டமையால் அந்த வேதனை தாங்க முடியாத நிலையில் எனக்கு வேறு ஏதும் வேண்டாம். மருந்தாவது தாருங்கள் என வைத்தியரைக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே அவர் எனக்கு அடிகாயங்கள் காணப்படுவதாக எழுதிக் கொடுத்தார்.
ஆனால், வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் போது உனக்கு நடந்த விடயங்களைச் சொல்லக் கூடாதெனப் பொலிஸார் கூறுவதால் பலரும் அதற்குப் பயந்து வைத்தியர்களிடம் உண்மையாக நடந்த விடயங்களைத் தெரியப்படுத்துவதில்லை.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளமையால் எங்களுடைய தமிழ்ச் சமூகமே பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறைலிருந்த போதும் அவசரகால சட்டத்தின் அடிப்படையிலேயே அரசியல் கைதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அவசரகாலச் சட்டத்தை மாற்றும் போது இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் சட்ட மாற்றத்தின் போது விடுதலை செய்யப்படுவார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. அவசரகாலச் சட்டத்தை எடுத்த பின்னர் அதற்குப் பதிலாக இன்னொரு சரத்தைப் புகுத்தி அரசியல் கைதிகள் வெளியே போக முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எடுக்கும் போது இனியொரு சட்டத்துக்குள் அவர்களை இறுக்க முடியாத வகையிலான வழி ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila