எங்கள் அரசியல் ஏறுமுகமாக ஆறுமுகனே தேர் ஏறு


நல்லூர்க் கந்தப் பெருமானுக்கு இன்று தேர்த் திருவிழா.

தமிழ்த் தலைவன் நல்லூர் வேற்பெருமானுக் குத் தேர்த் திருவிழா என்றால் நாடே களை கட்டும்.

அந்தளவுக்கு ஆறுமுகப் பெருமான் வீறு கொண்டு தேர் ஏற வருகின்ற காட்சி காந்தமாக ஈர்க்கும் தன்மை கொண்டது.

பதியில் சுவர்ண சபையில் வீற்றிருக்கும் சண்முகப் பெருமான் தேரில் ஏறுவதற்காக உள் வீதியில் ஆடி அசைந்து ஓடி வருகின்ற காட்சியை யார் கண்டாலும் அந்தப் பேறு எல்லா முத்திகளையும் தரும் என்பது ஐயுறவு இல்லாத செய்தி.

சனசமுத்திரத்தில் ஆறுமுகப் பெருமான் பட்டாடை உடுத்தி பன்னிருகரமும் படைக்கலம் ஏந்தி வள்ளி தெய்வானை சமேதரராய் வரு கின்றபோது, அடியார் உள்ளம் உருகும். கண் கள் நீர் சொரியும். தேர் என்றால் மும்மலம் அழிக்கும் தொழில் என்றல்லோ மகோற்சவ விளக்கம் கூறுகிறது.

ஆனால் நல்லூரில் மட்டும் தேரேற வருகின்றபோதுதான் அடியார்கள் கேட்டவரமெல் லாம் சண்முகப் பெருமான் கொடுக்கின்றதாக இருக்கின்றது.

இலட்சோப இலட்ச மக்கள் சண்முகப் பெரு மானை நோக்கி இருகரம் நீட்டி ஐயா! அருள் தருக என்று கேட்கின்றபோது,

சொந்தத் துயரும் சுயவேதனையுமே முன் னெழுந்து என் குறை தீர் என்று வேண்டுவதே இயல்பாகிறது.

ஆனால் இம்முறை எங்கள் சண்முகப் பெரு மான் தேரேறி வருகின்ற இவ்வேளை அவனி டம் ஒரு முக்கியமான கோரிக்கையை நாம் அனைவரும் ஒன்றாக முன்வைப்போம்.

முருகா நல்லூர்க் கந்தவேலா எம் தமிழர் துயர் தீர். எங்களுக்கு நல்லதோர் அரசியல் தலைமை கிடைக்க வழிசெய்.

அந்த அரசியல் தலைமை குழப்பமின்றி, சிக்கலின்றி, தெளிந்த மனத்தோடு, தூய சிந்தனையோடு தமிழ் மக்களின் பிரச்சினைகளை, தேவையை உணர்ந்து செயலாற்ற வழி செய்.

ஒட்டுமொத்தத்தில் தமிழர்களுக்கு ஏறுமுக மாக அரசியல் தலைமை அமைய வழி செய் என்று வேண்டுவோம்.

ஆம், சண்முக சுவர்ண மகா சபையில் தக தகவென பொன்னொளி பரப்பும் தங்க விமா னம் அமைத்த தமிழ் மக்களுக்கு நீ தருகின்ற உரிமை. எம் மனம் குளிர பொன்னொளி வீச, உலகம் முழுவதும் ஈழத் தமிழர் வாழ்வு மலர்ந்தது என்று கூற எங்களுக்கு உரிமை தா என்று வேண்டுவோம்.

இன்று தேரேறி வருகின்ற சண்முகனைச் சிக்கனப் பிடிப்போம். நிச்சயம் அவன் தருவான்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila