கடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மகிந்த மீண்டும் தனது பலத்தைக் காட்ட முயன்றிருக்கிறார். இவ்வாண்டு அவர் இவ்வாறு தன் பலத்தைக்காட்டுவது இது மூன்றாவது தடவை. கடந்த மே தினத்தன்று காலிமுகத்திடலை அவர் தனது ஆதரவாளர்களால் நிறைத்தார். அது ஒரு பிரமாண்டமான சனத்திரள். அதன்பின் கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் அவர் தன் பலத்தைக்காட்டியிருந்தார். இந்த வரிசையில் பார்த்தால் கடந்த புதன்கிழமை அவர் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டம் ஏறுமுகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அப்படி அமையவில்லை. கொழும்பிற்கு வெளியிலிருந்து ஆயிரக் கணக்கானவர்களை அவர்களால் திரட்ட முடிந்தது. அத்தொகை கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வரை வரலாம் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் இரவானதும் அதில் பலர் ஊருக்குத் திரும்பி விட்டார்கள். இரவுப் போராட்டத்தில் கிட்டத்தட்ட இருபதினாயிரத்திற்கும் குறையாத தொகையினரே பங்குபற்றியதாகக் கணக்கிடப்படுகிறது. நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு, விசேட உச்சநீதிமன்றம் போன்றவற்றை அவர்கள் முற்றுகையிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. அன்றைய இரவை உறங்கா இரவாக மாற்றப்போவதாக மகிந்த அணி அறிவித்திருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் போதையில் தடுமாறும் காட்சிகளும், வீதிகளில் வீழ்ந்து கிடக்கும் காட்சிகளும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டன.
இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இலங்கைத்தீவில் மட்டுமல்ல இந்தியாவிலும் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் தன்னியல்பாக நடப்பது குறைவு. மனோகணேசன் கூறுவது போல இது ‘அரப் ஸ்பிரிங்’ அல்ல. அரப் ஸ்பிரிங்கில் கூட மேற்கத்தைய முகவர்கள் பின்னணியில் இருந்தார்கள். எனவே செல்பி யுகத்தில் தன்னியல்பான எழுச்சிகள் என்று கூறப்படும் பல ஆர்ப்பாட்டங்கள் தன்னியல்பானவையல்ல. இவற்றில் பெரும்பாலானவை ஏற்கெனவே கிராம மட்டத்திற் காணப்படும் கட்சி வலைக்கட்டமைப்புக்களின் ஊடாக நன்கு திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்டவைதான். எத்தனை பேரைத் திரட்டுவது? எப்படித் திரட்டுவது? யார் திரட்டுவது? எப்படி ஒரு மையமான இடத்திற்கு கொண்டு வருவது? வாகன ஒழுங்குகளை யார் செய்வது? சாப்பாட்டை, சிற்றுண்டியை யார் ஒழுங்குபடுத்துவது? போன்ற யாவும் முன்கூட்டியே மேலிருந்து கீழ்நோக்கி செம்மையாகத் திட்டமிடப்படும். பங்குபற்றும் சாதாரண சனங்களை கவர்வதற்கு காசைக் கொடுப்பதா? மதுவைக் கொடுப்பதா? அல்லது வேறெதைக் கொடுப்பதா? போன்றவையும் நன்கு திட்டமிடப்படுகிறது. இது போன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு ஒரு பட்ஜட் இருக்கும். எவ்வளவு பேரைத்திரட்டுவது என்பதையும் பட்ஜட்டே தீர்மானிக்கின்றது.