இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து வந்த நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை எதிர்நோக்கிய தமிழகம் முழுதும் தற்போது பரபரப்பாக காணப்படுகின்றது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேருமே கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
கருணை அடிப்படையில் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இரண்டு முறை கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால், அவை இரண்டுமே நிராகரிக்கப்பட்டன.
இதனால் 7 பேரும் தங்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்கள். இதுகுறித்த விசாரணை ஒரு வருடத்திற்கும் மேலாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நீதிபதிகள் இது குறித்து தீர்ப்பினை வழங்கினார்கள். அதில், 7 பேர் விடுதலைக் குறித்து தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும், அதன் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் கூறி வழக்கையும் முடித்துவைத்தனர்.
இதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்கையில், அமைச்சரவையை கூட்டி விவாதித்து, சட்டநிபுணர்களின் ஆலோசனையும் பெற்று 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என கூறியிருந்தது. எதிர்க்கட்சிகளும் உடனடியாக அமைச்சரவையை கூட்ட வேண்டும் என கடந்த 2 தினங்களாக வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது. பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது.
இதனால் இவர்களின் விடுதலை குறித்து அமைச்சரைவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் தெரிகிறது. அதன்பின்னர், 7 பேரின் விடுதலை தொடர்பில் அறிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே நாளை கூடவுள்ள அமைச்சரவை கூட்டம் தமிழக வரலாற்றிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த கூட்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.