சமஷ்டி கேட்டு வந்தவர் சம்பந்தன்! சும்மா உள்ளே வந்தவர் சுமந்திரன்! பனங்காட்டான்

வணிகம் செய்வதற்கும் ஓடும் பேருந்துக்கும் எவ்வாறு பெயர்ப்பலகை அவசியமோ அப்படியே சமஷ்டிக்கும் அது அவசியம். இதற்கு மட்டும் எதற்காக பெயர்ப்பலகையை மறைக்க வேண்டும்? தமிழில் பேசுங்கள், ஆனால் தமிழன் என்று சொல்ல வேண்டாம் என்று கூறினால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

கொழும்பில் நடைபெறும் சிங்கள அரசியல் போராட்டம் அரசியல் மாற்றத்திற்கா அல்லது யாருக்கு வீதிகளில் செல்வாக்குண்டு என்பதைக் காட்டவா என்பது புரியாதுள்ளது.
ஐந்தாம் திகதி கொழும்பில் நடைபெற்ற மகிந்த அணியின் மக்கள் வீதியுலாவும் காணிவலும் அரசியல் திரட்சி கொண்டதாகக் காணப்படவில்லை என்பது பொதுநோக்கர்கள் கருத்து.
உணவுப் பார்சலும், மதுபானமும் பணமும் கொடுத்து ஆட்களை இறக்கியதாகவும், தமது மகன் நாமலை மேலெழுப்ப மகிந்த எடுத்த முயற்சியே இதுவென்றும் சில சிங்கள ஊடகங்கள் எழுதியுள்ளன.

இதனிலும் பார்க்க தமிழர் அரசியல் அரங்கம் அறிக்கைகளாலும், வார்த்தை ஜாலங்களாலும் அல்லாடிக் கொண்டிருக்கிறது.

இதன் நடுநாயகமாக இருப்பவர் சட்டம் படித்த, அதிகம் பேசும் ஆற்றலுள்ள கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன். இவர் தமிழரசுக்கட்சி என்று சொல்லப்படும் சமஷ்டிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்.

கடந்த வார இறுதியில் காலியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழர்கள் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகக் கேட்டுவரும் சமஷ்டிக் கோரிக்கை தொடர்பாக சுமந்திரன் தெரிவித்த இரண்டுவரிக் கருத்தே இதன் ஊற்று.

இந்த உரையை சுமந்திரன் தனிச்சிங்களத்தில் நிகழ்த்தியிருந்தார்.“எங்களுக்கு சமஷ்டி தேவையில்லை, மாகாணசபையில் ஒரு சின்ன மாற்றத்தை உருவாக்கினால் போதும்” என்பதே இவரது உரை.

இந்த உரை தற்போது இணையத்தளங்களில் எல்லோரும் கேட்கும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்க முடிந்தால் சுமந்திரன் இவ்வாறுதான் கூறினார் என்பது தெரியவரும்.
சுமந்திரனின் இந்த உரை ஊடகங்கள் வாயிலாக வெளிவந்த மறுகணமே, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் காரசாரமான அறிக்கையொன்றை வெளியிட்டார்.
“சமஷ்டி வேண்டாம் என்று சுமந்திரன் கூறுகிறார் என்றால், விரைவாக அரசாங்கத்தில் ஏதோ பதவியொன்றை அவர் எதிர்பார்க்கிறார் என்பதே அர்த்தம்” என்று தெரிவித்த முதலமைச்சர், தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்து, தமிழ் மக்களுக்கு சமஷ்டி வேண்டாமென்று கூறுவதன் ஊடாக, ஒற்றையாட்சியின்கீழ் சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிறுத்த சுமந்திரன் இணங்குகிறார் என்றும் சுட்டியுள்ளார்.

இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களில், சுமந்திரன் தமது உரை தொடர்பான மேலதிக விளக்கத்தை வழங்கியுள்ளார்.

“காலிக் கூட்டத்தில் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நான் எடுத்துக்கூறினேன். அப்படியானால் சமஷ்டியை மட்டும் தான் ஏற்பீர்களா என்று என்னிடம் கேட்கப்பட்டது. அப்போது, சமஷ்டி என்ற பெயர்ப்பலகை எமக்குத் தேவையற்றது  என்று கூறினேன் இதனையே தவறுதலாக சமஷ்டி எமக்குத் தேவையில்லை என்று கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன” என்று தாம் கூறியதை மறைப்பதற்காக ஊடகங்கள் மீது பழியைப்போட்டார் சுமந்திரன்.

சில மாதங்களுக்கு முன்னர் இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டமென்றிலும் யெர்ப்பலகை வேண்டாம் என்று சிங்களத்தில் கூறி, அதன் பின்னர் அதற்கு விளக்கம் அளித்து தப்பமுடிந்தது நன்றாக நினைவிருக்கிறது.

காலியில் நடைபெற்ற கூட்டத்தில் தாம் நிகழ்த்திய உரையைப் பிரசுரிப்பதற்கு முன்னர் ஓரிரு ஊடகங்கள் தம்முடன் தொடர்புகொண்டு சரியான விபரம் பெற்றதாகத் தெரிவித்துள்ள சுமந்திரன், ஆனால் மற்றைய ஊடகங்கள் பெயர்ப்பலகை வேண்டாம் என்பதைத் தவறாக சமஷ்டி வேண்டாம் என்று தெரிவித்ததாகக் கூறுபவர், ஊடகவியலாளர்களுக்கு அரிய ஆலோசனையையும் இலவசமாக வழங்கியுள்ளார்.

தமது உரையைப் பிரசுரிப்பதற்கு முன்னர் அது தொடர்பாக தம்மிடம் கேட்டுவிட்டு பிரசுரித்திருப்பின் நன்றாக இருந்திருக்கும் என்பதே இவரது ஆலோசனை.

காலியில் நடைபெற்றது பொதுக்கூட்டம; அங்கு நிகழ்த்தப்பட்ட உரையை ஊடகவியலாளர்கள் வழக்கம் போல செவிமடுத்திருப்பர். இப்போதுள்ள தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி உரையை ஊடகவியலாளர்கள் ஒலிப்பதிவு செய்வது வழக்கம். இப்படியான சூழ்நிலையில் எதற்காக உரையாற்றியவருடன் தொடர்புகொண்டு ‘இப்படியாகப் பேசினீர்களா’ என்று கேட்க வேண்டும்? அரசியல்வாதிகளின் குதர்க்கமான, மழுப்பலான பேச்சுகளை பிரசுரிப்பதால் ஊடகவியலாளர்களை குறைகூறக்கூடாது.

இது ஒருபுறமிருக்கட்டும். எதற்காக சமஷ்டி என்ற பெயர்ப்பலகை வேண்டாம் என்று சொல்ல வேண்டும்?

கேட்பது நேர்மையாக சமஷ்டி என்பதாக இருந்தால், அதன் பெயர்ப்பலகை சமஷ்டியாக இருப்பதில் என்ன தவறு?

நீதிமன்ற வாசலில் நீதிமன்றம் என்ற பெயர்ப்பலகையும், சிறைச்சாலையின் முன்னால் சிறைச்சாலை என்ற பெயர்ப்பலகையும்; இல்லை என்றால், அவைகளை எவ்வாறு அடையாளம் காணமுடியும்.

“நீங்கள் தமிழைப் பேசுங்கள; ஆனால் தமிழன் என்று வெளியில் சொல்லாதீர்கள்” என்று கூறுவது போலுள்ளது சுமந்திரனின் சமஷ்டி பெயர்ப்பலகை வேண்டாம் எனக்கூறும் கோரிக்கை.
சுமந்திரனின் கருத்துக்கு முதலமைச்சர் தெரிவித்த பதில் சுமந்திரனுக்கு சூடேற்றியிருக்க வேண்டும். அதனாற்தான் போலும், “விக்னேஸ்வரன் ஒரு தபாற்காரர்”; என்று கூறி எள்ளி நகையாடியுள்ளார்.

இவ்வாறு தாம்; கூறியதற்கு சுமந்திரன் பின்வருமாறு விளக்கம் கொடுத்துள்ளார்:

“மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் அவருக்காக நானே வாதாடினேன். சமஷ்டியை இவர்கள் கோரலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் பிரதியை கையில் எடுத்துக்கொண்ட முதலமைச்சர் தேரர்களிடம் சென்று சமஷ்டியை நாங்கள் கோரலாம் எனக்கூறினார். நான் வாதாடிப்பெற்ற தீர்ப்பை நல்ல தீர்ப்பென்று அன்று கூறியவர,; இன்று சம~;டி பற்றி போதிக்க முற்படுகிறார்” என்பது சுமந்திரனின் குற்றச்சாட்டு.
ஆத்திர மேலீட்டால் அதிகப் பிரசங்கித்தனமாக கருத்துகளை வீசித்தள்ளும் சுமந்திரனுக்கு, இரண்டு விடயங்களை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

1. முதலமைச்சர் மீது கடந்த இரண்டு வருடங்களாக சுமந்திரன் கடும் காய்ச்சலில் உள்ளார். சறுக்கிப்போன நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பின்னணி நாயகன் சுமந்திரனே. இதையெல்லாம் நன்கு தெரிந்தும், சமஷ்டித் தீர்வை ஆத்மசுத்தியாக விரும்பும் காரணத்தினால் மட்டுமே உயர் நீதிமன்ற தீர்ப்பின் பிரதியை முதலமைச்சர் தேரர்களிடம் எடுத்துச்சென்றார். இதனூடாக தெரியவருவது என்னவெனில், முதலமைச்சர் சமஷ்டி மீது பற்றுறுதியுடன் இயங்குகிறார் என்பதே. இதனை சுமந்திரன் சிந்தித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

2. யார் வாதாடி இந்த தீர்ப்பை பெற்றார் என்பது முக்கியமில்லை. ஏனெனில் சட்டத்தரணிகள் எப்போதும் நீதிமன்றில் தமது கட்சிக்காரரின் குரலாக இயங்குபவர்கள். நேற்றைய வழக்கொன்றில் கொல்லப்பட்டவர் சார்பில் ஆஜராகின்ற ஒரு சட்டத்தரணி, மறுநாள் மற்றொரு கொலை வழக்கில் கொலை செய்தவருக்காக வாதாடுவதைப் பார்த்திருக்கின்றோம். சடட்த்தரணி என்பவர் தனது கட்சிக்காரரின் குரலாக இயங்குபவரே தவிர, ஒரு கொள்கைக்காக எப்போதும் வாதாடுபவராக இருக்க முடியாது.

அடுத்ததாக முதலமைச்சரை தபாற்காரர் என்று கூறியதைப் பார்க்கலாம்.
ஈழத்தமிழரின் நாளாந்த வாழ்வியலில் தபாற்காரர் எனப்படுபவர் முக்கியமான வகிபாகத்தைக் கொண்டவர். நன்மை தீமையான விபரங்களை கடிதங்களே சுமந்துவரும். தமிழரின் வாழ்க்கை மணிஓடர் பொருளாதாரத்தில் தங்கியிருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. காலையில் தபாற்காரரை காணாதவரை பல வீடுகளில் சமையலே ஆரம்பமாகாது என்பது அந்த வாழ்க்கையை அனுபவித்தவர்களுக்கே தெரியும் அந்த வகையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழர் வாழ்வில் தபாற்காரர் எனும் முக்கிய பாத்திரத்தை வகிப்பது பெருமையே தவிர சிறுமையல்ல.
பங்காளிக் கட்சித்தலைவர்களுக்கு சமஷ்டி பற்றிய அறிவுண்டா என்ற கேள்வியையும் சுமந்திரன் எழுப்பியுள்ளார்.

சமஷ்டி தொடர்பில் தாம் கூறிய கருத்துகளை விமர்சிக்கும் அறிவு கூட்டமைப்பின் பங்காளிக்கட்சித் தலைவர்களுக்கு உள்ளதா என்று தனக்குத் தெரியவில்லை என்பது சுமந்திரன் எழுப்பியிருக்கும் முக்கியமான ஒரு கேள்வி (அவர்களுக்கு இல்லை என்றால் அந்தக் கூட்டமைப்பின் பேச்சாளராகவே தாம் இருக்கிறார் என்பதையிட்டு முதலில் சுமந்திரன் வெட்கப்பட வேண்டும்).

சுமந்திரன் கூறியது பற்றி சமஷ்டிக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வெளியிட்ட கருத்து நகைப்புக்கிடமானது.  சுமந்திரன் கூறிய கருத்துப்பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று மொட்டையாகத் கூறியுள்ளார். பாவம் மாவை, என்று சொல்வதைத் தவிர வேறென்ன கூறமுடியும்?
சமஷ்டி பற்றி எவரும் எமக்கு போதிக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளார் புளொட் தலைவர் சித்தார்த்தன்.

திம்பு பேச்சுவார்த்தையில் தாம் பங்குபற்றியதிலிருந்து, இப்போதைய அரசமைப்பு உபகுழுவொன்றின் தலைவராக கடமையாற்றுவது வரை விபரித்து, தமக்கு இதுபற்றி நன்றாகத் தெரியும் என்று கூறியுள்ள சித்தார்த்தன், சமஷ்டிக் கட்சியின் முன்னாள் நாடாளுமற்ற உறுப்பினர் வி. தர்மலிங்கத்தின் மகன் தாம் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்தியுள்ளார்.
ஆனாலும், கூட்டமைப்புக்குள் நின்று வாதாடி சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் முதுகெலும்பு இவரிடம் கிடையாது.

ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சமஷ்டிச் சர்ச்சை எதுவுமே தமக்கு தெரியாதது போல கெட்டித்தனமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

கூட்டமைப்பின் தலைவர் எனப்படும் சம்பந்தன் வழக்கம் போல கள்ள மௌன அப்பியாசத்தில் இருக்கிறார்.

சமஷ்டிச் சர்ச்சை வடமாகாணசபைத் தேர்தல் வரை நீளும் போலத் தெரிகிறது.
சமஷ்டிக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வந்த சம்பந்தனும், எதுவுமே கூறாது சும்மா உள்ளே வந்த சுமந்திரனும் அப்பாவித் தமிழ் மக்கள் நெற்றியில் கேள்விக்குறிபோட ஆரம்பித்துள்ளனர்.
தந்தை செல்வா கூறியது போல தமிழர்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியுமா என்பது கேள்விக்குறி!
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila