எதிர்க்கட்சித் தலைவரை நீக்குவதை விட தமிழர் தாயகத்தைப் பிரிப்பதற்கான வாக்கெடுப்பு

தமிழ் தேசிய இனம் நீண்ட காலமாக வாழ்கின்ற இந்த நாட்டிலே ஒரு தமிழன் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட இருக்க முடியாது என்கின்ற துவேச மனப்பாங்குடனேதான் சிங்கள பௌத்த இனத்துவேசம் கொண்ட அரசியல்வாதிகளின் நிலைப்பாடு காணப்படுகின்றது.
இது இந்த நாட்டிலே சிங்களவர்;களும் தமிழர்களும் இணைந்து வாழ முடியாது என்கின்ற நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி நிற்கின்றது. இதனால் தமிழர் தாயகத்தைத் தனியாக்கி தமிழர்களை தனியரசாக்குவதற்காக நாட்டைப் பிரிப்பதற்கான நடவடிக்கைக்கு சர்வதேசத்தின் துணையுடன் தமிழ் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு சிங்கள தேசம் முன்வர வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
பூநகரிப் பிரதேச சபை நடாத்திய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வும் புங்கதிர் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் பூநகரிப் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று (17.04.2018) காலை 10.00 மணிக்கு பூநகரி பிரதேச சபை தவிசாளர் அ.ஐயம்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றும் போது மேற்படி கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
அவர் தனது உரையில் மேலும் கூறுகையில்,
இந்த நாட்டிலே தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என பல்லினத்தவர்களும் நீண்ட கால வரலாற்றுப் பூர்விகப் பின்னணியுடன் வாழ்ந்துவருகின்ற போதிலும் தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் ஜனாதிபதியாக வரமுடியாது என்கின்ற பேரிவவாத, இனத்துவேச சிந்தனைகொண்டவர்களாக சிங்கள அரசியல்வாதிகள் பலர் காணப்படுகின்றார்கள். அந்நிலையேதான் அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து நீடித்துக் காணப்படுகின்றது.
நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் படி இரண்டாம் நிலையில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக் காணப்படுகின்றமையால் இலங்கையின் அரசியலமைப்பின்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செயற்பட்டு வருகின்றார். இரா.சம்பந்தன் அவர்கள் ஒரு தமிழன் என்கின்ற காராணத்தால் அவர் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது, நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து அவரைப் பதவி விலக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டுடன் தென்னிலங்கையிலுள்ள சிங்கள பேரினவாத சிந்தனை கொண்ட மகிந்த ராஜபக்ச தரப்பினர் முயன்று வருகின்றார்கள்.
இந்த நாட்டின் அரசியலமைப்பின் படி ஒரு தமிழன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியாது என்னும் மனநிலையினூடாக இந்த நாட்டின் அரசியலமைப்பானது சிங்களவர்களுக்கு மட்டும் உரித்துடையது தமிழர்களுக்குமானதல்ல என்பதையும் தமிழர்கள் பிரிந்து சென்று தமக்குரிய தாயகத்தில் தமிழர்களுக்கான தனியான ஒரு அரசியலமைப்பை உருவாக்கி வாழ வேண்டும் என்பதையே இது வலியுறுத்தி நிற்கின்றது. இதன் மூலம் இன நல்லிணக்கம் என்பது வெறும் வெளிப் பேச்சு என்பது வெளிப்படுகின்றது என்பதை எமது மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.
சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழர்களை அடிமைகளாக நோக்கி தமிழ் மக்களை நசுக்கி அவர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு தமிழர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதன் விளைவாகவே பெரும் பாதிப்புக்களையும் இழப்புக்களையும் தாங்கிக்கொள்ள முடியாது எமது தமிழ் இனம் கடந்த காலத்தில் அகிம்சை வழியில் போராடி அகிம்சை வழிப் போராட்டமும் பேரினவாதிகளால் ஆயத வழியில் அடக்கப்பட்டதன் விளைவாக அதனைத் தாங்கிக்கொள்ள முடியாது நாம் ஆயுத வழியில் போராடினோம். எமது ஆயுத வழிப் போராட்டம் எமது உரிமைகளை பெற்று நாமும் இந்த நாட்டிலே எமது தாயகப் பகுதிகளில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்கானதே தவிர பெரும்பான்மை இனத்தின் மீது வெறுப்புக் கொண்டு அவர்களின் உரிமைகளைப் பறிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதல்ல. எமது ஆயுத வழிப் போராட்டமும் நியாயமானதே.
எதிர்க்கட்சித்தலைவர் பதவியை பறித்தெடுத்தல் என்பது தமிழ் மக்களுக்கு சாதகமானது. பாராhளுமன்ற ஜனநாக சம்பிரதாயங்களின் படி அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்ததன் காரணமாக மூன்றாவது பெரும்பான்மையைக்கொண்டதமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு பாராளுமன்ற நடைமுறையின் பிரகாரம் எதிரக்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது.
அவ்வாறு ஒரு தமிழர் எதிர்க்கட்சித்தலைவராகக் கூட இருக்கக்கூடாது என சிங்கள பௌத்த பேரினவாதிகள் சிந்திப்பார்களானால் இந்த நாட்டிலே தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழமுடியாது என்பது தெளிவாக புலப்படுத்தப்படுகிறது.
ஏனவே எதிர்க்கட்சித்தலைவரை பதவியில் இருந்து நீக்குவதை விட வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் மக்களிடம் சிங்களவர்களுடன் இணைந்து வாழ முடியுமா? முடியாதா? என்பதற்கான சர்வஜனவாக்கெடுப்பை நடாத்த இலங்கை அரசு முpன்வரவேண்டும். இதனை சர்வதேச சமூகமும் ஊக்குவிக்க வேண்டும்.
ஏனெனில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகெலைக்கு இதுவரை நீதி கிடைக்காத நிலையில் யுத்தம்  நிகழ்ந்தபோது இலங்கை அரசிற்கு ஆதரவு வழங்கிய நாடுகள்  கடந்த 70 ஆண்டுகளாக தமிழர்கள் ஏமாற்றப்படுவதைப் புரிந்து ஒரு சர்வஜன வாக்கெடுப்பினூடாக தமிழர்களுக்கான தனியரசு உருவாக வழிசமைக்க வேண்டும். அது தான் இன்றைய காலத்தின் நேரடியான அரசியல் தீர்வாக அமையும் என்றார்.
இந்நிகழ்வில் பூநகரிப் பிரதேச சபை உறுப்பினர்கள், கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பூநகரிப் பிரதேச சபைச் செயலாளர், பூநகரிப் பிரதேச செயலாளர் உத்தியோகத்தர்கள் பாடசாலை அதிபர்கள் மற்றும் மாணவர்கள் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila