முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை: மீனவர்கள் பாதிப்பு!


முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு ஒர் நிரந்தரமான தீர்வைப்பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 250 இற்கும் மேற்பட்ட படகுகள் சட்டவிரோதத்தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி கரைவலையிழுத்தல், மற்றும் தடைசெய்யப்பட்ட தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றசெயற்பாடுகள் அதிகரித்து வருவதனால் தமது தொழில் முழுமையாகப்பாதிக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 72 படகுகளுக்கு மாத்திரம் தொழிலுக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 250 இற்கும் மேற்பட்ட படகுகள் சட்டவிரோதமான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, செம்மலை கிழக்கு, நாயாறு, வெலிஒயா (மணலாறு) போன்ற பகுதிகளிலும் அதிகளவான சட்டவிரோத தொழில்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த சட்டவிரோததொழில் அனைத்தும் பொலிஸாரினதும் கடற்தொழில் திணைக்களம் மற்றும் இராணுவத்தினரின் துணையுடனேயே மேற்கொள்ளப்படுவதாகவும் இவ்வாறான ஒத்துழைப்புக்களால் இதனைக்கட்டுப்படுத்த முடியாதிருப்பதாகவும் பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.
தற்போது உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி கரைவலைத் தொழில்கள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த பெப்ரவரி 26 ம்திகதி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர், வடமாகாண விவசாய மற்றும் கடற்தொழில் அமைச்சர், மாகாணசபை உறுப்பினர், ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து இவ்வாறு சட்டவிரோதத் தொழில்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila