கொக்குவில் - குளப்பிட்டிப் பகுதியில், கடந்த 2015ஆம் ஆண்டு பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் மது போதையில் இருக்கவில்லை என்பது பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இருவரும் மது போதையில் இருந்தனர் என பொலிஸார் குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே பிரேத பரிசோதனையில் அவர்கள் மது அருந்தவில்லை என்பது அம்பலமாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி யாழ். கொக்குவில் பகுதியில் மாணவர்கள் பயணம் செய்த மோட்டார்சைக்கிள் வீதியை விட்டு விலகி மதிலில் மோதியதனால் மரணங்கள் சம்பவித்துள்ளதாக 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி பொலிஸார் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதனை தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டனர்.இதனையடுத்து மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்ற சுலக்சன் என்ற மாணவன் குடிபோதையில் பொலிஸாரின் உத்தரவினை மீறி மோட்டார் சைக்கிளை செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டதால், காப்புறுதி நட்டஈடும் அவருக்கு கிடைக்கவில்லை.
வாகனத்தை நிறுத்தாது சென்றதனால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸார் குற்றம் சுமத்திய போதிலும், சுலக்சனின் நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கி சன்னம் காணப்பட்டதாக பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டினால் நெஞ்சுப் பகுதியின் பிரதான ரத்த நாளத்தில் காயம் ஏற்பட்டதனால் சுலக்சன் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட பல காயங்களினால் நடராஜா கஜன் என்ற மாணவன் உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருவரும் மதுபானம் அருந்தியிருக்கவில்லை என்பது பரிசோதனைகளில் நிரூபணமாகியுள்ளது.
இரண்டு மாணவர்களின் உடல்களிலும் பல்வேறு வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த உயிரிழந்த மாணவர்களின் பிரேதப் பரிசோதனைகளை மருத்துவர் மயூரதன் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.