தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், மாநகர சபையின் அமர்வுகளில் பங்கேற்க் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இறுதித் திர்ப்பு வழங்கப்பட முன்னர் இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக மணிவண்ணன் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் இலக்கம் 19 சென் பற்றிக்ஸ் வீதி குருநகர் பிரதேசத்தில் வசிக்கும் ஸ்ரிபன்சன் றொனால்டன் என்ற வாக்காளர் மணிவண்ணனிற்கு எதிரான இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் இந்த மனுதாரரின் சார்பில் முன்னிலையாகி வாதாடினார்.
மணிவண்ணன் யாழ் மாநாகர எல்லைக்குள் வசிப்பதில்லை என்றும் கொக்குவில் பிரதேசத்தில் வாழ்வதால், அவருடைய வாக்காளர் பதிவும் அங்குதான் இருப்பதாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், யாழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்யக்கூடிய ஏற்பாடுகள் இருந்தும், கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதன் நோக்கம் என்ன கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்த மனுவை, சென்ற வியாழக்கிழமை விசாரணை செய்த கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அர்ச்சுன ஒபயசேகர, பத்மன் சூரசேன ஆகியோர் யாழ் மாநகர சபையின் அமர்வுகளில் மணிவண்ணன் பங்கேற்க இடைக்காலத் தடை விதித்தனர்.
இந்தத் தடை உத்தரவில், இறுதித் தீர்ப்பும் மாநகர சபையின் அமர்வுகளில் மணிவண்ணன் பங்கேற்க நிரந்தர தடைவிதிக்கப்படும் என்றே கூறப்பட்டுள்ளது.
ஆகவே, இந்தத் தீர்ப்பில் சட்டப்பிழைகள் இருப்பதாக காண்டீபன் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கவுள்ளது.
ஆனால் இறுதித் திர்ப்பு வழங்கப்பட முன்னர் இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக மணிவண்ணன் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்துள்ளார்.
இடைக்காலத் தீர்ப்பு ஒன்றில் இறுதித் தீர்ப்பும் இவ்வாறுதான் அமையும் என குறிப்பிட முடியாது என்றும் அதுவும் ஒருவருடைய பதவி நிலைசார்ந்த இடைக்கால தடை உத்தரவுகளில் அவ்வாறு கூற முடியாதென்றும் காண்டீபன் தெரிவித்தள்ளார்.
மூத்த சட்டத்தரணி ஒருவரின் ஆலோசனையுடன் எதிர்மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2017ஆம் ஆண்டு வாக்காளர் பதிவில், மணிவண்ணன் யாழ். மாநகரசபை எல்லைக்குள் வசிக்கவில்லை என்று மனுதார் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தமை தெரிந்ததே.