சீ.வீ.கே புண்ணியத்தில் வைகுண்டத்தில் தவராசா?

அடுத்த தேர்தலில் தமக்கு வழி அமைக்க சி.தவராசா என்னைச் சீண்டுகின்றார். முதலில் தனக்கு வாக்களிக்கப் போகும் மக்களிடம் சென்று அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றட்டும்.அவர்கள் நன்மதிப்பைப் பெறட்டும். என்னுடன் மோதி மக்களின் நன்மதிப்பைப் பெறலாம் என்று அவர் நினைத்தால் அது அவரின் பகல் கனவாகுமென பதிலடி வழங்கியுள்ளார் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மாகாணசபையை நடத்த வலுவற்ற முதல்வர் வடக்கில் வன்முறையை எப்படி அடக்குவார் என கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் தன் கட்சி தன்னை எதிர்க்கட்சிப் பதவியில் இருந்து நீக்கியும் அவர் தொடர்ந்து அந்தப் பதவியில் இருக்கின்றாரே அது போல்த்தான் முடியாது என்று எதுவும் இல்லை. 
காவல்துறையுடனும் நீதியுடனும் தொடர்புடையவன் நான். குற்றவாளிகள் சம்பந்தமாக தொழில் ரீதியாக நான்பல வருடகாலம் செயற்பட்டவன். இப்பொழுது கூட பல தடயங்கள் எனக்குத் தரப்பட்டுள்ளன. ஆனால் வேலிகள் பயிரை மேய விடக் கூடாது. சட்ட ஒழுங்கு எனக்குப் பரீட்சயமான ஒரு துறை. ஆனால் அதற்கு அதிகாரம் கையில் இருக்க வேண்டும். அதிகாரம் கையில் இல்லாமல் எம்மால் செயலாற்ற முடியாது.

எமது அதிகாரங்களை மற்றவர்கள் மடக்கிப் பிடித்ததால்த்தான் நாங்கள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளோம். 

எதிர்க்கட்சித் தலைவர் மாகாணசபைச்சட்டத்தில் உள்ள அதிகாரங்களை மட்டும் படித்துவிட்டு பத்திரிகைகளுக்கு ஒப்புவித்தால் அது போதாது. மற்றைய சட்டங்கள் எவ்வாறு மாகாணசபையை வளைத்துப் பிடித்து செயலற்றதாக்கின்றன என்பதையும் அவர் உணர வேண்டும். உதாரணத்திற்கு உள்ளூராட்சியின் முன்னேற்றம் நகர அபிவிருத்தி அதிகாரசபையால் கட்டுப்படுத்தப்படுகிறது. 

காணிகள் மீது எமக்கிருக்கும் உரித்துக்களை மகாவலிச்சட்டம் நலிவடையச் செய்துள்ளது. 

மாகாணப் பாடசாலைகளின் முன்னேற்றங்கள்தேசியப் பாடசாலைகளை வைத்து அவற்றுள் உள்நுழைந்து கட்டுப்படுத்தப்படுகின்றன. 
எமது வைத்தியசாலைகளின் முன்னேற்றம் தேசிய வைத்தியசாலைகள் ஊடாக மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படுகின்றன. சுகாதார அதிகாரியின் நிர்வாகம் கூட மாகாணத்திற்கு வழங்கப்படவில்லை. 

மாகாணப் பொது நிர்வாகம் கூட ஆளுநரின் நிறைவேற்று அதிகாரங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதிருந்த தவராசா வானம் ஏறி அவைத்தலைவர் ஆசியினால் வைகுண்டத்திலேயே இப்பொழுது காலம் கழிக்கின்றார் என்பதை மறந்து விட்டார். 

நண்பருக்கு தெரிந்தவை பற்றி அல்லது அவருக்கு வேண்டியவை பற்றி அவர் பேசுகிறார். அவை அவருக்குக் கிடைகாததால் எம் மீது கோபம் கொள்கின்றார். முழு வட மாகாண நிர்வாகத்திலும்அவருக்கு நன்மை தரும் விடயங்களைத்தான் நாங்கள் இதுகாறும் கவனித்திருக்க வேண்டும் என்று எண்ணுகின்றார். அவை செய்யப்படாவிட்டால் எமது செயற்பாடு செயற்றிறம் அற்றது என்கிறார். 

தப்பித்தவறி அவர் முதலமைச்சராக வந்தால் (கடவுள் அதனைத்தடை செய்வாராக!)அவ்வாறான நடவடிக்கைகளில்த்தான் ஈடுபடுவார் என்று தெரிகின்றது. அபிவிருத்தித் திட்டங்களை நான் தான் இங்கு கொண்டு வந்துவிட்டேன் என்று மார்தட்டிக்கூறி அரியாசனத்தில் இருப்போரின் அடியை ஆசையுடன் பற்றிச் செயற்படுவார் போல்த் தெரிகின்றது. உரிமைகள் இல்லாமல் உதவியை நாடுவது எம் உருக்குலைவுக்கு வழிவகுக்கும். 

அவர் கூரை மேல் ஏறி குறை கூறி பிழை பிடிப்பவர் எப்பொழுதும் குதர்க்கமாகவே பேசுவார். நாம் எதுவும் செய்ய முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila