மூன்று தினங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி அவர்களால் கூட்டப்பட்ட 48 பேர் கொண்ட கூட்டத்தில் மிக்க மனவருத்தத்துடன் கலந்து கொள்ளாது விட்டேன். அதற்கு என்னால் அரசியல் ரீதியாகத் தெரிவிக்கப்பட்ட கருத்து தெற்கானது எங்களை நாங்களாக வாழ உதவி புரிய வேண்டும் என்பதேயென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் “இலங்கை முயற்சியாண்மை” தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று காலை யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டப்பத்தில் நடைபெற்றிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பங்கெடுத்த நிகழ்வில் உரையாற்றி முதலமைச்சர் இலங்கை ஜனாதிபதிக்கு நீங்களாக முடிவெடுத்து எம்மை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காதீர்கள் என்பதையே அவருக்கு சுட்டிக் காட்டினேன்.
சந்திரிக்கா அம்மையாருக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த கௌரவ டி.பி.விஜயதுங்க அவர்கள் சிங்கள மக்கள் மரமென்றால் சிறுபான்மையோர் அதைச் சுற்றி வளரும் கொடி போன்றவர்களாக வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என்றார். அந்தக் கருத்துடன் எமக்கு ஏற்பில்லை. எம்மையும் சிறு மரங்களாக நாம் விரும்பும் விதத்தில் வாழ வழி வகுத்துத் தாருங்கள் என்பதே எமது கோரிக்கை. இன்று சந்திரிக்கா அம்மையார் இந்த நிகழ்வில் இங்கு பங்குபற்றி எம்மை ஊக்குவிக்கின்றார் என்றால் அவரின் கருத்துக்களும் மேலிருந்து எமக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆணை இடுவதை விட்டு கீழிருந்து நாம் செய்வதை உன்னிப்பாக கவனித்து எம்மை உயர்வடைய வைக்க அவர் ஆயத்தமாக இருக்கின்றார் என்று அர்த்தம்.
அதைத்தான் நாங்கள் அரசியலிலும் வேண்டி நிற்கின்றோம். எமக்கென சுயாட்சி தந்து எம்மை நாமாகத் திறம்பட விருத்தியடைய வைக்க உதவ வேண்டும் என்று கேட்கின்றோம்.
சுயாட்சி தந்து எம்மை நாமே ஆள விடுங்கள் என்று அரசியலில் நாம் கோருகின்றோம். நீங்கள் மத்தியில் இருந்து தாய்க் கோழி குஞ்சுகள் வளர்வதைப் பக்குவமாய்ப் பார்த்து வருவது போல் எங்களைப் பார்த்து வாருங்கள் என்றே எமது அரசியல் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றோம்.
இன்று தொழில் முயற்சியாண்மையை ஆதரிக்கும் நீங்கள் அரசியலிலும் எமது முயற்சியாண்மையை ஆதரிக்க முன்வர வேண்டும். நாங்கள் பிரிந்து சென்று விடுவோம் என்ற கருத்துக்கு இடமில்லை. ஏனென்றால் மத்தி தாயாக வாழ எத்தனித்தால் மாகாணங்கள் தனையர்களாகவே இருக்க ஆசைப்படுவார்கள். குபேக்கைப் பாருங்கள்! “ஆங்கிலக் கனடாவை விட்டு பிரான்சியர்களான நாம் பிரிந்து செல்ல மாட்டோம்” என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.
ஆகவே “இலங்கை முயற்சியாண்மை” என்ற சிறுதொழில், மத்திமதொழில் முயற்சியாளர்களுக்கு உதவி வழங்கி ஊக்குவிக்கும் இந்த செயற்பாடு மேலும் மேலும் வளர்ச்சியடைந்து எமது மக்களை சுயகௌரவத்துடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ வழி வகுக்க வாழ்த்துகின்றேன். அதே வாழவைக்கும் இந்தக் கருத்தை எமது அரசியல் யாப்பிலும் உள்ளடக்கி பிராந்திய சுயாட்சியை உத்தரவாதப்படுத்த அம்மையார் அவர்கள் முன்வர வேண்டும் என்று அவரை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். அவரே முதன் முதலில் பிராந்தியங்களின் ஒன்று கூடிய நாடே இலங்கை என்ற கருத்தை 2000 மாம் ஆண்டளவில் எமது அரசியலில் முன்வைத்தவரெனவும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.