முல்லைத்தீவு, குருந்தூர் மலை பகுதியல் இன்றைய தினம் பௌத்த பிக்குமார்கள் இணைந்து விகாரை அமைக்க முற்பட்ட பகுதி தமிழர் பூர்வீகமாக வாழ்ந்த பகுதி எனவும் அப்பகுதியில் தொண்மையான இந்து ஆலயம் ஒன்று உள்ளது எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலக பகுதிக்கு இடைப்பட்ட குருந்தூர் மலைப்பகுதியில் பௌத்த விகாரையும், சிங்கள குடியேற்றமும் அமைக்க முற்பட்டமையால் இன்றைய தினம் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன்,
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட குருந்தூர் மலை பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதியாக காணப்பட்டதுடன் குருந்தூர் மலைப் பகுதியில் மிகவும் தொண்மையான இந்து ஆலயம் ஒன்றும் உள்ளது.
இதில் நீண்ட காலமாக தமிழர்கள் வழிபட்டு வருகின்றனர்.கடந்த யுத்த சூழலால் இங்கு வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர். இந்தப் பிரதேசத்தில் மக்கள் மீள்குடியேறி வருகின்றனர்.
இதனைச்சூழவுள்ள பகுதிகளில் தொன்று தொட்டு தமிழர்கள் வாழ்ந்த இடமென்பதுடன், பாடசாலை மற்றும் பழைய கட்டடங்கள் என்பனவும் இருக்கின்றன, நல்லாட்சி என்று சொல்லுகின்ற இக்காலத்தில் இரகசியமான இரண்டு பௌத்த பிக்குகள் உட்பட 12 சீமெந்து மற்றும் புத்தர் சிலை போன்றவற்றையும் கொண்டு வந்ததுடன், குறித்த பிரதேசத்தில் முகாம் அமைத்திருப்பதற்கான சகல ஏற்பாடுகளுடனும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் எனத்தெரிவித்து இன்றைய தினம் இவர்கள் வந்திருந்தனர்.
பொதுமக்கள் ஒன்று திரண்டு தண்ணி முறிப்பிலிருந்து தண்டுவான் வீதியில் வைத்து இவர்களை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு தமிழர்களின் நிலங்கள் இரகசியமான முறையில் ஆக்கிரமிக்கின்ற செயற்பாடுகள் தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.